Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் ஆவணி மூலத் திருவிழா: தவமிருந்த நாரைக்கு முக்தி அளித்த சிவபெருமானின் திருவிளையாடல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும், ஆவணி மூலத் திருவிழாவில் நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடைபெற்றது. கோவில் பொற்றாமரைக்குளத்திலே நீர்வாழ் உயிர்கள் எதுவும் உயிர்வாழக்கூடாது என்று இறைவனிடம் வரம் கேட்டு பெற்றது நாரை. நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் வசிப்பதில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறும். இங்குள்ள மீனாட்சி அம்மனையும் சிவபெருமானையும் தரிசனம் செய்யவும் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மிகவும் சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காலமாக இருப்பதால் பக்தர்கள் அனுமதி இன்றி திருவிழாக்களை நடைபெற்று வருகின்றன.

ஆவணி மூல திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகள் புதன்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகின்றன. முதலில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது. நேற்று காலையில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடைபெற்றது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் நாரைக்கு முக்தி அளித்த சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் அன்னவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

 Madurai Avani Moola festival : Sivaperuman Tiruvilayadal Day 2 - Naraikku Mukthi Kodutha leelai

நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலை குறித்த புராண வரலாறு:

பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட குளம் ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால் தடாகத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே அத்தடாகத்தில் மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது.

உணவு தேடி பல பகுதிகளுக்கு சென்றது. ஒரு காட்டில் சிவனடியார்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் தடாகம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அத்தடாகத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது. அத்தடாகத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன. அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த நாரை இதுதான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது.
அங்கே துள்ளிக்குதித்த மீன்கள் முனிவர்கள் மீதும் விளையாடின. அதைப்பார்த்த நாரை, அடடா அந்த மீன்களை நான் சாப்பிடக்கூடாதே என்று நினைத்து பட்டினி கிடந்தது. தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம் சத்தியன் என்ற முனிவர் மதுரையின் பெருமைகளையும், சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

அதைக்கேட்ட நாரைக்கு மனமாற்றம் ஏற்பட்டது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரிக்கவே காட்டை விட்டு மதுரைக்கு வந்தது. மதுரையை அடைந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டது. பதினைந்து நாட்கள் வழிபட்ட சைவமாக எதையும் சாப்பிடலாம் இருந்த நாரைக்கு பதினாறாம் நாள் சோதனை காத்திருந்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும்போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனை கொத்தி சாப்பிடும் ஆசை ஏற்பட்டது.

சொக்கநாதர் தரிசனமே முக்கியம். மீன் தேவையில்லை என்று எண்ணி மனதை மாற்றிக்கொண்ட நாரை 16ஆம் நாளும் பக்தியோடு வழிபட்டது. இறைவன் நாரைக்கு காட்சி கொடுத்தார் சிவபெருமான். நாரையே உன் வேண்டுதல் என்ன என்று கேட்டார். அதற்கு நாரையோ இந்த பிறவியை விட்டு நீங்கி சிவ லோகத்தில் உமக்கு சேவை செய்ய வேண்டும் என்று கேட்டது.

 Madurai Avani Moola festival : Sivaperuman Tiruvilayadal Day 2 - Naraikku Mukthi Kodutha leelai

பொற்றாமரைக்குளத்தில் மீன்களோ பிற உயிரினங்களோ வசிக்கக் கூடாது. ஏனென்றால் இங்கு வசிக்கும் உயிரினங்களை பிடித்து சாப்பிட்டால் பாவம் வரும் என்றது. இதைக்கேட்ட சிவன் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். உடனே நாரை சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்தது.

நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போயின. பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதே நாரைக்கு முக்தி கொடுத்த படலம் கூறும் கருத்தாகும்.

மாணிக்கம் விற்ற லீலை

திருவிளையாடல் லீலைகளில் மூன்றவது நாளான இன்றைய தினம் மாணிக்கம் விற்ற லீலை நடைபெற்றது. அதற்கான புராண கதையைப் பார்க்கலாம்.

மதுரையை வீரபாண்டியன் என்ற மன்னன் நீதியுடன் ஆட்சி புரிந்தான். அவனுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். ஒரு சமயம் அரசன் வேட்டையாட சென்ற போது புலிக்கு இரையாகி இறந்தான். அந்த நேரத்தில் அரசனது மற்ற மனைவியின் மக்கள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், மணிமகுடத்தையும் கவர்ந்து சென்றனர். அப்போது இளவரசனுக்கு முடிசூட அமைச்சர்கள் முடிவு செய்தனர். ஆனால் அரண்மனையில் இருந்த மணிமகுடம் உள்ளிட்டவை களவு போனதை அறிந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சோமசுந்தர பெருமானிடம் சென்று வேண்டினர்.

அவர்களின் வேண்டுதலை ஏற்று சோமசுந்தர பெருமானே ஒரு நவரத்தின வியாபாரியாக தோன்றி அங்கு வந்து நடந்ததை கேட்டறிந்தார். பின்னர் அவர் புதிய மணிமகுடம் செய்ய விலை உயர்ந்த நவமணிகளை கொடுத்து, அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார்-யார் எந்த மணியை அணிய வேண்டும்? என்பனவற்றையும் கூறினார். மேலும் புதிய மகுடத்தை இளவரசனுக்கு சூட்டி அவரை அபிடேகபாண்டியன் என்று அழையுங்கள் என்று கூறி இறைவன் மறைந்தார். அதன்பின்னர் கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைத்தது. பாண்டிய நாட்டு மக்கள் நலமுடன் வாழ்ந்தார்கள். அபிடேக பாண்டியனும் சிறப்பாக ஆட்சி புரிந்தான் என்று புராண வரலாறு கூறுகிறது.

14ஆம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 15ஆம் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 16ஆம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெற உள்ளது. 17ஆம் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 18ஆம் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 19ஆம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 20ஆம் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. கொரோனா காரணமாக கோவிலை விட்டு வெளியே சுவாமி புறப்பாட்டிற்கு தடை உள்ளதால் திருவிழாக்கள் மற்றும் திருவிளையாடல் லீலைகள் அனைத்தும் ஆடி வீதியில் நடைபெறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+