அதிகார விளக்கம்: சொல்லப்படாத கருத்துகளையும் முகபாவனை, பார்வை, உடல் மொழி மற்றும் செயல்களின் மூலம் புரிந்து கொள்ளும் திறன் முக்கியமானது. பிறரின் குறிப்பை சரியாக அறிதல் உறவுகளிலும் நிர்வாகத்திலும் நல்ல முடிவுகளுக்கு உதவும்.
| எண் | குறள் |
|---|---|
| 701 |
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி பொருள்: ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.
|
| 702 |
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் பொருள்: அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.
|
| 703 |
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல் பொருள்: தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
|
| 704 |
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு பொருள்: ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
|
| 705 |
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் பொருள்: ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?
|
| 706 |
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் பொருள்: தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.
|
| 707 |
முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும் பொருள்: ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?
|
| 708 |
முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி உற்ற துணர்வார்ப் பெறின் பொருள்: தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.
|
| 709 |
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் பொருள்: அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.
|
| 710 |
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற பொருள்: நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.
|