கன்னித்தீவு மோகினி.. புத்தம் புதிய திரில் தொடர் - அத்தியாயம் 1

Posted By:
Subscribe to Oneindia Tamil

- எழுத்தாளர் லதா சரவணன்

சிந்துபாத் லைலாவைத் தேடி மறுபடியும் படகில் ஏறினான். பெரிய பேரலை ஒன்று என்னைத் தாண்டிப்போ பார்க்கலாம் என்று போக்கு காட்டியது. நான்கு கட்டங்களுக்குள் அன்றைய சிந்துபாத் லைலா தோன்றும் கன்னித்தீவு கதை தொடரும் போடப்பட்டு இருந்தது புன்சிரிப்புடன் தினத்தந்தியின் அடுத்தப் பக்கத்திற்கு நகர்ந்தான் ஜெயநந்தன். அருகில் சிரிப்புச் சத்தம் கேட்டவுடன் படிப்பில் இருந்து கலைந்து திரும்பினான். பக்கத்தில் அவனையொத்த வயதுடைய ஒருவன் அமர்ந்திருந்தான். ஏன் ஸார் சிரிக்கிறீங்க?!

ஒண்ணுமில்லை ஸார் இந்தக் கன்னித்தீவு கதை எங்க தாத்தா காலத்திலிருந்து வருது, இன்னமும் சிந்துபாத் லைலாவைக் கண்டுபிடிக்கவும் இல்லை, கப்பலை விட்டு இறங்கவும் இல்லை, ஆனாலும் இதற்குள்ள கிரேஸ் குறையலை, தந்தியைத் தொடும் போது கன்னித்தீவு நினைவுதான் ஆக்கிரமிக்கிறது.

Kannitheevu Mohini - Part 1

ஒரே வயதோடு ஒரே சிந்தனையும் கலந்து கொள்ள ஜெயநந்தனும் அதை ஆமோத்தித்தான். உண்மைதான் என் பெயர் ஜெயநந்தன் சென்னைவாசி, நீங்க?

நான் ஆனந்தன் நானும் சென்னைவாசிதான் பத்திரிகைக்காரன் எங்க பத்திரிகைக்காக ஒரு தொடர் எழுத உதயகிரி வரை போகிறேன் நீங்க ?

நான் வர்காலாவுக்குப் பக்கத்தில் உள்ள கன்னித்தீவுக்குப் போகிறேன். ஜெயநந்தனை ஆனந்தன் வியப்பாய் பார்த்தான்

வர்காலாவுக்குப் பக்கத்தில் உள்ள தீவுகள் இப்போ சுற்றுலாத்தலமா இருக்கு ஆனா போக்குவரத்து எல்லாம் சிரமம், அதிலும் அத்தனை ஸ்பெஷல் ஒண்ணும் அங்கே இல்லையே. ஒரேயொரு கோட்டை இருக்கு. அதுவும் ரொம்பவே சிறிய கோட்டை. வேற நல்ல இடங்கள் எல்லாம் இருக்கு நான் சொல்லட்டுமா.

நான் சுற்றுலாவுக்காக போகலை ஆனந்தன். இது ஒரு ப்யூர்லி பர்சனல் டிரிப்.

ஒ நல்லது ஸார் இன்னும் ஒருமணி நேரப் பயணம் அதுவரையில் போரடிக்குமேன்னு நினைச்சேன், இப்ப எல்லாம் ஒரு மொபைல் போனை கையில் வைச்சிகிட்டு ஆளாளுக்கு மூழ்கிடறோம். யாரும் அக்கம் பக்கம் பேசறது கூட இல்லை, போனவாரம் இப்படித்தான் ஒரு டிரிப் டிரைன்ல. என்னைச் சுற்றி ஒரு பத்துபேர். ஆனா ஏதோ வேற்று கிரகத்தில் இருக்கிறதைப் போல ஆளுக்கொரு பக்கம் போனை வச்சிகிகட்டு தனக்குள்ளேயே சிரிக்கிறாங்க, வெட்கப்படறாங்க, ரசிக்கிறாங்க. மனித முகங்களின் ரசனைகள் பாவனைகள் எல்லாமே செல்போன் என்னும் சவப்பெட்டிக்குள் அடக்கமாயிடுச்சி !

Kannitheevu Mohini - Part 1

நீங்க சொல்றது ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்

இது கூட பரவாயில்லை ஸார். போன மாசம் ஒரு சொற்பொழிவு ரொம்ப அருமையா இருந்தது. என் பக்கத்தில உட்கார்ந்திருப்பவரும் நானும் அரைமணிநேரமா அதை பற்றி சிலாகித்தோம். அவருடைய முகவரியை விசாரித்தபோதுதான் தெரிந்தது அவரு எனக்கு பக்கத்து வீட்டுலதான் இருந்திருக்காருன்னு. இப்படி அக்கம் பக்கத்தையே நாம அறிந்துகொள்ளாமல் இருக்கோம்.

உங்க பேச்சு எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு! நிச்சயமா நான் உங்க பக்கத்து வீடு இல்லை, ஜெயநந்தினி பில்டர்ஸ் & சன்ஸ் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா ?

என்ன ஸார் இது அது எத்தனை பெரிய கம்பெனி போன வருடம் கூட வேளச்செரியில் ஒரு காம்ப்ளஸ் துவங்கினாங்களே.

