அதிகார விளக்கம்: நன்மை, தீமை, காலம், இடம் மற்றும் சூழ்நிலைகளை ஆராய்ந்து சரியான முடிவெடுப்பதே அறிவுடைமை. அறிவுள்ளவர் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, விளைவுகளை எண்ணி செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுகிறார்.
| எண் | குறள் |
|---|---|
| 421 |
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் பொருள்: அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
|
| 422 |
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு பொருள்: மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
|
| 423 |
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு பொருள்: எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
|
| 424 |
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு பொருள்: அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.
|
| 425 |
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு பொருள்: உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.
|
| 426 |
எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு பொருள்: உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
|
| 427 |
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் பொருள்: அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
|
| 428 |
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில் பொருள்: பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.
|
| 429 |
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் பொருள்: நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.
|
| 430 |
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர் பொருள்: ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
|