For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறிந்தும் அறியாமலும் - 5: ஆழ்ந்தும் அகன்றும்...

By Shankar
Google Oneindia Tamil News

- சுப வீரபாண்டியன்

1976 ஆம் ஆண்டில்தான், தமிழகத்திற்குள் முதன்முதலாகத் தொலைக்காட்சி வந்தது. அப்போது அரசின் தொலைக்காட்சி மட்டுமே ‘தூரதர்ஷன்' என்னும் சமற்கிருதப் பெயருடன் வந்து சேர்ந்தது. தனியார் தொலைக்காட்சிகள் வரிசையில், 1990களில் முதலில் அறிமுகமானது ‘சன் தொலைக்காட்சி'. கடந்த 10 ஆண்டுகளுக்குள் ஏராளமான தனியார் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன.

அன்றைக்குத் தொலைக்காட்சியை நாங்களெல்லாம், ஓர் அறிவியல் கருவியாய்ப் பார்க்கவில்லை. ஒரு பெரிய அதிசயமாகவே பார்த்தோம். வீட்டுக்குள்ளேயே திரைப்படமும், பாடல்காட்சிகளும் வரும் என்பது நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. 1980 வரையில், ஒரு வீதிக்கு ஒன்று அல்லது இரண்டு வீடுகளில்தான் தொலைக்காட்சி இருக்கும். அந்த வீட்டின் வாசல், சன்னல் ஓரங்களில் வெள்ளி மற்றும் ஞாயிறு மாலைகளில் பெரும் கூட்டமே நிற்கும். வெள்ளி இரவு, ‘ஒலியும் ஒளியும்' என்ற பெயரில் அரை மணி நேரம், திரைப்படப் பாடல் காட்சிகள் இடம் பெறும். ஒவ்வொரு ஞாயிறு மாலையும், ஒரு தமிழ்த் திரைப்படம் ஒளிபரப்புவார்கள். இரண்டு நிகழ்வுகளையும் காணப் பேராவல் கொண்டவர்களாக அன்று மக்கள் இருந்தனர்.

அந்தச் சூழலில் அனைவரும் எண்ணியதெல்லாம், இனிமேல் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைந்துவிடும் என்பதுதான். வீட்டிற்குள்ளேயே திரைப்படங்கள் வந்தபின், திரையரங்குகளுக்கு இனி யார் செல்வார்கள் என்றுதான் அன்று கருதப்பட்டது.

ஆனால், தொலைக்காட்சி, திரையரங்குகளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. மாறாக, வேறு இரண்டு தளங்களில் குறிக்கத்தக்க பாதிப்புகளை உருவாக்கிவிட்டது. ஒரு புறம், நாவல், கவிதை போன்ற இலக்கியப் படிப்புகளைத் தொலைக்காட்சி தகர்த்தது. மறுபுறம், அது மாலை நேர விளையாட்டைத் திருடிக் கொண்டது. வியர்க்க விறுவிறுக்க விளையாடி மகிழ்ந்து, பிறகு அன்று ஆடிய ஆட்டம் பற்றியே நண்பர்களுடன் பேசிச் சிரித்துக் களித்த பொழுதுகள் காணாமல் போயின.

தொலைக்காட்சிகள் நல்லன பலவற்றையும் கொண்டு வந்தன என்பதை மறுப்பதற்கில்லை. உடனுக்குடன் உள்ளூர் முதல் உலகம் வரையிலான செய்திகள், விண்வெளியில், காடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள், அரசியல் விவாதங்கள், மகிழ்வில் ஆழ்த்தும் விளையாட்டு நிகழ்ச்சிகள் என்று நமக்குப் பல புதிய வரவுகள் கிடைக்கவே செய்தன. எனினும் பொது நூல்களைப் படிக்கும் பழக்கம் குறைந்ததற்கு அது ஒரு காரணமாயிற்று. அவ்வாறே, விளையாடிக் கொண்டிருந்தவர்களை, விளையாட்டுப் பார்க்கின்றவர்களாக ஆக்கிவிட்டது.

