For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுய விலக்கம்- ஆதவன் தீட்சண்யா

By Staff
Google Oneindia Tamil News

நகரத்தின் மோஸ்தருக்குள் முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய் அடையாளம் கண்டுவிடமுடியாது

எனக்கே தெரியுமன்றாலும்
அறுந்த செருப்பை தெருவோர காப்ளரிடம் தான் தைத்துக்கொள்கிறேன்
வீட்டுக்கே வந்து டோபி துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மா போல
நீயமரும் இருக்கையிலேயே எனக்கும் சவரம் சலூனில்

பரம்பரையின் அழுக்கு அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்
அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க

சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே தெரியாது என் பிள்ளைகளுக்கு

ரிசர்வேசனுக்கெதிரான உங்களின் உரையாடலின் போதும்
"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்..." என்கிற போதும்
யாரையோ வைவதாய் பாவனை கொள்கிறேன் பதைக்கும் மனமடக்கி

"உங்கம்மாளப் போட்டு பறையன் சக்கிலிப் போக ..." என்ற வசவுகளின் போது
அதுக்கும் கூட உங்களுக்கு நாங்க தான் வேணுமா என்றும்
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனை சிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா

இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல் உள்நுழைந்தத் திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும் பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என் புத்தியிலிருந்து நீங்கள் கண்டுபிடிக்கக்கூடும் என்னை.

- ஆதவன் தீட்சண்யா([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. கடவுளின் கண்கள்
2. வேறு மழை
3. அதிர வருவதோர் நோய்
4. புது ஆட்டம்
5. கடவுளும் கந்தசாமிப் பறையன் உள்ளிட்ட வகையறாக்களும்
6. முடிந்து போன சிகரெட்டுகளும் மிச்சமிருக்கும் விவாதங்களும்
7. பாலைவாசி

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X