புத்தம் புது பூமி வேண்டும்.. பாரீஸில் திரில் புத்தாண்டு.. ஒரு வாசகியின் அனுபவம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கொண்டாடிய புத்தாண்டு அனுபவத்தை நமது வாசகி சுஜாதா பூபதிரராஜ் நமக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் வாசகி சுஜாதா பூபதிராஜ். தனது புத்தாண்டை பாரீஸில் கொண்டாடியுள்ளார். அங்கு தான் சந்தித்த அனுபவங்களை நமக்காக அனுப்பி வைத்துள்ளார் ஜில் ஜில் புகைப்படங்களுடன்.

சுஜாதா பூபதிராஜின் வார்த்தைகளிலேயே அவரது அனுபவம்: வாழ்வில் முதன்முதலாய் வெளி நாட்டில் புத்தாண்டு. புதிய அனுபவம், புதிய ஆண்டு. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தை காண நடு இரவில் புறப்பட்டேன். எங்கள் வசிப்பிடத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது உலக அதிசயமான ஈபிள் டவர்; அங்கே புத்தாண்டு கொண்டாட்டத்தை காண வீட்டிலிருந்து இரவு 11 .20 க்கு புறப்பட்டேன்; டிராம் எடுத்து பின்னே இரண்டு மெட்ரோ ரயில் மாறி செல்ல வேண்டும் ஈபிள் டவர் இருக்கும் "பீர் ஹக்கிம்" ஸ்டேஷன் அடைய.

அங்கீகாரம் கிடைக்காத அழகிகள்

அங்கீகாரம் கிடைக்காத அழகிகள்

டிராம் ஸ்டேஷனில் ஒருவரும் இல்லை. திரும்பி சென்று விடலாமா என்று எண்ணினேன். பாரிஸ் நகரை பொறுத்தவரை எந்த நேரமும் பயணம் செய்யலாம், பயப்பட தேவையில்லை என்று உறவினர்கள் சொல்லி இருந்ததால் துணிந்து தனியாக புறப்பட்டேன் (நான் பிறந்து வளர்ந்த சென்னையில் பெண்கள் தனியாக இரவு 11 மணிக்கு பயணம் செய்ய முடியுமா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்) டிராம் பிடித்து, பின்னர் மெட்ரோ ரயில் நிலையம் வந்த போதுதான் அங்கிருந்த கூட்டத்தை பார்த்ததும் நிம்மதி வந்தது. நவநாகரிக உடையில் இளைஞர்கள், யுவதிகள், (உலக அழகிகளை மிஞ்சும் அழகுடன் எத்தனை பெண்கள், அங்கீகாரம் கிடைக்காத உலக, பிரபஞ்ச அழகிகள்) மற்றும் வயதானவர்கள், குழந்தைகள், குடும்பத்தினர் என அணைத்து வித மனிதர்களும் புது வருட கொண்டாட்டத்திற்காக கிளம்பி இருந்தார்கள். அப்போதுதான் "ஆஹா, நம் பயணம் விரயமானதல்ல" என்று எனக்குள் சுவாரசியம் பிறந்தது.

பஸ்களில் ப்ரீ பயணம்

பஸ்களில் ப்ரீ பயணம்

புத்தாண்டு தினத்தையொட்டி, அன்று எல்லா அரசு போக்குவரத்தும் இலவசம். டிக்கெட் இல்லா முதல் பயணம் என்பது நாமும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பிரதிநிதி என்னும் நினைப்பு இன்னும் தெம்பை தந்தது. ஒரு மெட்ரோ பயணம் முடிந்து அடுத்த மெட்ரோ மாற வேண்டும். மெட்ரோ ஸ்டேஷன்கள் பெரும்பாலானவை தரைக்கடியில் அமைந்து சாதாரண ரயில் நிலையங்களைவிட சிறியதாகவும் குறுகலாகவும் உள்ளதால் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். அப்போதுதான் பார்த்தேன் என்னை போல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் கிளம்பி இருக்கிறார்கள் என்று; ஆகவே மெட்ரோ நுழைவயிலிலேயே கருப்பு சீருடை அணிந்த பிரெஞ்சு போலீஸ்காரர்களும், சீருடை அணிந்த ரயில்வே ஊழியர்களும் மக்களை தடுத்து நிறுத்தி, சிறு சிறு குழுக்களாய் ரயில் நிலையத்துக்குள் அனுமதித்து கொண்டிருந்தனர்; எனக்கு அடுத்த குழுவில் அனுமதி கிடைத்தது. ரயில் நிலையத்தின் உள்ளே குறைந்த இருக்கைகளே இருந்தன; ஒரு இருக்கையில் இடம் கிடைத்ததால் அமர்ந்தேன்.

திடீரென அழுத தமிழ் இளைஞர்

திடீரென அழுத தமிழ் இளைஞர்

அப்போதுதான் என்னருகே புலம் பெயர்ந்த 35 வயது ஒத்த தமிழ் இளைஞர் அருகே அமர்ந்திருந்ததை கவனித்தேன். உடனே அவர் என்னிடம் "மேடம், புத்தாண்டு வாழ்த்துகள்" என்று கூறி கைகுலுக்க கை நீட்டினார். (புத்தாண்டு மலர இன்னும் 15 நிமிடங்கள் இருந்தன) முன்பின் அறிமுகமில்லாத நபர் என்றாலும் "புத்தாண்டு வாழ்த்துகள்" கூறியதால் மறுக்காமல் நானும் "நன்றி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று கூறினேன். பிறகு ரயிலின் வருகைக்காக காத்திருந்தேன். என் அருகே அமர்ந்திருந்த அந்த இளைஞர் திடீரென விசும்பி அழ தொடங்கினார். கைக்குட்டையை எடுத்து கண்களை துடைத்து மீண்டும் அழுதார். எனக்கோ "கரணம் கேட்கலாமோ கூடாதோ, அயல்நாடு ஆகையால் சினிமா போல எதுவும் புதிய சிக்கலில் சிக்கி கொள்வோமா" என்ற குழப்பத்திலும், மேலும் நான் ஈபிள் டவர் சென்று திரும்பி வர ஒரு மணி நேரம் ஆகி விடும், திரும்பவும் வீடு செல்ல கடைசி மெட்ரோ , டிராம் பிடிக்க நேரம் முடிந்து விடும்" என்ற நிதர்சன உண்மையாலும், ஏதும் கரணம் கேட்க முடியாமல் சிந்தனையில் இருந்தேன்; என் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் மெட்ரோ ரயில் வந்து விட்டதாலும், மிகுந்த நெரிசலால், உடனே ரயில் ஏறி உள்ளே நுழைந்து விட்டேன்.

நெட்டி நெருக்கிய கூட்டம்

நெட்டி நெருக்கிய கூட்டம்

நான் ஏறும்போது அந்த இளைஞரும் ரயிலில் ஏறி விட்டாரா என்று திரும்பி பார்த்தேன். அவரோ அந்த இருக்கையை விட்டு நகராமல் அங்கிருந்தபடியே "மேடம், வாழ்த்துகள்" என்று கையசைத்தார். திரும்ப எனக்கு யோசிக்கவும் நேரமில்லாமல் கூட்டம் உள்ளே நெறுக்கியதால் உள்ளே நுழைந்து விட்டேன். ரயில் பயணம் முழுவதும் "அவருடைய குறையை கேட்டிருக்கலாமோ," என்ற குற்ற உணர்வுடன் பயணித்தேன். ரயிலில் இருக்கும்போதே இளைஞர்கும் யுவதிகளும் துள்ளி ஈபிள் டவர் நோக்கி துள்ளி நடந்து சென்றார்கள். எனக்கும் அதே துள்ளல், ஆவல் மிகுந்ததால் வேகமாக நடை போட்டேன். ஆயிரக்கணக்கில் கூட்டம், உலகெங்கிலும் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளால் அந்த இடமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நெரிசல் மிகுதியால் எல்லாரும் ஈபிள் டவர் இருந்த திசை நோக்கி ஊர்ந்து சென்று கொண்டிருந்தோம். அதற்குள் புத்தாண்டு பிரண்டு விட்டது போலும்.

போன் அன்னே போன் அன்னே

போன் அன்னே போன் அன்னே

எல்லோரும் "போன் அன்னே, போன் அன்னே" என்று பிரெஞ்சு மொழியில் சத்தமாக புத்தாண்டு வாழ்த்துகள் என்று ஒருவருக்கொருவர் கை குலுக்கியும் கட்டி அணைத்தும் வாழ்த்துக்களை பரிமாறி கொன்டார்கள்; நான் மட்டும் தனியே சென்றிருந்ததால் எனக்கு நானே வாழ்த்துக்களை சொல்லி கொண்டேன். நான் பெரிதாக எதிர்பார்த்து சென்றிருந்த FIREWORKS எனப்படும் பிரமாண்ட வாணவேடிக்கை முற்றிலுமாக இல்லை. இரண்டொரு பெரிய பூந்தொட்டிகளும் பெரிய ராக்கெட்டுகளுமே வானத்தை ஒளியூட்டின. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்காகவும் வான வேடிக்கைகள் அறவே தவிர்க்கப்பட்டிருந்ததை உறவினர்கள் மூலமாக அறிந்தேன். வான வேடிக்கை இல்லாதது எனக்கு சிறிய பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஈபிள் டவர் ஐ அடைந்தேன். ஈபிள் கோபுரம் ப்ரமாண்டமாக தங்க நிற வண்ண விளக்குகளால் தகதகத்து கொண்டிருந்தது. மிக உயரமான தங்க கோபுரம் போல் பிரமிப்பையும் சிலிர்ப்பையும் தந்தது. அந்த கரிய இருளில் தங்க விளக்குகளில் மின்னிய ஈபிள் டவர் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அத்தனை அழகாக பிரமாண்டமாக இருந்தது.

உற்சாகத்தின் உச்சி்யில்

உற்சாகத்தின் உச்சி்யில்

என் வாழ்வில் முதன்முதலாக வெளிநாட்டில் அதுவும் உலக அதிசயங்கள் ஒன்றின் முன்பாக என் புத்தாண்டு புலர்ந்ததை என் வாழ்வின் அதிசயமாக எண்ணி மகிழ்ந்தேன். உடனே வருடந்தோறும் புத்தாண்டு அன்று நான் சென்று வணங்கும் எங்கள் கிராம தேவதையான என் இஷ்ட தெய்வமான "பழண்டி அம்மனை" மானசீகமாக வணங்கி ஆசிகளை வேண்டினேன். பின்னர் ஊரிலிருக்கும் என் வயதான தாயின் கால்களில் மானஸீகமாக விழுந்து ஆசிகள் பெற்றேன். பிறகு சென்னையிலிருக்கும் என் உற்றார் உறவினர்களுக்கு மனதிற்குள் வாழ்த்துகள் சொல்லியபடியே கற்பனையில் உலா வந்தேன். அதற்குள் நேரம் செல்வதை அறிவு எனக்கு உணர்த்த, மகிழ்ச்சியுடன் மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி திரும்பி நடந்தேன். மீண்டும் அதே நெரிசல் அதே மக்கள் கூட்டம் அதே ஊர்ந்து செல்லல், மேலே வானத்தை நோக்கினேன்- கடுங்குளிர் காலம், கடும் குளிர் இரவு, குளிர் முழு நிலவு, ரம்மியமான அழகுடன் துளிர்த்தது புத்தாண்டு. விதவிதமான மனிதர்கள், விதவிதமான பின்னணி, எல்லோரையும் ஒன்று சேர்த்தது கம்பீராமான ஈபிள் கோபுரமும், இனிமையான புத்தாண்டும். திரும்பி நடக்கும் வழி எல்லாம் மக்கள் வெள்ளம். "இச்சமயம் தப்பினால் மறுசமயம் வாய்ப்பதரிது" என்பதற்கு ஒப்பாக, வழியெங்கிலும் பலர் "வைன் பாட்டில் வைன் பாட்டில் " என (ஆசிய கண்டத்தை சேர்ந்த இளைஞர்களாக இருக்க வேண்டும்) பலர் கூவி விற்று கொண்டிருந்தனர்.

கேளிக்கைகளின் கொண்டாட்டம்

கேளிக்கைகளின் கொண்டாட்டம்

பலர் கையில் மது பாட்டில் நிறைந்த பைகள், வழியில் பல இடங்களில் காலி மதுபுட்டிகள் சிதறி கிடந்தன. இனிமேல்தான் இவர்களின் உண்மையான கேளிக்கை நேரம் ஆரம்பம் என்பதை எனக்கு உணர்த்தியது. எல்லோரும் பயணப்பட்டு கொண்டிருந்தார்கள், சிலர் வீட்டை நோக்கி, சிலர் உறவினர்களை நோக்கி, சிலர் தேவாலயங்களை நோக்கி, சிலர் தூங்கா நகரமான பாரிஸின் இரவு கேளிக்கை விடுதிகளை நோக்கி, சிலர் உணவு விடுதிகளை நோக்கி, இன்னும் சிலர் புதிய உறவுகளை நோக்கி, எல்லோரும் ஏதோ ஒரு இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, எல்லார் மனதிலும் அந்த நேரத்தில் புதிய உற்சாகம் தவழ்ந்திருப்பதை காண முடிந்தது. திரும்பவும் அதே நெரிசலை என் மெட்ரோ ரயில் பயணம், நான் வீடு செல்ல டிராம் ஸ்டேஷனில் நின்றிருந்தேன். அங்கு 5 இளைஞர்கள் இல்லை சிறுவர்கள் - 17 அல்லது 18 வயதிருக்கும் - அதில் ஒருவன் போதை தலைக்கேறி கால் தரையில் பாவி நிற்க முடியாமல் அவனை இரண்டு நண்பர்கள் கைத்தாங்கலாய் இருபக்கமும் பிடித்தபடி அவன் கால்கள் தரையில் தேய ட்ராமுக்குள் ஏற்றினர். அவனை பெற்றவர் யாரோ, யாருக்கு தம்பியோ அண்ணனோ, ஆனால்.... அந்த சிறிய வயதில் அந்த பெரும் போதை என்னை அதிர வைத்தது. கண்ணுக்கு தெரிந்து இந்த சிறுவன், தெரியாமல் எதனை சிறுவர்கள் சிறுமிகளோ, இளைஞர்களோ, இந்த போதை கலாச்சாரத்தின் பேரழிவை நினைத்து மனம் பயத்திலும், வேதனையிலும் வீடு நோக்கி நடை போட்டது.

- சுஜாதா பூபதிராஜ்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Our reader Sujatha Bhoopathiraj has narrated her experience in Paris during the eve of New Year celebrations there. Here is the story.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற