நவராத்திரி: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் வரும் 17 வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை
தேசிகர் பிரம்மோற்சவத்தையொட்டி திங்கட்கிழமை முதல் 17ஆம் தேதி வரை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்: தேசிகர் பிரம்மோற்சவம் நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் திங்கட்கிழமை முதல் 17ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பலர் மொட்டையடித்து நேர்த்திக்கடனும் செலுத்துவார்கள். தற்போது பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நடைபெறுவதால், கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.

கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.
ஆண்டுதோறும் புரட்டாசி 3வது சனிக்கிழமை அன்று கோவிலில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாட்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள். இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் புரட்டாசி மாதத்தில் முக்கிய விழாவாக தேவநாதசாமியின் பக்தராக இருந்து தியானம் செய்து முக்தி அடைந்த தேசிகர் மகா உற்சவம் நடக்கிறது.
தினமும் காலை மற்றும் மாலையில் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், பிள்ளைகிளை வாகனம், சந்திர பிரபை, மோகன அவதாரம், வெள்ளி சிம்ம வாகனம், வெண்ணைத்தாழி சேவை, யானை வாகனம், சூர்ணாஅபிஷேகம், தங்க விமானம், பேட்டை உற்சவம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திங்கட்கிழமை முதல் 17ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில், திங்கட்கிழமை முதல் வருகிற 17ஆம் தேதி வரை தேசிகர் பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையான கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி கோவில் பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டு, கோவில் வளாகத்திற்குள் குறைந்தளவு பணியாளர்களை கொண்டு சாமி உள்புறப்பாடு நடைபெறும். மேலும் பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், கொரோனா நோய் தொற்றுக்கு வழிவகுக்கும். அதனால் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் 17ஆம் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு தடை செய்யப்படுகிறது.
ஆனால் மேற்படி திருவிழா காலத்தில் கோவில் வளாகத்தில் சுவாமி உள்புறப்பாடு நடைபெறும் நேரத்தை தவிர்த்து, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா 3வது அலை பரவலை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை கருதியும் வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் அரசு உத்தரவுபடி ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கான தடை உத்தரவு என்பது தொடரும். அந்நாட்களிலும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
இன்று முதல் 17ஆம் தேதி வரையிலான விழா காலகட்டங்களில் சிறப்பு தரிசனத்தின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் பட்சத்தில் முழுவதுமாக பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
இந்த கோவிலில் புரட்டாசி மாதம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும். மற்ற மாதங்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு சாற்றப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும்.












Click it and Unblock the Notifications