For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழ்க்கைக்கு துடிக்கும் பாகிஸ்தானின் பார்வையற்ற டால்பின்கள்

By Staff
Google Oneindia Tamil News

Blind dolphins
இஸ்லாமாபாத்: அரிதாகி வரும் பார்வையற்ற டால்பின்களை மீட்டு காக்கும் முயற்சியில் பாகிஸ்தான் மீனவர்கள், அந்நாட்டு வனத்துறையுடன் சேர்ந்து களம் இறங்கியுள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து நதியில், டால்பின்கள் அதிகம் உள்ளன. இந்த டால்பின்களுக்கு பார்வை சக்தி கிடையாது. காரணம் அவற்றின் கண்களில் லென்ஸ் கிடையாது.

ஒரு காலத்தில் சிந்து நதியை எழில் கொஞ்சும் நதியாக காட்டியவை அங்கு துள்ளித் திரிந்த இந்த டால்பின்கள்தான். ஆனால் ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதாலும், நீர் மாசுகேட்டாலும் பார்வையற்ற டால்பின்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது.

கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு இவை போயுள்ளன. தேவையான உணவும் கிடைப்பதில்லை. நீர்மட்டமும் குறைந்து வருவதால் டால்பின்கள் விரைவில் முற்றாக அழிந்து போகும் நிலை.

2006ம் ஆண்டின் கணக்குப்படி சிந்து மாகாணத்தின் சுக்கூர் அருகே உள்ள சிந்து நதியில் 900 டால்பின்களும், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சி்நது நதியில் 300 டால்பின்களும் இருந்தன.

இந்த வகை டால்பின்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கும் முயற்சியில், அங்குள்ள மீனவர்கள், வனத்துறை உதவியுடன் இறங்கியுள்ளனர்.

இப்பணியில் ஈடுபட்டு வருபவர்களில் ஒருவர் 47 வயதாகும் நஸீர் மிரானி. இவர் ஏகப்பட்ட டால்பின்களை மீட்டு வனத்துறையிடம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மிரானி கூறுகையில், இவைகளை எனது பிள்ளைகளைப் போலவே நான் பார்க்கிறேன். எங்காவது டால்பின் சிக்கி விட்டதாக தகவல் கிடைத்தால் உடனே போய் காப்பாற்றி மீட்டு வருகிறேன்.

இந்த டால்பின்களை நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். இவை குறித்து என்னை விட விவரம் அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. நான் படகில்தான் பிறந்தேன். மீன்களுடன்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போது டால்பின்களையும் எனது பிள்ளைகளை கருதுகிறேன் என்கிறார் நஸீர்.

சிந்தி மொழியில் புல்ஹான் என்று டால்பின்களை அழைக்கிறார்கள். பார்வையற்றதாக இந்த டால்பின்கள் இருப்பதற்கு இப்பகுதியில் ஒரு கதையைச் சொல்கிறார்கள்.

அதாவது பாலூட்டும் இளம் தாய் ஒருவரை துறவி ஒருவர் ஒருமுறை அணுகினார். தான் பசியோடு இருப்பதாகவும், சற்று பால் தந்து உதவுமாறும் அவர் கேட்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் பால் தர மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த முனிவர், அந்தப் பெண்ணை சபித்து, சிந்து நதியில் தூக்கிப் போட்டு விட்டார்.

ஆற்றில் விழுந்த அப்பெண் டால்பினாக மாறினார். ஆனால் பார்வை இல்லையாம். அன்று முதல் அந்த ஆற்றில் நன்னீர் உயிரினங்களும் தோன்றினவாம். இதுதான் அந்தக் கதை.

ஆண் டால்பின்கள், பெண்களை விட சிறியவை ஆகும். பெண் டால்பின்களின் எடை 110 கிலோ உள்ளது. 2.5 மீட்டர் நீளத்திற்கு வளரும் தன்மை கொண்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிந்து வெளியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் சுதந்திரமாக நீந்தித் திரிந்தனவாம். ஆனால் இங்கிலாந்துக்காரர்கள் இங்கு வந்து ஏகப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களைப் போட்டு நீரின் அளவை ஆங்காங்கே தடுத்து நிறுத்தியதாலும், நீர் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களாலும், ஆறு மாசடைந்து, நீர் இருப்பு குறைந்து இப்போது டால்பின்கள் அருகிப் போய் விட்டன.

இடை இடையே இருக்கும் அணைக்கட்டுகள்தான் டால்பின்களுக்கு பெரும் எமனாக மாறியுள்ளன. இதனால் டால்பின்களால் சுதந்திரமாக போக முடியவில்லை.

முன்பு 3500 கிலோமீட்டர் தூரத்திற்கு இவை நீந்திச் செல்லுமாம். ஆனால் தற்போது 900 கிலோமீட்டர் தொலைவுக்குத்தான் இவை நீந்துகின்றன என்கிறார் சிந்து வனவிலங்கு காப்புத் துறை அதிகாரி ஹூசேன் பக்ஸ் பகத்.

சி்ந்து நதியில் உள்ள பல்வேறு நீர்ப்பாசன கால்வாய்களில் ஆண்டுக்கு 50 டால்பின்கள் வரை சிக்கிக் கொள்கின்றன. இவற்றைப் பிடிக்கும் மீனவர்கள் கொன்று விடுகின்றனர்.

ஆனால் தற்போது விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீனவர்கள், இதுபோல கால்வாயில் சிக்கிக் கொள்ளும் டால்பின்களை பத்திரமாக மீட்டு வன விலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கின்றனராம்.

ஆனால் வன விலங்கு அதிகாரிகளிடம் ஜீப் பற்றாக்குறை உள்ளது. ஒரே ஒரு ஜீப்தான் உள்ளதாம். அதில் ஒரு பெரிய நீர்த் தொட்டியை வைத்துள்ளனர். ஒரு சமயத்தில் ஒரு டால்பினைத்தான் அதில் போட முடியும். அந்த மீனைக் கொண்டு போய் ஆற்றில் விட்டு விட்டு திரும்பினால்தான் அடுத்த டால்பினைக் கொண்டு போக முடியும்.

இந்த சீசனில் 50 டால்பின்களை மீட்டு ஆற்றில் விட்டுள்ளதாக கூறுகிறார் பக்ஸ் பகத்.

2006ம் ஆண்டு பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு சர்வேயை எடுத்தது. அதில் ஒரு முக்கியமான வார்த்தையைக் குறிப்பிட்டு முடித்திருந்தனர்.

அது இதுதான்,

பாகிஸ்தான் டால்பின்கள் மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒன்றுதான். அது ஆரோக்கியமாக வாழ்வதற்கு தூய்மையான, சுகாதாரமான தண்ணீர்தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X