1995ஆம் ஆண்டிற்குப் பிறகு, மெல்ல மெல்லத் தலைகாட்டத் தொடங்கி, 2000, 2001க்குப் பிறகு எங்கும் விரிந்தது இன்னொரு திரை. அது நம் கைபேசியின் திரை. அப்போது அது எண்களைக் காட்டும் திரையாக மட்டுமே இருந்தது. இன்றோ, அனைத்தையும் உள்ளடக்கிய திரையாக மாறிவிட்டது.

நம் வாழ்வின் போக்கில் இன்னொரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரை கணிப்பொறித் திரை. இதுவே இன்று உலகை ஆள்கிறது என்று கூறலாம். வெள்ளித்திரை, சின்னத்திரை, கைபேசித் திரை என எல்லாத் திரைகளும், கணிப்பொறித் திரைக்குள் இன்று அடக்கம். இந்த நான்கு திரைகளுக்குள் இன்றைய உலகே அடக்கம் என்னும் நிலை ஏற்பட்டுவிட்டது.

தொலைக்காட்சி என்பது, ஒரு கட்டம் வரையில், வெறும் பொழுது போக்குக் கருவியாக இருந்தது. பிறகு குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் என்றாகிவிட்டது. அதற்கடுத்துப் பல வீடுகளில், குடும்பத் தலைவராகவே இடம்பிடித்துவிட்டது. ஆம், என்ன உண்ண வேண்டும், எப்படி உடுத்த வேண்டும், எந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என எல்லா அறிவுரைகளையும் வழங்குகின்ற நெறியாளராக, குடும்பத் தலைவராகவே பல வீடுகளில் ஆட்சி செலுத்துகிறது.

இனிமேல் இத்திரைகளை விட்டு நம்மால் விலக முடியாது. இவை உலகின் ஒழுங்கையே மாற்றிப் போட்டு விட்டன. அரசியல், இலக்கியம், கலை, அறிவியல் அனைத்தும் இவற்றின் கட்டுப்பாட்டில்தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு விதிவிலக்கே இல்லை. விதிவிலக்காக வாழ நினைக்கின்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்பதே கசப்பான உண்மை.

சரி, இதற்கும், படிப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கத் தோன்றும். இருக்கிறது. படிப்பதை விட, பார்ப்பது எளிது. இந்தத் திரைகள், பார்க்கும் பழக்கத்தை மிகுதியாக்கிவிட்டமையால், படிக்கும் பழக்கம் தானாகக் குறைந்து போகின்றது. மூளை எப்போதும் செய்வதற்கு எளிமையான செயல்களையே விரும்பும் என்பதை மறந்துவிடக் கூடாது. ‘படிப்பதைக் குறை, பார்ப்பதை கூட்டு' என்கிறது மூளை. நாம் அதன் வயப்பட்டு விடாமல், அதனை நம் வயப்படுத்த வேண்டிய தேவையை உணர வேண்டும்.

குறைந்தது, திரைகளிலாவது நாம் படிக்க வேண்டும். அப்பழக்கம் எளிதாக உள்ளது என்று இளைய தலைமுறையினர் கூறுகின்றனர். புத்தகங்களையோ, செய்தித் தாள்களையோ விரித்துப் படிப்பதை விட, கணிப்பொறித் திரையில் படிப்பது எளிதாக உள்ளது என்று கூறுகின்றனர்.

ஆனால் 60 வயதைக் கடந்த என் தலைமுறையினருக்கு, அச்சு ஊடகத்திற்கு (Print media) இணையாக, மின்னணு ஊடகத்தைக் (Electronic media) கருத முடியவில்லை. திரைக்கு முன்னால் அமர்ந்து மணிக்கணக்காகப் படிக்க முடியவில்லை. அதிலும், கனமான நூல்களைப் படிப்பதற்கு & நெடுநேரம் படிப்பதற்கு & திரை வசதியானதாகப் படவில்லை.

