For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐப்பசி பவுர்ணமி : தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் #அன்னாபிஷேகம் - பக்தர்கள் பரவச தரிசனம்

Google Oneindia Tamil News

மதுரை: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. அன்னாபிஷேகம் முடிந்த உடன் கொடுக்கப்பட்ட பிரசாதத்தை பக்தர்கள் பரவசத்துடன் பெற்று உண்டனர். தஞ்சை பெருவுடையார் ஆலயத்திலும், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்திலும் மிகப்பெரிய லிங்கத் திருமேனிக்கு ஆயிரம் கிலோ பச்சரிசி சாதம் சமைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 1000 கிலோ காய்கறிகளால் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது வழக்கம். அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரு பகுதி அன்னம் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு உயிரினங்களுக்கும் உணவாக வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று 12.11.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண், பெண் திருமணத்தடை நீக்கும் ஹோமங்களுடன் சந்தான பாக்ய ஹோமம் நடைபெற்றது.

சிவன் ராகு கேதுவிற்கு அபிஷேகம்

சிவன் ராகு கேதுவிற்கு அபிஷேகம்

பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று மாலை ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் உணவு குழலில் ஏற்படும் தோஷங்கள் அகலவும், ராகு கேதுவினால் ஏற்படும் தடைகள் விலகவும், அன்னதோஷம் அகலவும், குடும்பத்தில் பல்வேறு விதமான சுப காரியங்கள் நடைபெறவும், தன தானிய சம்பத்து பெருகவும், ஆண், பெண் திருமணத்தடைகள் விலகவும், சந்தான பாக்யம் கிடைக்கவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார்.

அண்ணாமலையாருக்கு அபிஷேகம்

அண்ணாமலையாருக்கு அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. மூலவர் கருவறையிலும், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் சாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவிலில் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை. அதன்பிறகு அன்னாபிஷேகத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆயிரம் கிலோ சாதம்

ஆயிரம் கிலோ சாதம்

அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி அருகே அமைந்துள்ளது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில். தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் கொண்டது கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில். இங்குள்ள லிங்கம் 13.5 அடி உயரம், 62 அடி சுற்றளவு கொண்டது. இந்த கோயிலில் ஐப்பசி அசுவினி நாளில் 100 மூட்டையால் 1000 கிலோ சாதம் வடித்து அன்ன அபிஷேகம் செய்யப்பட்டது.

அன்னத்தால் அலங்காரம்

அன்னத்தால் அலங்காரம்

முன்னதாக பிரகதீஸ்வரருக்கு ருத்ர ஹோமம், மகா அபிஷேகம் நடைப்பெற்றது. இந்த அபிஷேகத்தில் கோயிலில் உள்ள பிரகன்நாயகி, மகிஷாசுரமர்த்தினி, சண்டிகேஸ்வர் ஆகியோருக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பழங்கள் உள்ளிட்ட 21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. அதன் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பிரமாண்ட அபிஷேக நிகழ்ச்சியை காண, கோயிலை சுற்றியுள்ள பதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த அபிஷேக அலங்கார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பிரகதீஸ்வரர் ஆலயம்

பிரகதீஸ்வரர் ஆலயம்


தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி பெருவுடையாருக்கு நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் வழங்கிய 1,000 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தைக் கொண்டு 13 அடி உயரமுடைய பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், 500 கிலோ எடை கொண்ட வெண்டைக்காய், புடலங்காய், கேரட், கத்திரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, செளசெள, உருளைக்கிழங்கு, பீட்ருட், அவரைக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி உள்ளிட்ட பழங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருவுடையாரை வழிபட்டனர். இதையடுத்து, இரவில் அலங்காரம் கலைக்கப்பட்டு, அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் தரிசனம்

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆட்சீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. தொண்டை மண்டலத்தில் முக்கிய சிவன் கோயிலாக, இரு கருவறைகளைக் கொண்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயில் உள்ளது. ஆட்சீஸ்வர பகவானுக்கு 250 கிலோ சாதத்தாலும், காய்கறி, பழ வகையாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்ட அன்னப்படையல் கோயில் வளாகத்தில் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயில் திருக்குளத்து நீரில் கரைக்கப்பட்டது.

அன்னத்தால் அபிஷேகம்

அன்னத்தால் அபிஷேகம்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கும்ப பூஜையும், சிறப்பு யாகமும், அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. மதியம் 12 மணிக்கு நெல்லையப்பருக்கு அன்னத்தால் அபிஷேகம் நடந்தது. பகல் 12.30 மணிக்கு அன்னத்தால் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உள்ள மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

கபிலேஸ்வர மூர்த்திக்கு அபிஷேகம்

கபிலேஸ்வர மூர்த்திக்கு அபிஷேகம்

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை கபிலேஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின், அவருக்கு அன்னத்தால் கவசம் வைக்கப்பட்டது. அப்போது சங்கு, பேரிகை உள்ளிட்டவை முழங்கப்பட்டன. கபிலேஸ்வர சுவாமிக்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி உள்ளிட்டவை காண்பிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டு அன்னாபிஷேகத்தில் கபிலேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தனர்.

English summary
Annabishekam was performed to Sivalingams on the occasion of Aippasi Pournami in TamilNadu on Tuesday.A tonne of rice was used to decorate the big Sivalingam at Brihadeeswarar Temple in Thanjavur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X