Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்கழி மாத விரதம் :திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 1

மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கு உரிய மாதம் இந்த மாதத்தில் பெண்கள் ஏற்கும் விரதம், பாவை நோன்பு ஆகும். திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி இறைவனை வணங்குவார்கள். இதன் மூலம் மனதிற்கு பிடித்த கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்

Subscribe to Oneindia Tamil

மதுரை : மார்கழி மாதம் பிறந்து விட்டது. மார்கழி நோன்பு கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். இந்த நாட்களில் திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடி இறைவனை பெண்கள் வழிபடுகின்றனர்.

கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர்.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை. இந்த பாடல்களை நமது வாசகர்களுக்காக 30 நாளும் அளிக்கிறோம்.

Margazhi masam : Tirupavai, Tiruvempavai songs

திருப்பாவை 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்

மார்கழி மாதம் பாவை நோன்பு இருக்கும் பெண்களை எழுப்பும் போது கண்ணனின் அழகைப் பெண்கள் பாடுகின்றனர். கதிரவனைப் போன்ற ஒளி பொருந்தியவன், குளிர் நிலவைப் போல முகம் கொண்டவன் என்று வர்ணித்து நோன்பு நோக்க அழைக்கின்றனர் பெண்கள். மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற வீரம் நிறைந்த மகன். அவனுக்கு கரிய மேகத்தைப்போன்ற மேனி அதிலேயே அவன் கருணாசாகரனாக காட்சி தருகிறான். தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவன். அவனுக்கு கதிரவனைப் போல பிரகாசமாகவும், அதே நேரத்தில் குளிர் மதிபோல அழகிய வாத்ஸல்யம் நிரம்பிய முகம்!. அந்த நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள். பக்தி யோகமே இறைவனின் அருளைப் பெறவும், அவனை அடையவும் சிறந்த மார்க்கமாக, திருப்பாவையின் முதல் பாடல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

Margazhi masam : Tirupavai, Tiruvempavai songs

திருவெம்பாவை பாடல் - 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

திருவெம்பாவை பாடல்களை, மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் போது பாடினார். மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்று இறைவனை வழிபட்டனர். திருவெம்பாவை முதல் பாடல், பாவை நோன்பு நோற்கும் பெண்கள் வழிபாடு மேற்கொள்ள, உறங்கிக் கொண்டிருக்கும் தங்களுடைய தோழியை எழுப்புவதாக அமைந்துள்ளது.

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அருட் பெருஞ்சோதியை உடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்றனையோ? உன் காது என்ன செவிடாகி விட்டதா?. அந்த மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி கேட்டு தெருவில் சென்ற எங்கள் தோழி ஒருத்தி விம்மி அழுது, பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சித்துக் கிடந்தாள். ஆனால், என் தோழியே நீ இன்னமும் உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனை வாழ்த்திப் பாட உடனே எழுந்து வருவாயாக! என்று அழைக்கின்றனர்.

உலக உயிர்கள் அனைத்திற்கும் தோற்றமும், முடிவும் உண்டு. ஆனால் உலகின் பரம்பொருளான சிவபெருமானோ முதலும், முடிவும் இல்லாதவர். திருவண்ணாமலையில் திருமாலும் பிரம்மனும், சிவப் பரம்பொருளின் அடி முடியை தேடி சென்ற போது, காண்பதற்கு அரிய பெரிய ஜோதி வடிவமாக அவர் காட்சியளித்தார்.

ஜோதி வடிவமான இறைவனான சிவபெருமானின் பெருமைகளை பாடல்களாக பாடிக் கொண்டு, பெண்கள் நோன்பு நோற்க வீதி வழியாக அதிகாலையில் செல்கின்றனர். அப்பெண்களின் தோழி ஒருத்தி, இறைவன் மீது பாடப்பட்ட பாடல்களைக் கேட்டும் விழிக்காமல் பொய் தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

அதனைக் கண்டதும் அப்பெண்கள் தோழியை நோக்கி ,'வாள் போன்று நீண்ட கண்களை உடையவளே, இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே?' என்கின்றனர். அவள் பதில் ஏதும் கூறாததால், 'இறைவனின் புகழினை பற்றி நாங்கள் பாடும் பாடல்கள், உன்னுடைய காதுகளில் கேட்காதளவுக்கு உன்னுடைய காதுகள் செவிடாக மாறிவிட்டனவா?' என்று சற்று கடுமையாக கேட்கின்றனர்.

தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்கும் மகாதேவனான சிவபெருமானின், வீரக்கழல்களை வாழ்த்தி சரணடைவதைப் பற்றி நாங்கள் வீதியில் பாடுவதைக் கேட்டதும், பெண் ஒருத்தி விம்மி விம்மி அழுதாள்.
தன்னை மறந்தாள். தான் படுத்திருந்த மலர்ப் படுக்கையை விட்டு கீழே தரையில் விழுந்து மூர்ச்சையாகிக் கிடக்கிறாள். அவளுடைய இந்த நிலையைக் கண்டு என்னே! என்னே! என்று எல்லோரும் வியக்கிறார்கள்.
ஆனால் நீயோ இறைவனைப் பாட வராது, பொய்யுறக்கம் கொள்கின்றாய். இத்தன்மையை நாங்கள் என்னவென்று கூறுவோம்? என்று பாடி அழைக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+