அதிகார விளக்கம்: உண்மையான நட்பு மகிழ்ச்சியில் மட்டுமல்லாமல் துன்பத்திலும் துணையாக இருக்கும். நண்பர் தவறு செய்தால் திருத்தி, தேவையான நேரத்தில் உதவி செய்து, நல்ல பாதையில் அழைத்துச் செல்வதே உண்மையான நட்பின் சிறப்பு.
| எண் | குறள் |
|---|---|
| 781 |
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு பொருள்: சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?
|
| 782 |
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு பொருள்: பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.
|
| 783 |
நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு பொருள்: படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.
|
| 784 |
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு பொருள்: ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.
|
| 785 |
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் பொருள்: ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.
|
| 786 |
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு பொருள்: பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
|
| 787 |
அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு பொருள்: அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.
|
| 788 |
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு பொருள்: பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
|
| 789 |
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை பொருள்: நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.
|
| 790 |
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு பொருள்: இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.
|