For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நூற்றாண்டுகளாய் தொடரும் தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை!

By Mathi
Google Oneindia Tamil News

கல்தோன்றி மண்தோன்றா காலத்தேவாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி- எங்கள்குடி தமிழ்குடி என்று பெருமிதம் பேசுகின்ற தமிழினம் இன்று வரை தமக்கான புத்தாண்டு எது என்பதை தேடிக் கொண்டிருப்பது வரலாற்று சோகம்தான்!

தை மாதம் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று ஒரு தரப்பும் சித்திரை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பும் இன்றளவும் வாதிட்டு வருகின்றனர். இதில் கருணாநிதிதான் தை புத்தாண்டு என்று அறிவித்தார்... ஜெயலலிதாதான் அதை மாற்றி சித்திரை புத்தாண்டு என அறிவித்தார் என சமூக வளைதளங்களில் குழாயடிச் சண்டை நடத்துவோரும் உண்டு.. இது ஒன்றும் இந்தக் காலத்து 'அரசியல்' இல்லை. இது நூற்றாண்டுகளாகத் தொடர்கின்ற ஒரு இனத்துக்கான அடையாள சிக்கல் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு

தமிழரின் சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்றவை "தைஇத் திங்கள்" பற்றி பேசுகின்றன. இவையெல்லாம் தை முதல் நாளே தமிழர் தம் புத்தாண்டு நாளாக இருந்தன என்பதற்கு சான்று என்கின்றனர்.. அத்துடன் பழந்தமிழர்கள் இளவேனில், முதுவேனில், கார் காலம், கூதிர் காலம், முன்பனி, பின்பனிக் காலம் என்ற பருவ காலத்தைக் கடைபிடித்தனர். இதில் இளவேனில் எனப்படும் தை, மாசி மாதங்களே தமிழர் தம் வாழ்வின் தொடக்க நாளாக கடைபிடித்தனர்...ஆகையால் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்றும் வாதிடுகின்றனர். சரி அப்படி எனில் சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கடைபிடிக்கும் வழக்கம் எப்போது வந்தது?

சித்திரை புத்தாண்டு வந்தது எப்படி?

வட இந்தியாவில் குப்தர் வம்சத்தை சேர்ந்த 2-வது சந்திர குப்தன் தமது பெயரை விக்கிரமாதித்தன் என மாற்றிக் கொண்டு தமது பெயரால் விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்குகிறான். அதனடிப்படையில்தான் விக்கிரமசகம் எனும் 60 ஆண்டு முறை உருவாகிறது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் முடியும். இந்த 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான். அப்படி இருக்கும் போது இது எப்படி தமிழருக்குப் புத்தாண்டாக இருக்க முடியும் என்பது ஒருதரப்பு கேள்வி.

20ம் நூற்றாண்டு தொடக்கத்தில்..

இதனால் தமிழாய்ந்த தமிழறிஞர்கள் இதுபற்றி ஆராய 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடினர். இக்கூட்டத்தில் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தரபாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட மூத்த தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில், திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது,. இதுவே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் காலம் கி.மு. 31 எனக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 1939ல் திருச்சியில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் அகில இந்திய தமிழர் மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலையடிகளார், பி.டி.இராஜன், ஆர்க்காடு இராமசாமி முதலியார், புரட்சி கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டிலும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்பின்னர் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் வேர்பிடித்து விருட்சமான காலங்களில் தை முதல் நாளை வெகுசிறப்பாக கொண்டாட ஊர்தோறும் இளைஞர் விளையாட்டு அமைப்புகள் நிறுவப்பட்டு கொண்டாடப்பட்ட வந்த வரலாறு தமிழகத்து கிராமங்களுக்கு உண்டு.

சித்திரை அல்ல உனக்கு
தமிழ்ப் புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழருக்குத்
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
தையே முதற்றிங்கள்;
தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று,
பல்லாயிரத்தாண்டாய்த்
தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்.

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதும் இதனடிப்படையில்தான்!

இதன் தொடர்ச்சியாகத்தான் அரசியல் கட்சிகள் மேற்கொண்ட நிலைப்பாடுகளை நாம் பார்க்க வேண்டுமே தவிர இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றை பேசுவது அர்த்தமற்றதாகும்.

தை முதல் நாளும் தமிழக அரசுகளும்

1969 ஆம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது பொங்கலுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று அறிவித்து அரசு விடுமுறை நாளாக அரிவித்தார். பின்னர் 1971 ஆம் ஆண்டு, தமிழறிஞர்கள் 50 ஆண்டுகாலத்துக்கு முன்பு எடுத்த முடிவின் அடிப்படையில் "திருவள்ளுவர்" ஆண்டு நடைமுறையை தமிழக அரசு ஏற்கும் அன்று நடைமுறைப்படுத்தினார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நாட்குறிப்பில் பின்னர் தமிழ்நாடு அரசு இதழிலும் இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் 1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறை என்பது அனைத்து அரசு அலுவலக நடைமுறைகளில் வருகிறது.

இதைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கிறார் கருணாநிதி. அப்போதே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கவிருப்பதாக கூறத் தொடங்கினார். பின்னர் 2008 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜனவரி 29-ந்தேதி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ந் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதாவோ சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று அறிவித்தார்.

இதனால் தமிழகத்தில் தை முதல் நாள் தமிழர் புத்தாண்டாக ஒருதரப்பும் மற்றொரு தரப்பு சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடி வருகிற விநோதம் நீடிக்கவே செய்கிறது!

English summary
Whether Chithirai or Thai isTamil new year? Which is the apt date that every Tamilian should follow now ?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X