For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வழி கேட்கும் பட்டாசு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sivakasi
டமால், டுமீல் என காதை கிழிக்கும் ஒசை என்றாலும் சரி, சத்தமில்லாமல் வானத்தில் பூப்பூவாய் வர்ணஜாலம் காட்டுவதானாலும் சரி. மற்றவர்களை மகிழ்விப்பதில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது. பட்டாசாகிய நான் உருவாகும் கதையைக் கேட்டால் கல்நெஞ்சக்காரர்களின் கண்களும் கலங்கும். பலரது கைகளில் பலவிதமாய் உருவாகும் என் வளர்ச்சியின் பின்னால் பல தொழிலாளர்களின் வாழ்க்கை உள்ளது.

குட்டி ஜப்பான் சிவகாசி

அச்சுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும் நிறைந்துள்ள குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியை சுற்றித்தான் நான் உருவாகும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அந்த மண்ணும், அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையும் எனக்கான இடமாகிப் போனதால் நான் குடிசைத் தொழில்போல பல்கிப் பெருகினேன். நான் சிவகாசிக்கு வந்தது தனிக் கதை.

அந்நியச் செலவாணி

இந்தியாவிலேயே முதன் முதலாக நான் மேற்கு வங்கம் மாநிலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டேன். பல ஆண்டுகள் கழித்து சிவகாசியை சேர்ந்த தொழிலதிபர்கள் சிலர் சீனா சென்று என்னை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பத்தை கற்று வந்தனர். இதன் பின்னர் மளமளவென வளர்ந்து இன்றைக்கு பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறேன்.

ஆண்டொன்றுக்கு மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்றுத் தருகிறேன். 1960 களில் தொடங்கிய என் பயணம் இன்று 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளாக வளர்ந்து நிற்கிறது. நாட்டிற்கு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்க்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருவதில் என் பங்கும் முக்கியமானது என்பதில் எனக்கு பெருமைதான்.

என்னதான் கோடிக்கணக்கான வருமானம் கிடைத்தாலும் என்னை தயாரிக்க தினந்தோறும், கந்தகத்திலும், கரிமருந்திலும், வெந்து உழலும் தொழிலாளர்கள் பலரையும் பார்த்து பார்த்து மனம் நொந்து அந்த வேதனை தாங்காமல் நானே வெடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறேன். இதில் பலியாவது என்னவோ அப்பாவிகள்தான்.

விபத்தாக மாறிப்போன வாழ்க்கை

அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும் அதைப்பற்றி எல்லாம் கோடி கோடியாய் சம்பாதிக்கும் எந்த முதலாளியும் கவலைப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கான எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் யாரும் செய்து தருவதில்லை. உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்றாலும் காலை 8 மணிக்கு அரக்க பரக்க வீட்டில் இருந்து தொழிற்சாலைக்கு கிளம்பிவிடுகின்றனர் தொழிலாளர்கள். அடிக்கடி நடக்கும் விபத்துகளினால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பம் கரிமருந்தில் கருகிய செடியாய் துளிர்க்காமல் அடங்கிப்போகும். ஆபத்தான தொழில் என்று அறிந்தும் தவிர்க்க முடியாமல் இதில் சிக்கித்தவிப்பவர்கள் பலர்.

என்னை நம்பி, குழாய் உருட்டுதல், திரிசெய்தல், மருந்து அடைத்தல் என கிராமங்களில் சார்புத் தொழில் செய்பவர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவதுபோல தொழிற்சாலைகளின் நிகழும் வெடி விபத்து காலங்களில் இவர்களின் வாழ்க்கைதான் முடங்கிப்போகும்.

சந்தோசமாய் வெடிப்பேன்

தீபாவளி மட்டும் என்றில்லை கோவில் திருவிழாவோ, தேர்தலோ எதுவென்றாலும் வெற்றியைக் கொண்டாட என்னைத்தான் கொளுத்திப் போடுகின்றனர். என் வெடிச்சத்தம்தான் பிறருக்கு கொண்டாட்டமாய் இருக்கிறது. என்னை அழித்துகொண்டு பிறரை மகிழ்விப்பதில் எனக்கு சந்தோசம்தான். ஆனால் பாடுபட்டு என்னை உருவாக்கும் கரங்களுக்கு பரிசாக நான் எதையும் தருவதில்லை என்பதை எண்ணும்போதுதான் எனக்குள் லேசாக வலிக்கிறது. பிறருடைய மனங்களில் மத்தாப்பு பூக்கவைக்க பாடுபடும் தொழிலாளர்களுக்கு என்றைக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமைகிறதோ அன்றைக்குத்தான் உண்மையிலேயே சந்தோச சிரிப்புடன் நான் வெடித்துச் சிதறுவேன்.

English summary
Sivakasi is the natural choice for fireworks production. Low rain fall and a dry climate prevailing in the Sivakasi area contribute to unabated production. What could have been consumed in three hours of the Diwali Day came to be produced in 300 days, almost with overtime jobs throughout the year. In Sivakasi the first fireworks industry was started in the early 20th century.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X