• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

மார்கழி பாவை நோன்பு : திருப்பாவை, திருவெம்பாவை - 4

Google Oneindia Tamil News

திருப்பாவை - பாடல் 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்

மழை பொழிவதற்கு காரணக் கடவுளான வருண தேவனே..! நீ கடலுக்குள் புகுந்து நீரை எடுத்துக் கொண்டு மிகுந்த ஒலியுடன் இடி இடித்து ஆகாயத்தில் ஏறி ஊழிக்காலத்தில் அனைவரையும் அனைத்தையும் படைத்த முதல்வனான திருமாலின் திருமேனியைப் போல் உன் உடல் கறுத்து, வலிமையும் அழகும் உடைய பத்மநாபனின் கையில் இருக்கும் சுதர்சனச்சக்கரத்தைப் போல் மின்னி அவனது மற்ற கையில் இருக்கும் வலம்புரி சங்கைப் போல் எப்போது நின்று அதிர்ந்து முழங்கி, தயக்கமே இல்லாமல் அவன் கையில் இருக்கும் சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து கிளம்பும் அம்பு மழையைப் போல் நாங்கள் வாழ மழையாகப் பெய்ய வேண்டும். நிரம்பி வழியும் நீர் நிலைகளில் நாங்களும் மகிழ்ச்சியாக மார்கழி நீராடுவோம்! என்று திருப்பாவையில் கூறுகிறாள் ஆண்டாள்.

Margazhi masam : Tirupavai, Tiruvempavai songs - 4 19-12-2021

திருவெம்பாவை - பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண்ணோ, அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்று கேட்கிறாள்.

எழுப்ப வந்த பெண்களோ, எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும். அதுவரையும் கண் உறங்கிக் காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதமானவனை, மறைகள் பேசுகின்ற மேலான பொருளை, கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து, உள்ளம் உடைந்து நின்று உருகுகின்றோம். ஆதலால் நாங்கள் எண்ணிக் கூற இயலாதவர்களானோம். நீயே வந்து எண்ணிக்கொள்! எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு! என்று சொல்கின்றனர்.

மாயையில் சிக்கிக் கொண்ட மனம், சோம்பலில் தொடர வேண்டி எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதனை அதன் போக்கில் விடாது, முயற்சி செய்து, இறைவனை நோக்கித் திருப்ப வேண்டும் என்று பக்தர்ளுக்கு உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.

[ அத்தியாயம் : 1, 2 3 ]

English summary
Margazhi month on December 18,2021 Thirupavai and Thiruvempavai has begun in the Vishnu and Siva temples all over Tamil Nadu. here is the song of Tirupavai and Tiruvempavai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion