TNCSC நெல் அரிசியாக மாற்றப்பட்டதில் முறைகேடு.. அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் அதிரடி சோதனை!
சென்னை: தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகள் மற்றும் தொடர்புடைய 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். TNCSC நெல்லை அரிசியாக மாற்ற தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு புகாரின் பேரில் ரெய்டு நடைபெறுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலமாக நெல் மூட்டைகளை அரிசியாக மாற்ற தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 11 இடங்களில் அரிசி ஆலை உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. நவீன அரிசி ஆலைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் என 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் 9 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 11 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான டன் அரிசி இருப்பில் குறைபாடு இருந்ததும், உரிய தரப் பரிசோதனைகள் இன்றி முறைகேடுகள் நடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. முறைகேடு புகாரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்கான அரிசி தயாரிப்பதற்காக கொடுத்த 3710 மெட்ரிக் டன் நெல்லை முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்து, அரசுக்கு 22.20 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் மணப்பாறை அரிசி ஆலை உரிமையாளர் சண்முகம், அவரது மனைவி வனிதா, மகன் ரங்கராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
