அதிகார விளக்கம்: காதலர்களைப் பற்றிய ஊராரின் பேச்சும் வதந்தியும் அவர்களின் காதலை மேலும் வெளிப்படுத்தும் நிலையை இவ்வதிகாரம் எடுத்துரைக்கிறது. பிறர் பேசும் அலர் காதலர்களின் உறவை மறைக்காமல் வெளிப்படச் செய்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 1141 |
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் பொருள்: ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.
|
| 1142 |
மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்ததிவ் வூர் பொருள்: மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.
|
| 1143 |
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து பொருள்: எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.
|
| 1144 |
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து பொருள்: ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.
|
| 1145 |
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது பொருள்: கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.
|
| 1146 |
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று பொருள்: நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!
|
| 1147 |
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய் பொருள்: இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
|
| 1148 |
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் பொருள்: இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.
|
| 1149 |
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை பொருள்: அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?
|
| 1150 |
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கௌவை எடுக்குமிவ் வூர் பொருள்: நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.
|