ஆமாம் ஜெயநந்தினியோட இரண்டாவது மகன் நான். அப்பாவும் அண்ணாவும் பிசினஸ் பார்த்துக்கிறாங்க. இரண்டு வருஷமாச்சு காலேஜ் முடிச்சி. இப்போ காம்ப்ளஸ் முழுக்க என் கண்ட்ரோல் தான்.

வாவ்... இன்னைக்கு எனக்கு ராசியான நாள் போல. அதான் பெரிய மனுஷங்க சகவாசம். ஆனா நீங்க நினைச்சா இந்த இடத்திற்கு கார்லேயே போயிருக்கலாம் ஏன் இந்த பஸ்ல? இத்தனை சிம்பிளா ஆச்சரியமா இருக்கு ஸார்.

அப்பாவோட உழைப்பு தான் இந்த கம்பெனி ஆனா என் சிறு வயதில் நான் ரொம்பவும் அடித்தட்டில் தான் பிறந்தேன். வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ்வாட்டருக்காக ஏங்கினேன். தரையை வெறுத்து டைனிங்டேபிளில் உணவருந்த ஆசைப்பட்டேன். வண்ண வணண உடைகள் வாங்கி அணிய ஆசைப்பட்டேன் இப்படி அநேக ஆசைகள் இப்போ எல்லாமே நிறைவேறிவிட்டது. ஆனா ஐஸ்வாட்டர் சுவைக்கவில்லை, எங்கேயும் டீசென்ஸி மெயிண்ட்டெண்ட் பண்ணிப் பண்ணி வீட்டில் கூட தரையில அமர்ந்தால் அது கெளரவக் குறைச்சலாய் போய்விட்டது. குஷன் சோபாவைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது. 54 இன்ச் டிவியை அரைமணியில் பார்க்கும் போது வராத சந்தோஷம் அன்றைய சாலிடர் பொட்டி டிவியில் அரையணாவிற்கு வாடகை கொடுத்து இரண்டு பாட்டிற்காக ஏங்கிய ஒளியும் ஒளியும் பார்க்கும் போது இருந்தது. நாம் வாழ்வது ஒரு மாதிரி DUPLICATE வாழ்க்கை, ஒரு மாயை.... கொஞ்சநாள் அந்த சந்தடியில் இருந்து விலகவே இந்த பயணம்.

சூப்பர் ஸார் ..... எல்லாருக்கும் இந்த தெளிவு இருந்தால் மனிதம் மறக்காது. ரத்தவெள்ளத்தில் இருக்கும் ஒருவனின் வலியைக் கூட செல்போனில் பதிவு செய்து விற்கும் நிலை வராது. உங்களை சந்தித்தில் மிகவும் மகிழ்ச்சி நீங்கள் செல்லும் காரியம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

ஜெயநந்தன் வசீகரமாய் சிரித்தான். நான் என்ன காயத்திற்காக செல்கிறேன் என்று தெரியுமா ஆனந்தன்?

பர்சனல் என்று சொல்லியபிறகும் தோண்டித் துருவக் கூடாது ஸார்

நல்லாயிருக்கு தோண்டித்துருவிச் செய்திகள் வெளியிடுவதுதானே பத்திரிகைகாரர்களின் வேலை

அது தொழில் இது நட்பு...... ஆனந்தனின் பேச்சில் லயித்தான் ஜெயநந்தன்.

நன்றி! என் தொழில் சாராத இமேஜ் யோசிக்காத ஒரு நட்பு அமைந்ததில் மிகவும் சந்தோஷம். ஒரு குழந்தை பிறக்கும் போது தன் தேவைகளை
தீர்த்துக்கொள்ள அழும் போது இமேஜ் பார்ப்பதில்லை. இறப்பில் பேதமில்லை என்கிறார்கள். ஆனால், அவரவர் வசதிப்படி இறுதியாத்திரை நடைபெறுகிறது, என்போன்ற வளர்ந்த நிலையில் இருப்பவர்கள் கோபம் அன்பு அழுகை சிரிப்பு எல்லாவற்றையும் அடக்கியாள வேண்டும். இடத்திற்கு ஏற்றாற்போல இறுகலாக இருக்கத் தெரிய வேண்டும். இந்த ஆறுமாத கெடு எனக்கே எனக்கு நான் என் இஷ்டம் போல அழுவேன், சிரிப்பேன். என்னை இந்த இடத்தில் எந்த இமேஜ்ம் பாதிக்கக் கூடாது என்றுதான் இந்த மாற்றம்.

ஜெயநந்தனின் தேடல் ஆனந்துக்கு வியப்பை அளித்தது, உனக்கு எப்படியோ ஆனந்த் நான் உன்னை என் நண்பணாக ஏற்றுக்கொண்டேன். நான் உன்னிடம் மனது விட்டு பேசப்போகிறேன் என்னைப் பற்றி?!

ஆனந்தனுக்கு ஆச்சரியத்தில் ஏதும் புரியவில்லை, இத்தனை சீக்கிரம் தான் தேடி வந்த காரியம் நிறைவேறும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை, அவள் சொன்னதைப் போல இந்த ஜெயநந்தன் சற்று வித்தியாசமானவன்தான் என்று தோன்றியது. வெகு நேரம் ஏதோ யோசனையில் இருந்ததால் தன் முகத்தை ஆராய்வதைப் போல பார்த்த ஜெயநந்தனிடம் நட்பு பாராட்டினான் ஆனந்தன்.

(இன்னும் வரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Writer Latha Saravanan's new series Kannitheevu Mohini. The story revolves around a thrill knot.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற