அதிகார விளக்கம்: ஒருவரின் குணம், அறிவு, திறமை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை ஆராய்ந்த பிறகே அவரை நம்ப வேண்டும். சரியான மனிதரைத் தேர்ந்தெடுப்பது பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றவும் தவறுகளைத் தவிர்க்கவும் உதவும்.
| எண் | குறள் |
|---|---|
| 501 |
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் பொருள்: அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.
|
| 502 |
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு பொருள்: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
|
| 503 |
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு பொருள்: அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.
|
| 504 |
குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் பொருள்: ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
|
| 505 |
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல் பொருள்: உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.
|
| 506 |
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி பொருள்: உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.
|
| 507 |
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும் பொருள்: அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.
|
| 508 |
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் பொருள்: நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.
|
| 509 |
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் பொருள்: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
|
| 510 |
தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் பொருள்: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.
|