அதிகார விளக்கம்: தலைவி தனது நெஞ்சுடன் உரையாடி, காதலரின் பிரிவு, நினைவு மற்றும் ஏக்கத்தால் ஏற்படும் மனக்குழப்பத்தை வெளிப்படுத்துகிறாள். மனதை கட்டுப்படுத்த முயன்றாலும் காதல் உணர்வு தொடர்ந்து அவரை நினைக்கச் செய்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 1241 |
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து பொருள்: நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?
|
| 1242 |
காத லவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழியென் நெஞ்சு பொருள்: என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.
|
| 1243 |
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல் பொருள்: நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.
|
| 1244 |
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று பொருள்: நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.
|
| 1245 |
செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர் பொருள்: நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?
|
| 1246 |
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு பொருள்: என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.
|
| 1247 |
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு பொருள்: நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.
|
| 1248 |
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு பொருள்: என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!
|
| 1249 |
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு பொருள்: என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?
|
| 1250 |
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா இன்னும் இழத்தும் கவின் பொருள்: நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.
|