For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் பெருமை: உலகறியச் செய்த அண்ணா- பொள்ளாச்சி மகாலிங்கம்

By Staff
Google Oneindia Tamil News

Pollachi Mahalingam
சென்னை: தமிழ், தமிழர் பெருமையை அனைவரும் உணரச் செய்தவர் அண்ணா என்று தொழிலதிபர் 'அருட்செல்வர்' பொள்ளாச்சி நா. மகாலிங்கம் கூறினார்.

தினமணியின் அண்ணா நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா சென்னையில் மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கில் நடந்தது.

மலரை பொள்ளாச்சி நா. மகாலிங்கம் வெளியிட முதல் பிரதியை அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த செ.மாதவன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நா. மகாலிங்கம் பேசுகையில்,

அண்ணா நூற்றாண்டு மலரை தினமணி சிறப்பாகத் தயாரித்துள்ளது. தமிழ், தமிழர் பெருமையை அனைவரும் உணரச் செய்தவர் அண்ணா.

திராவிட நாடு மற்றும் மொழி தொடர்பான ஆய்வுகளை நாம் முறையாகச் செய்யவில்லை. மொகஞ்சதாரோ நாகரிகத்தை 15,000ஆண்டுகளுக்கு முந்தையது என்றார்கள். தற்போது அறிவியல் பூர்வமான ஆய்வுகளின்படி லெமூரியா கண்டம் 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தது என்று பிராங்க் ஜோசப் என்ற ஆய்வறிஞர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் தமிழ்மொழி, திராவிட நாடு ஆகியவை மறு சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்கான கட்டுரைகளை தினமணி வெளியிட்டால் அதன் பின்னர் பல்கலைக்கழகங்கள் இந்தப் பணியை தொடரும் என்றார்.

செ. மாதவன் பேசுகையில்,

காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வளர்ந்தவர்கள்தான் திமுகவினர். ஆனால், காங்கிரஸ் உள்பட எல்லா கட்சியினரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர் அண்ணா. அப்போது எங்கள் அரசு எந்தப் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அது குறித்து ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் போன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் கருத்துகளை அறிந்து, அதன்படி செயல்பட வேண்டும் என எங்களிடம் அவர் வலியுறுத்துவார்.

சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டு வந்தபோது, அது பற்றி பெரியாரின் கருத்தை அறிந்து, அவர் அறிவுறுத்திய திருத்தங்களுடன்தான் சட்டத்தை நிறைவேற்றினார் அண்ணா என்றார்.

மூத்த அரசியல் தலைவர் இரா. செழியன் கூறுகையில்,

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொன்னதைப் போலவே, தெளிவு, துணிவு கனிவு என்றும் அண்ணா கூறினார். கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும், அதைத் துணிவுடன் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போது கனிவான வார்த்தைகளால் சொல்ல வேண்டும் என்பதைத்தான் அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

மாற்றுக் கட்சித் தலைவர்களை அவர் மதித்தார். ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோர் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், அவர்களுக்கிடையே பரஸ்பரம் நட்பு பாராட்டினார்கள். ஒருவரை மற்றவர் மதித்தார்கள். அது அரசியல் பண்பு. அத்தகைய பண்பு இன்றைய அரசியலில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுக்குமே அவசியம் என்றார்.

சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குனர் நடராஜன் பேசுகையில்,

பேச்சு, எழுத்து அனைத்திலும் இலக்கணமாக வாழ்ந்தவர் அண்ணா. திராவிட நாடு இதழில் கடிதம் மூலம் கதை எழுதும் உத்தியை முதலில் அறிமுகம் செய்தவர் அண்ணா தான். அரசு நிதியை வீணாக்குவது கூடாது என்பதில் தீவிரமாக இருந்தவர் அண்ணா என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்த அண்ணா. சென்னையில் 50க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்ததாக தகவல் கிடைத்த உடனே, திருச்சி வானொலி நிலையத்துக்கு அவர் வந்தார். அவரே கைப்பட, அந்த துயர சம்பவத்தைப் பற்றி 4 பக்க குறிப்பை எழுதி, செய்திப் பிரிவுக்கு தந்து, உருக்கமாக பதிவு செய்தார் என்றார்.

நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் விருந்தினர்களை வரவேற்றார் உரை நிகழ்த்தினார். தினமணி விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் லட்சுமி மேனன் நன்றியுரை வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X