அதிகார விளக்கம்: தொடங்கிய செயலை தடைகள் வந்தாலும் மனம் தளராமல் உறுதியுடன் முடிப்பதே வினைத்திட்பம். திட்டம், மன உறுதி, பொறுமை மற்றும் தொடர்ச்சியான முயற்சி செயல்களின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.
| எண் | குறள் |
|---|---|
| 661 |
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற பொருள்: ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.
|
| 662 |
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் பொருள்: பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.
|
| 663 |
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும் பொருள்: ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.
|
| 664 |
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் பொருள்: நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
|
| 665 |
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும் பொருள்: எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.
|
| 666 |
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் பொருள்: ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.
|
| 667 |
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னார் உடைத்து பொருள்: அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.
|
| 668 |
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல் பொருள்: மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.
|
| 669 |
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை பொருள்: ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
|
| 670 |
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு பொருள்: எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
|