அதிகார விளக்கம்: தலைவியின் அழகு, தோற்றம், கண்கள் மற்றும் முகப்பொலிவு தலைவனின் மனதில் ஏற்படுத்தும் காதல் ஈர்ப்பை இவ்வதிகாரம் அழகிய உவமைகளுடன் எடுத்துரைக்கிறது. காதலின் தொடக்கத்தில் தோன்றும் ஈர்ப்பு முக்கியமாக வெளிப்படுகிறது.
| எண் | குறள் |
|---|---|
| 1081 |
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு பொருள்: அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
|
| 1082 |
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து பொருள்: என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.
|
| 1083 |
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு பொருள்: எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.
|
| 1084 |
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண் பொருள்: பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.
|
| 1085 |
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து பொருள்: என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.
|
| 1086 |
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்னிவள் கண் பொருள்: அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.
|
| 1087 |
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் பொருள்: அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.
|
| 1088 |
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு பொருள்: களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.
|
| 1089 |
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து பொருள்: பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?
|
| 1090 |
உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று பொருள்: காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.
|