அதிகார விளக்கம்: தீய பண்புகளும் தவறான பழக்கங்களும் கொண்டவர்களின் நட்பைத் தவிர்த்து, நல்ல குணம் மற்றும் அறம் கொண்டவர்களுடன் பழக வேண்டும். சுற்றம் மனிதனின் சிந்தனையையும் நடத்தையையும் பெரிதும் பாதிக்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 451 |
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் பொருள்: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
|
| 452 |
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு பொருள்: தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
|
| 453 |
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னா னெனப்படுஞ் சொல் பொருள்: மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.
|
| 454 |
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் கினத்துள தாகும் அறிவு பொருள்: அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.
|
| 455 |
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் பொருள்: மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.
|
| 456 |
மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க் கில்லைநன் றாகா வினை பொருள்: மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.
|
| 457 |
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழுந் தரும் பொருள்: நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
|
| 458 |
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து பொருள்: மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
|
| 459 |
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும் இனநலத்தி னேமாப் புடைத்து பொருள்: ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
|
| 460 |
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில் பொருள்: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
|