சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் - கொரோனா ஒழிய பெண் பக்தர் பிராத்தனை
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் பெண் ஒருவர் 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையை அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.
திருவண்ணாமலை: கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய வேண்டும் என்பதற்காக பெண் பக்தர் ஒருவர் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையை அங்கப்பிரதட்சணமாக வலம் வந்துள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். சித்ரா பவுர்ணமி அன்றும் கார்த்திகை தீப பௌர்ணமி அன்றும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்வார்கள்.
கிருதயுகத்தில் அக்னிமலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் வரை பரவி உள்ளது கிரிவலப்பாதை. இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய எட்டு லிங்கங்களை கிரிவலப் பாதையில் நம்மால் தரிசிக்க முடியும்.

கிரிவலம் நன்மைகள்
கிரிவலம் மனதுக்கும், உடலுக்கும் வலு சேர்க்கிறது. கிரிவலம் முழுவதும், மனம் முழுக்க சிவப்பெருமானை தாங்கி ஓம் நமச்சிவாய என சொல்லிக் கொண்டே வலம் வர, நம் பாவங்கள் நீங்குகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 15 மாதங்களுக்கு மேலாக பக்தர்களால் திருவண்ணாமலையில் கிரிவலம் வர முடியாமல் உள்ளது.

கிரிவலம் வந்த பக்தர்
கொரோனா பெருந்தொற்று காரணமாக கிரிவலம் செல்ல முடியாமல் இருப்பது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் பீமவரம் ஊரைச் சேர்ந்த மாதவி என்ற பெண் பக்தர்கள் கொரோனா வைரஸ் ஒழிய அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

அண்ணாமலையார் பக்தர்
ஆந்திராவில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார் மாதவி. 45 வயதாகும் மாதவி அண்ணாமலையாரின் தீவிர சிவ பக்தரான இவர் பாடல் பெற்ற சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்து வருகிறார். அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பால் 15 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கி விட்டார்.

ஆன்மீக சேவை
தனது பெயருக்கு முன்னால் அருணாச்சலம் என்பதையும் சேர்த்துக் கொண்டு ஆன்மீக பணியாற்றி வருகிறார். அன்னதானம், வஸ்திரதானம் வழங்கி ஆன்மீக சேவையாற்றி வரும் அருணாச்சல மாதவி ஏழை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறார்.

கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம்
63 நாயன்மார்கள் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறார். பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்குச் சென்று உலக நன்மைக்காக அங்கப்பிரதட்சணம் செய்துள்ள அருணாச்சல மாதவி திருவண்ணாமலையிலும் 3 முறை அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறார்.

கொரோனா ஒழிய பிரார்த்தனை
தற்போது 4வது முறையாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் குணமடைந்து சுபிட்சமாக வாழ திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். சுட்டெரிக்கும் வெயிலில் அவர் அண்ணாமலையார் மலையை சுற்றி உருள் வலம் வந்த போது அவரது உதடுகள் அருணாசலம் அருணாசலம் என்று உச்சரித்துக்கொண்டே இருந்தது.

கொரோனா ஒழிய பிரார்த்தனை
செய்தியாளர்களிடம் பேசிய மாதவி, உலக மக்கள் எல்லாம் 2 வருடமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மதிப்புமிக்க உயிர்கள் பறி போய் விட்டது. இது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது. இனிமேல் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடாது என அண்ணாமலையாரை வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்துள்ளேன். என்றார்.












Click it and Unblock the Notifications