அதிகார விளக்கம்: நல்ல அமைச்சருக்கு அறிவு, தெளிவு, துணிவு, நேர்மை, செயல்திறன் மற்றும் அரசனுக்கு சரியான ஆலோசனை வழங்கும் திறன் அவசியம். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு உண்மையான முடிவுகளை எடுத்துரைக்க வேண்டும்.
| எண் | குறள் |
|---|---|
| 631 |
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு பொருள்: ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.
|
| 632 |
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு பொருள்: செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.
|
| 633 |
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு பொருள்: நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
|
| 634 |
தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு பொருள்: ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
|
| 635 |
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை பொருள்: அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.
|
| 636 |
மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை பொருள்: இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?
|
| 637 |
செயற்கை அறிந்தக் கடைத்து முலகத் தியற்கை அறிந்து செயல் பொருள்: பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.
|
| 638 |
அறிகொன் றறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன் பொருள்: அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.
|
| 639 |
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் பொருள்: தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.
|
| 640 |
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர் பொருள்: செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.
|