
நிறைபுத்தரிசி பூஜை..சபரிமலையில் கனமழையால் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்..குமரியில் பக்தர்கள் கோலாகலம்
பத்தனம் திட்டா: நிறைபுத்தரிசி பூஜை இன்று சபரிமலையில் விமரிசையாக நடைபெற்றது. கனமழை காரணமாக சபரிமலை கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று பத்தனம்திட்டாவில் ரெட் அலர்ட் அறிவித்துள்ளதால் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. சன்னிதானத்தில் இருந்து பக்தர்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும் இந்த ஆண்டு இந்த நிறைவுத்தரிசி பூஜை விழா இன்று கேரளா முழுவதும் நடத்த ஜோதிட பண்டிதர்கள் நாள் குறித்தனர். நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் நேற்று நடை திறக்கப்பட்டது.

கேரளாவில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று பத்தனம்திட்டாவில் ரெட் அலர்ட் அறிவித்துள்ளதால் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. சன்னிதானத்தில் இருந்து பக்தர்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டங்களில் நிறைபுத்தரிசி பூஜை
நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக குமரி மாவட்ட கோவில்களில் ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு பூஜை தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரியில் அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்தினர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. பின்னர் அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக் கிரீடம், வைரக்கல், மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலிலும் இன்று நிறை புத்தரிசி பூஜை விமரிசையாக நடத்தப்பட்டது. கோவில் முன்பு வயல்களில் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த நெற்கதிர்கள், சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து நிறை செய்யப்பட்ட நெற்கதிர்கள் கோவில் மண்டபத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு கோவிலின் உட்புறத்தில் உள்ள மும்மூர்த்திகள், மூலவர், தாணுமாலயசுவாமி ஆகியோருக்கு படைக்கப்பட்டது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. இதனைப் பெற மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 5.30 மணிக்கு உஷபூஜை, 6 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நிறைபுத்தரிபூஜையை முன்னிட்டு சாமி சன்னதியில் நெற்கதிர்கள், மாவிலை, நொச்சி, உழிஞை உள்ளிட்ட மூலகைகள் படைக்கபட்டு பூஜைகள் நடைபெற்றது. அதைதொடர்ந்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதிகாலையில் நடைபெற்ற இந்த பூஜையில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளா தமிழகத்தில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று நெற்கதிர்களை பெற்று சென்றனர். நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.