அதிகார விளக்கம்: காதலர்கள் கூடுவதால் ஏற்படும் மகிழ்ச்சி, அன்பு, நெருக்கம் மற்றும் மனநிறைவை இவ்வதிகாரம் விளக்குகிறது. காதலின் உண்மையான இனிமை இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒன்றிணையும் தருணங்களில் வெளிப்படுகிறது.
| எண் | குறள் |
|---|---|
| 1101 |
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள பொருள்: விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.
|
| 1102 |
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து பொருள்: நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.
|
| 1103 |
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு பொருள்: தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?
|
| 1104 |
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள் பொருள்: தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?
|
| 1105 |
வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் பொருள்: நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.
|
| 1106 |
உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள் பொருள்: இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.
|
| 1107 |
தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு பொருள்: அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.
|
| 1108 |
வீழும் இருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு பொருள்: இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.
|
| 1109 |
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் பொருள்: படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!
|
| 1110 |
அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு பொருள்: நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.
|