அதிகார விளக்கம்: காதல் நிறைவேறாதபோது காதலன் தனது நாணத்தையும் தயக்கத்தையும் துறந்து காதலை வெளிப்படுத்தும் நிலை இவ்வதிகாரத்தில் கூறப்படுகிறது. காதலின் தீவிரம் சமூக வெட்கத்தையும் தனிப்பட்ட கட்டுப்பாட்டையும் கடக்கச் செய்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 1131 |
காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி பொருள்: காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.
|
| 1132 |
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து பொருள்: காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
|
| 1133 |
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல் பொருள்: நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.
|
| 1134 |
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை பொருள்: ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
|
| 1135 |
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர் பொருள்: மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.
|
| 1136 |
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண் பொருள்: அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.
|
| 1137 |
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் பொருள்: அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.
|
| 1138 |
நிறையரியர் மன்னளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும் பொருள்: இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.
|
| 1139 |
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம் மறுகின் மறுகும் மருண்டு பொருள்: என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.
|
| 1140 |
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு பொருள்: நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!
|