அடேங்கப்பா.. திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.10 கோடி நன்கொடை..அள்ளித்தந்த நெல்லை பக்தர்கள்
திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் அதிகபட்ச நன்கொடை நெல்லை பக்தர்களால் வழங்கப்பட்டுள்ளது. பத்து கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளனர்.
திருப்பதி: ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூபாய் பத்து கோடி ரூபாய் நன்கொடையாக அள்ளிக்கொடுத்துள்ளனர் நெல்லை பக்தர்கள். திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் அதிகபட்ச நன்கொடை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக புகழ்பெற்ற வைணவ திருத்தலமான திருப்பதியில் மலை மீது அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக , பெரும்பாலான மாதங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்ததையடுத்து, பிப்ரவரி மாதம் முதலே திருமலையில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

குவியும் பக்தர்கள்
கோடை விடுமுறை என்பதால் மே மாதத்தில் ஆன்லைன் கட்டண தரிசனம், இலவச தரிசனம் என தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இரண்டு நாட்கள் வரை காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து ஊர் திரும்புகின்றனர்.

உண்டியல் காணிக்கை
தினமும் சராசரியாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைக்கிறது. தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பத்திரங்களை தவிர, தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு உலகமெங்கிலும் உள்ள பக்தர்கள் ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் காணிக்கை வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

கோடிக்கணக்கில் காணிக்கை
திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபரும் பக்தருமான கோபால் பாலகிருஷ்ணன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிராணதான திட்டம், கோ சம்ரக் ஷன திட்டம், தேவஸ்தான எலும்பு சிகிச்சை மருத்துவமனை , வேத பரிரத்ஷன அறக்கட்டளை, அன்னபிரசாத திட்டம், சர்வ ஸ்ரேயாஸ் திட்டம், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஆகிய 7 திட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.7 கோடி நன்கொடை வழங்கினார்.

ஒரே நாளில் ரூ.10 கோடி காணிக்கை
மேலும், திருநெல்வேலியைச் சேர்ந்த ஏ-ஸ்டார் டெஸ்டிங் அண்ட் இன்ஸ்பெக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தேவஸ்தான வித்யாதன திட்டத்துக்கு ரூ.1 கோடி, பாலகிருஷ்ணா பெட்ரோல் பங்க் சார்பில் கோயில் கட்டும் திட்டத்துக்கு ரூ. 1 கோடி, ஸீ-ஹப் இன்ஸ்பெக்ஷன் சர்வீசஸ் சார்பில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாரம்பரிய அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி என மொத்தம் ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது. தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் ரூ.10 கோடி நன்கொடை பெறப்படுவது இதுவே முதல்முறை என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியுள்ளார்.

காணிக்கை செலுத்துவது ஏன்?
ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுதவிர, பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை, தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மூலமும் தேவஸ்தானத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. இந்த வருமானம் அனைத்தும், ஏழுமலையான், தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது.

கடன் வாங்கிய பெருமாள்
இதன்பின்னால் ஒரு புராண கதை உள்ளது. பிருகு முனிவர் தனது பதியான நாராயணரை மிதித்ததையும், அந்த கால்களை நாராயணர் பிடித்து விட்டதையும் பார்த்து கோபமுற்ற லட்சுமிதேவி பூலோகம் வந்து விட்டார். இங்கு ஆகாசராஜனின் மகளாக பத்மாவதி என்ற திருப்பெயருடன் அவதரித்தார். வைகுண்டத்தில் லட்சுமிதேவி இல்லாததால் அவரை கரம் பிடிக்க ஸ்ரீநிவாசனாக பூலோகத்தில் அவதரித்தார் நாராயணர். லட்சுமிதேவி உடனில்லாததால் நாராயணரிடம் செல்வம் இல்லை. எனவே, பத்மாவதியை மணப்பதற்காக, குபேரனிடம் கடன் பெற்றார். கலியுகம் முடியும் வரை, தான் பெற்ற கடனுக்கு, வட்டி செலுத்துவதாகவும், வாக்களித்தார். அதன்படியே, பக்தர்களின் காணிக்கை அனைத்தும், ஏழுமலையானின் கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. பெருமாள் கடன் அடைப்பதற்காக காணிக்கையை அள்ளிக்கொடுக்கின்றனர் பக்தர்கள். பக்தர்கள் காணிக்கை செலுத்தினால் அது பல மடங்காக பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.












Click it and Unblock the Notifications