அதிகார விளக்கம்: உறவினர்களையும் நம்பிக்கைக்குரியவர்களையும் அன்புடன் பேணி அவர்களின் நலனை பாதுகாப்பது முக்கியம். நல்ல சுற்றம் துன்பங்களில் துணையாகவும் மகிழ்ச்சியில் பங்காளியாகவும் இருந்து வாழ்க்கைக்கு ஆதரவளிக்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 521 |
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள பொருள்: ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.
|
| 522 |
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும் பொருள்: ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
|
| 523 |
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று பொருள்: சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.
|
| 524 |
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் பொருள்: தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.
|
| 525 |
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும் பொருள்: ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.
|
| 526 |
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத் தில் பொருள்: ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.
|
| 527 |
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள பொருள்: காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.
|
| 528 |
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் பொருள்: சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.
|
| 529 |
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரண மின்றி வரும் பொருள்: முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.
|
| 530 |
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந் தெண்ணிக் கொளல் பொருள்: ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.
|