அதிகார விளக்கம்: மனத்திட்பம், தன்னம்பிக்கை மற்றும் முயற்சியுடன் செயல்படுவது முன்னேற்றத்திற்கு அவசியம். செல்வம் இல்லாதவரும் ஊக்கத்துடன் உழைத்தால் உயர முடியும்; ஊக்கமின்மை வாய்ப்புகளையும் திறமைகளையும் வீணாக்கும்.
| எண் | குறள் |
|---|---|
| 591 |
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று பொருள்: ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?
|
| 592 |
உள்ள முடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் பொருள்: மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
|
| 593 |
ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தங் கைத்துடை யார் பொருள்: ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.
|
| 594 |
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை பொருள்: தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.
|
| 595 |
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு பொருள்: நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.
|
| 596 |
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து பொருள்: நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.
|
| 597 |
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு பொருள்: தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.
|
| 598 |
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு பொருள்: ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.
|
| 599 |
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
|
| 600 |
உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு பொருள்: ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.
|