அதிகார விளக்கம்: அறிவு குறைவாக இருந்தும் தன்னை அறிவாளியாக எண்ணிக்கொள்வதால் தவறான முடிவுகளும் செயல்களும் உருவாகின்றன. உண்மையான அறிவை ஏற்றுக்கொண்டு கற்றுக்கொள்ளும் பணிவு இல்லாதது மனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 841 |
அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு பொருள்: இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.
|
| 842 |
அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம் பொருள்: அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.
|
| 843 |
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது பொருள்: அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.
|
| 844 |
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு பொருள்: அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.
|
| 845 |
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும் பொருள்: அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.
|
| 846 |
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி பொருள்: தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
|
| 847 |
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு பொருள்: அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
|
| 848 |
ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய் பொருள்: அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.
|
| 849 |
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு பொருள்: அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.
|
| 850 |
உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும் பொருள்: இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.
|