For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

51 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த அறிவியல்

By BBC News தமிழ்
|

குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட பெண் 51 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.

மெலிசா ஹைஸ்மித்துக்கு இப்போது வயது 53. 1971-ஆம் ஆண்டு அவர் 22 மாத குழந்தையாக இருந்தபோது ஃபோர்ட்வொர்த் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து குழந்தை பராமரிப்பாளரால் கடத்தப்பட்டார்.

பல ஆண்டுகளாக குடும்பத்தினர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. கடைசியாக ஓர் இணையதள நிறுவனத்துக்கு வந்த டிஎன்ஏ மாதிரிகள் பொருந்திப் போனபோதுதான் அவர் குடும்பத்துடன் சேர முடிந்தது. இந்த இணையதளம் டிஎன்ஏ பரிசோதனைகளைச் செய்வதுடன் மரபு ரீதியிலான குடும்ப வரைபடத்தையும் உருவாக்குவதற்கு உதவுகிறது.

நீண்ட காலமாக "மெலனி" என்று அறியப்பட்டு வந்த, மெலிசா ஹைஸ்மித் இப்போது தனது பழைய பெயரையே வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைஸ்மித்தின் கடத்தல் நடந்தது. அவரது தாயார் ஆல்டா அப்பாடெங்கோ, உள்ளூர் செய்தித் தாள் மூலமாக குழந்தையை பராமரிப்பதற்கு ஒரு பெண்ணை நியமித்தார்.

தனது வீட்டில் வைத்து மெலிசாவை பராமரிப்பதாக கூறிய அந்தப் பெண்தான் அவரைக் கடத்தியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

குழந்தையை வீட்டுக்குக் கொண்டு சென்ற அந்தப் பெண் அத்துடன் மாயமானார். மெலிசாவின் குடும்பம் அவரைத் தேடும் பணியைத் தொடங்கியது. பல பத்தாண்டுகள் கடந்தும் தேடுவதை மாத்திரம் விட்டுவிடவில்லை. காவல்துறையும், மத்திய அரசின் அதிகாரிகளும் அவர்களுக்கு உதவி செய்து வந்தார்கள்.

கடந்த செப்டம்பரில் மெலிசா, தெற்கு கரோலினா மாநிலத்தில் இருப்பதாக அவரது குடும்பத்துக்கு ஒரு துப்புக்கிடைத்தது.

Science reunites kidnapped woman 51 years ago with family

ஏற்கெனவே 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஹைஸ்மித்துக்கு தெரியவே தெரியாது. குடும்பத்தினர் அவரை ஃபேஸ்புக் மூலம் முதலில் தொடர்பு கொண்டபோது, அது ஏதோ மோசடி என்றுதான் அவர் கருதினார்.

கடந்த நவம்பர் 6-ஆம் தேதிதான் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது. 23AndMe என்ற இணையதளத்தில் இருந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் ஹைஸ்மித்தின் குழந்தைகளுக்கும் மெலிசா ஹைஸ்மித்தை தேடிக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கும் மரபு ரீதியான தொடர்பு இருப்பதை உறுதி செய்தது. மரபணு நிபுணர் ஒருவர் இந்த மர்மத்தை விலக்குவதற்கு உதவி செய்திருக்கிறார்.

“எங்கள் குழந்தையைக் கண்டுபிடித்தது டிஎன்ஏவால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. காவல்துறை, எஃப்பிஐ போன்றவற்றால் அல்ல. குடும்பத்தின் தனிப்பட்ட புலனாய்வுகளும்கூட உதவவில்லை ” என்று மெலனியின் குடும்பத்தினர் தங்களது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

கூடுதலாக அதிகாரப்பூர்வமான, சட்டப்படியான டிஎன்ஏ பரிசோதனை செய்திருப்பதாகவும், முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைஸ்மித்தும் அவரது குடும்பத்தினரும் நவம்பர் 26-ஆம் தேதி நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்கள்.

"இது மிகப்பெரியது, அதே நேரத்தில் அற்புதமானது" என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் ஹைஸ்மித் கூறினார்.

ஹைஸ்மித்தை பெற்றெடுத்த தாயான அப்பாடெங்கோ இவ்வளவு காலத்துக்குப் பிறகு குடும்பம் ஒன்று சேர்ந்திருப்பதை தம்மால் நம்ப முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

"நான் அவளை மீண்டும் பார்க்க மாட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன் " என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹைஸ்மித் குழந்தையாக இருந்தபோது அவரை யார் கடத்திச் சென்றார் என்ற எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் தன்னை இத்தனை ஆண்டுகளாக வளர்த்தவருக்கு தான் கடத்தப்பட்டவள் என்பது தெரியும் என்று ஹைஸ்மித் தெரிவித்தார்.

நீண்ட காலமாகிவிட்டதால் கடத்தல் தொடர்பான சட்டவரம்புகள் காலாவதியாகி விட்டாலும் இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை தொடர்ந்து விசாரிக்கப் போவதாக ஃபோர்ட்வொர்த் காவல்துறை கூறியிருக்கிறது.

இழந்துவிட்ட காலத்தை மீட்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும், ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டு வருவதாகவும் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

உதாரணத்துக்கு ஹைஸ்மித் தனது திருமணத்தை இப்போதைய கணவருடன் மீண்டும் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அப்போது அவருடைய தந்தை மணப்பெண்ணை அழைத்து வரும் சடங்கைச் செய்யலாம் என்றும் ஹைஸ்மித்தின் சகோதரிகள் வாஷிங்டன் போஸ்ட்டிடம் கூறியுள்ளார்கள்.

"இப்போது என் இதயம் நிரம்பியுள்ளது, உணர்ச்சிகளால் பொங்குகிறது. நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று சிபிஎஸ்சிடம் ஹைஸ்மித் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Science reunites kidnapped woman 51 years ago with family
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X