சாட்ஜிபிடி ஏஐயிடம் தப்பித்தவறி இந்த கேள்விகளை கேட்றாதீங்க! அப்புறம் நடக்கறதே வேற.. கவனம்
சென்னை: சின்னதாக தலைவலி வந்தாலும் சரி, ஏதாவது சந்தேகம் வந்தாலும் சரி.. உடனே சாட்ஜிபிடி, ஜெமினி, குரோக் போன்ற ஏஐகளை நாடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் போக்கு இன்றைய ஜென்சி தலைமுறையினர் இடையே அதிகம் உள்ளது. ஏஐகள் உண்மையில் எவ்வளவோ பயனுள்ளதாக இருந்தாலும் சில விஷயங்களை அதில் கேட்பது சிக்கலாக அமையும். அதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தகவல் தொழில் நுட்ப துறையில் பெரும் புரட்சியையே ஏஐ ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு சிறிய சந்தேகமாக இருந்தாலும் சரி.. தகவல் தேவைப்படாலும்சரி.. உடனடியாக ஏஐயிடம் கேட்டு விவரம் தெரிந்து வருகிறார்கள். சாட்ஜ்பிடி, குரோக், ஜெமினி உள்ளிட்ட ஏஐ மாடல்கள் சர்வதேச அளவில் ஏஐ துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம்
வெறும் சந்தேகங்கள் மட்டுமின்றி சொந்தக்கதை, சோகக்கதைகளை கூட ஏஐயிடம் சொல்லி பலரும் புலம்புவதை பார்க்க முடிகிறது. ஆனால் சில கேள்விகளை ஏஐயிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் அத்துறை சார்ந்த நிபுணர்கள்.
அதில் முதாவது விஷயம், நமது தனிப்பட்ட விவரங்கள். சாட்ஜ்பிடி போன்ற ஏஐகளிடம் பகிரும் தகவல்கள் யாரிடம் பகிரப்படாது என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் அந்த தரவுகள் அனைத்தும் ஏஐ நிறுவனத்தின் சர்வர்களில் சேமிக்கப்படும். நமது வங்கி கணக்கு விவரங்கள், பிற தனிப்பட்ட விவரங்களை பகிரும் போது, அந்த தரவுகள் ஒருவேளை லீக் ஆனால் நமது விவரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதனால், நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம். எனவே, ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு விரங்கள், பாஸ்வேர்டு போன்றவற்றை பகிரக் கூடாது.
மாத்திரை பற்றிய விவரங்களை கேட்காதீங்க
அதேபோல, ஏதாவது ஒரு உடல் நல பாதிப்புகள் குறித்த சந்தேகங்கள், மருந்து மாத்திரை பற்றிய விவரங்களை ஏஐயிடம் கேட்டு அப்படியே நம்பக்கூடாது. ஏஐகளை பொறுத்தவரை, தன்னிடம் இருக்கும் தரவுகளை வைத்து தோராயமாக ஒரு பதிலை சொல்லும். எனவே இது 100 சதவீதம் துல்லியமாக இருக்காது. இல்லாத ஒன்றை இருப்பது போல கூட சில நேரம் சொல்லிவிட வாய்ப்பு உள்ளது.
எனவே, உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை ஏயிடம் கேட்டு பயந்து நடுங்குவதைவிட மருத்துவர்களை சந்தித்து ஆலோசிப்பதுதான் நல்லது. மருத்துவ வார்த்தைகளை தெரிந்து கொள்ள ஏஐ பயன்படுத்தலாம். ஆனால், நோய் பற்றி தெரிந்து கொள்ள ஏஐயை நம்புவது ஆபத்தானது.
இந்த கேள்விகளை கேட்கவே செய்யாதீர்கள்
அடுத்த முக்கியமான விஷயம் ஏஐயிடம் தப்பித்தவறி இந்த கேள்விகளை கேட்கவே செய்யாதீர்கள்.
* பாம் தயாரிப்பது எப்படி,
* கொலை செய்துவிட்டு எப்படி தப்புவது?
* ஹேக் செய்வது எப்படி?
போன்ற கேள்விகளை கேட்க வேண்டாம். ஏனெனில் யாராவது இதுபோன்ற வில்லங்கமான கேள்விகளை கேட்டால் உடனே அந்த அக்கவுண்ட் நோட் செய்யப்படும். விளையாட்டாக இல்லாமல் தீவிரமாக தேடினால் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தகவல் போக வாய்ப்பு உள்ளது. பிறகு ஜெயிலில் போய் களிதான் திங்க வேண்டியிருக்கும்.
சொந்த முடிவுகளை கேட்காதீங்க
அடுத்ததாக, நமது சொந்த முடிவுகளை ஏஐயிடம் கேட்டு முடிவு செய்வதை தவிர்த்துவிடுங்கள். அதாவது, நான் காதலியை கைவிடலமா? இந்த தொழில் தொடங்கலமா? போன்றவற்றை ஏயிடம் கேட்டு முடிவு செய்யாதீர்கள். ஏனெனில் ஏஐ என்பது வெறும் தரவுகளை வைத்து முடிவை சொல்லும் ஒரு இயந்திரம். அதற்கு நம்முடைய வாழ்க்கையை பற்றியோ, குடும்ப சூழல் பற்றியோ எதுவும் தெரியாது.
ஏஐ மாடல்களை ஒரு பொதுவான தகவல்களை பெற்றுக்கொள்ள பயன்படுத்தலாம். நமது பணிகளை அது எளிதாக்கும்.. புதிதாக கற்றுக்கொள்ள உதவும். எனவே, அதனை ஒரு உதவியாளாரக வைத்துக்கொள்ளலாமே தவிர நமது முடிவுகளை அதனுடன் கேட்டு எடுக்கும் அளவுக்கு முதலாளியாக மாற்றிட வேண்டாம்..


Click it and Unblock the Notifications