இவையெல்லாம் பழக்கம் காரணமாக ஏற்படும் இயல்புகளே என்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். எனவே, எந்த வழியில் படிப்பது என்பதில், நாம் கூடுதல் விவாதம் செய்ய வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. படிக்கும் முறையையும், படிக்கும் நேரத்தையும் காட்டிலும், படிப்பில் பதியும் நம் கவனமே இன்றியமையாதது. எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள ஒரு நண்பர், எழுதுவதைவிட, தட்டச்சு செய்வதுதான் எளிதாக உள்ளது என்றும், படைப்பிலக்கியங்களைக் கூட, மனமொன்றி நேர்த்தியாகத் தட்டச்சு செய்ய முடியும் என்றும் எழுதியுள்ளார். அவருடைய அனுபவத்தையும், கூற்றையும் மதித்து ஏற்றுக்கொள்வதுதான் சரி என்று நினைக்கிறேன். இங்கும் கூட, எந்த முறையில் எழுதுவது என்பதைவிட, எழுதுவது என்பதே முக்கியமானதாக உள்ளது.

Subhavee's Arinthum Ariyamalum part 5

அடுத்த கட்டமாக, பொதுவான நூல்களைப் படி, படி என்கிறீர்களே, எந்தத் துறையில், எந்த நூலைப் படிப்பது என்று இனைஞர்கள் சிலர் வினா எழுப்பி உள்ளனர்.

கடல்போல் விரிந்திருக்கும் உலக அறிவில் எதனைக் கொள்வது, எதனை விடுவது என்ற வினா சரியானதுதான்!

உலகின் மிகப்பெரிய விஞ்ஞானி ஒருவரே, ‘கடற்கரையில் வெறும் சிப்பிகளைத்தான் நான் சேகரித்துக் கொண்டுள்ளேன். எதிரில் ஒரு கடலே உள்ளது' என்று சொன்னபிறகு, நாமெல்லாம் எம்மாத்திரம்?

உலக அறிவு அனைத்தையும் எவராலும் பெற்றுவிட முடியாது. ஒரு துளி அறிவைப் பெறவே, நம் வாழ்நாள் போதுமானதாக இல்லை. அதிலும் அந்தத் துளி எது என்று கண்டுகொள்வதற்கே நமக்குப் பலகாலம் ஆகிவிடுகின்றது. எவ்வாறாயினும் ஏதேனும் ஒரு துறையில், ஒரு துளியை அறிந்துகொள்ள நாம் முயல்கிறோம். அந்தத் துறையில் ஆழ்ந்தும், பிற துறைகளில் அகன்றும் படிப்பதே பொதுவான கல்வி முறை. அகன்ற படிப்புக்கு உரிய பல்வேறு துறைகளை, கீழ்வரும் ஏழு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும் என்று நினைக்கிறேன்.

1. வரலாறு, அரசியல்
2. கலை, இலக்கியம், பண்பாடு
3. அறிவியல், தொழில்நுட்பம்
4. தத்துவம்
5. தொழில், வணிகம்
6. பொருளாதாரம்
7. சட்டம்

மேற்காணும் ஏழு துறைகளுள், கண்டிப்பாக ஒன்று நமக்குரியதாக அல்லது நாம் ஈடுபட்டுள்ளதாக இருக்கும். அத்துறையில், ஆழ்ந்து கற்க வேண்டிய தேவை உள்ளது. அதனை இன்றைய இளைஞர்கள் செம்மையாகவே செய்து கொண்டுள்ளனர் என்று கூறலாம்.

தனக்கு நேரடியாகத் தொடர்பில்லாத, ஏனைய 6 துறைகளிலும் கூட நமக்குக் குறைந்தபட்ச அறிவு இருந்தாக வேண்டும். அதனை எப்படிப் பெறுவது?

(வியாழன் தோறும் சந்திப்போம்)

தொடர்புகளுக்கு: ([email protected] , www.subavee.com)

English summary
The fifth part of Subhavee's Arinthum Ariyamalum series discusses about the launch of TV channels and other electronic medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X