For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிறந்தது 'விரோதி' ஆண்டு

By Staff
Google Oneindia Tamil News

தமிழுக்கு ஆண்டுகள் அறுபது. அதில் 23வதாக வருவதே விரோதி ஆண்டு.

சித்திரை முதல் பங்குனி வரையிலுமான 12 மாதங்களை ஒரு தமிழ் ஆண்டாக முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

நேற்று வரை இருந்த சர்வாதிகாரி ஆண்டு முடிந்து இன்று முதல் விரோதி பிறந்துள்ளது.

விரோதி வருடத்தை செழிப்பான ஆண்டாக கூறுகிறார்கள். காரணம், விரோதி ஆண்டில் மழை நன்கு இருக்கும், விளைச்சல் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் மேம்படும் என்பது பொதுவான ஐதீகம்.

தமிழகத்தின் பாரம்பரிய பண்டிகைகளில் இந்த தமிழ்ப் புத்தாண்டும் ஒன்று. இருப்பினும் சித்திரை முதல் நாள் என்பதை தை முதல் நாளன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என தமிழக அரசு அறிவித்து சட்டமும் இயற்றியுள்ளது.

எனவே இந்த சித்திரை முதல் நாளை மக்கள் சித்திரைத் திருநாளாக கொண்டாடுகின்றனர். இருப்பினும் கூட பலரும் 'ஹேப்பி நியூ இயர்' என சுத்தமான ஆங்கிலத்தில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்ளத் தவறவில்லை.

உலகத் தமிழர்கள் மத்தியில் சித்திரைக்கு தனி மரியாதை உண்டு. இந்த சித்திரையில்தான் சுப காரியங்களை செய்வதில் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆண்டின் முதல் மாதம் என்பதால் சித்திரைக்கு தனி அந்தஸ்தும் உண்டு.

சித்திரை திருநாளை முன்னிட்டு வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டு நன்றாக அலங்கரிக்கப்படுகின்றன. வீட்டின் முன்பகுதியை பெருக்கி, தண்ணீர் தெளித்து அரிசி மாவால் அழகிய கோலமிடுவார்கள்.

தீமைகள் நீங்கி, புதிய நன்மைகள் பிறக்கும் நோக்கத்தில் தெய்வங்களை மக்கள் வணங்குகின்றனர்.

இந்த நாளில் சிறியவர்களுக்கு பெரியவர்கள் புத்தாடை வழங்குவர். பெரியவர்களில் காலில் விழுந்து சிறியவர்கள் ஆசி பெறுவது வழக்கம். மேலும் வடை பாயாசத்துடன் விருந்து சமைக்கப்படும். இதில் வேப்பம் பூ பச்சடி தவறாமல் இடம் பெறும்.

இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கசப்பு, இனிப்பு கலந்துள்ள இந்த வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை வேப்பம் பூ பச்சடி வெளிப்படுத்துவதாக ஐதீகம் உள்ளது.

உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்வது, பூஜைகள் செய்வது, கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வது போன்றவை சித்திரை திருநாளில் பாரம்பரியமாக செய்யப்படும் நிகழ்ச்சிகளாகும்.

மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சித்திரை முதல் நாளை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

தமிழர்கள் மட்டுமல்லாது மலையாளிகள், சிங்களர்கள் ஆகியோருக்கும் இன்று புத்தாண்டு தினமாகும்.

மலையாளிகள் இந்த நாளை விஷு என அழைத்து கொண்டாடுகின்றனர்.

கிட்டத்தட்ட தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஒன்றாகவே இருக்கிறது. சற்று விசேஷமானது என்னவென்றால் விஷுக் கனி-தான்.

பல வகை பழங்களையும், நகைகள், பூஜை பொருட்கள், துணிகள், தேங்காய், வெள்ளிக் கோப்பை உள்ளிட்டவற்றை வரிசையாக வைத்து வழிபடுகிறார்கள். எழுதப்பட்ட பனை ஓலை போன்றவை வரிசையாக வைக்கப்பட்டு இருக்கும். இதை விசுக்கனி என்று அழைக்கிறார்கள்.

இதை முதல் நாளே தயாரித்து வைத்து கடவுள் முன் படைப்பார்கள். 14ம் தேதி புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் எழுந்து குடும்பத்தோடு இதைப் பார்த்து தரிசனம் செய்து வணங்குவார்கள்.

இதை விஷு தரிசனம் என்று அழைக்கிறார்கள். இப்படிச் செய்தால் அந்த ஆண்டு சிறப்பாக தொடங்கும் என்பது நம்பிக்கை.

விஷு பண்டிகையின் இன்னொரு முக்கிய அம்சம் சத்யா எனப்படும் பல வகை பழங்கள் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்படும் விருந்தாகும்.

இந்த ஆண்டும் வழக்கம் போல தமிழர்களும், மலையாளிகளும் தங்களது ஆண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று தமிழ்ப் புத்தாண்டுக்கென தமிழக அரசு விடுமுறை அளிக்கவிட்டாலும் கூட, டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று என்பதால் அதையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் சித்திரை முதல் நாளை வழக்கம் போல உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X