ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆடித்திருவிழா கொடியேற்றம் - தேரோட்டம் ரத்து, 12ல் திருக்கல்யாணம்
ராமேஸ்வரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று முதல் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி ராமநாதஸ்வாமிக்கும், பர்வதவர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 10 மணி அளவில் கோவிலில் அம்மன் சன்னதி எதிரே மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து புனித நீரால் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் கொடி மரத்திற்கு எதிரே சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்த பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்தது. மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் ஆடித்திருவிழா
கொரோனா பரவல் தடுப்பு தட்டுப்பாடு காரணமாக ராமேஸ்வரம் கோவிலில் நேற்று முதல் நாளை வரை பக்தர்கள் தரிசனம் செய்ய விதிக்கப்பட்ட தடை காரணமாக பக்தர்கள் இல்லாமலே நேற்று கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிகுமார், தக்கார் ராஜாகுமரன்சேதுபதி, ராணி லட்சுமிகுமரன் சேதுபதி, மேலாளர் சீனிவாசன் மற்றும் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் கமலநாதன், கலைச்செல்வன், செல்லம், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவிலுக்குள் சுவாமி உலா
திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் அம்பாள் தங்கப்பல்லக்கு மற்றும் பல விதமான வாகனங்களில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி நான்கு ரத வீதிகளை வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் கட்டுப்பாடு தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆண்டு திருவிழாவில் நடைபெறும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள்பகுதியில் 3ஆம் பிரகாரத்தில் நடைபெறுகிறது.

சுவாமி தீர்த்தவாரி
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று கோவிலில் இருந்து சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனாபரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடு காரணமாக சாமி அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் கோவிலின் உள்ளேயே உள்ள சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி பூஜை நடைபெற்று கோவிலின் 3ஆம் பிரகாரத்தில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருத்தேரோட்டம் ரத்து
வரும் 9ஆம் தேதி அன்று நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ள அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் ராம தீர்த்தம் தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி கோவிலில் வருகிற 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

சுவாமி அம்மன் திருக்கல்யாணம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி-அம்பாள் திருக்கல்யாணம் 12ஆம் தேதி இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக 17ஆம் தேதி சாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கெந்தமாதன பர்வதம் மண்டகபடிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறது. கடந்த ஆண்டும் ராமேசுவரம் கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள்பகுதியில் நடைபெற்றதுடன் தேரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications