நெருப்பு வளைய கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது...பயப்படத் தேவையில்லை
இந்த ஆண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம் வியாழக்கிழமை நிகழ்கிறது. வானத்தில் நெருப்பு வளையமாக தோன்றப்போகும் சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.
சென்னை: 2021ஆம் ஆண்டின் சூரிய கிரகணம் ஜூன் 10ஆம் தேதி நிகழ்கிறது. இது கங்கண சூரிய கிரகணமாகும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் இங்குள்ளவர்களுக்கு தோஷம் ஏற்படாது எனவே எந்த ராசி நட்சத்திரக்காரர்களும் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுவது கிரகணம் ஆகும். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக அமாவாசை நாட்களில் தான் சூரிய கிரகணம் ஏற்படும்.
பகலிலேயே சூரிய ஒளி மறைந்து வானில் இருள் தோன்றும். இந்த நிகழ்விற்கு முழு சூரிய கிரகணம் என்று பெயர். சில நேரங்களில் நிலவால் மறைக்கப்பட்ட சூரியன் ஒரு நெருப்பு வளையம் போல் வானில் காட்சி தரும். இது நெருப்பு வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இதுபோன்ற கங்கண சூரிய கிரகணம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாளிலும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியும் கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியும் நிகழ்ந்தது.

கிரகணம் எப்போது தோன்றும்
இந்த சூரிய கிரகணமானது 23-38 வடக்கு அக்ஷாம்சம், 44-00 மேற்கு ரேகாம்சம் அமைந்துள்ள இடத்தில் பிற்பகல் இந்திய நேரப்படி 01:42:19 மணிக்கு ஆரம்பமாகிறது மாலை 06:40:54 மணிக்கு 41-26 வடக்கு அக்ஷாம்சம்,94-20 கிழக்கு ரேகாம்சம் உள்ள பகுதியில் சூரிய கிரகணம் முடிவடைகிறது. இதில் எந்த இடத்திலும் இந்திய பகுதிக்குள் வரவில்லை. எனவே, இந்த கிரகணம் இந்தியாவில் எந்த பகுதியிலும் எள்ளளவு கூட தெரியாது.

கிரகணம் தெரியும் இடங்கள்
இந்த கிரகணம் கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உள்ளவர்கள் இந்த கங்கண சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகண நிகழ்வு பிற்பகல் 01:42 மணிக்கு தொடங்கி மாலை 06:41வரை நீடிக்கும்.

ஆன்லைனில் கிரகணத்தை ரசிக்கலாம்
இந்தியாவில் வசிப்பவர்கள் சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் ஆன்லைனில் சூரிய கிரகணத்தை நேரில் ஒளிபரப்ப உள்ளனர். எனவே சூரிய கிரகணத்தை நேரில் பார்ப்பது போல ஆன்லைனில் பாதுகாப்பாக ரசிக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை வானியல் ரசிகர்களுக்காக நாசா ஏற்பாடு செய்துள்ளது.

தோஷ பரிகாரம் தேவையில்லை
ஒரு கிரகணமானது எந்த ஊரில் தெரிகிறதோ அந்த ஊருக்கு கிரகண தோஷம் உண்டு. அந்த ஊரில் வசிப்பவர்களுக்கு நட்சத்திரக் காரர்களுக்கும், எந்த ராசிக்காரர்களுக்கும் கிரகண தோஷம் உண்டாகும் அவர்கள் கிரகண சாந்தி செய்துகொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் கிரகணம் தெரியாததால், அங்கு வசிப்பவர்களுக்கு கிரகண தோஷம் கிடையாது. அவர்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களாயினும் அவர்களுக்கு எந்த தோஷமோ பாதிப்போ கிடையாது. அதுமட்டுமல்ல, அங்கு வசிக்கும் யாரும் கிரகண தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை.

கர்ப்பிணிகள் கவலைப்பட வேண்டாம்
இந்தியாவில் தெரியாத இந்த கிரகணத்தால், இங்குள்ள யாருக்கும், எந்த நக்ஷத்திரத்தில் பிறந்திருந்தாலும், எந்த ராசியில் பிறந்திருந்தாலும் பாதிப்பில்லை. வயதானவர்களுக்கும் பாதிப்பில்லை. கர்ப்பிணி பெண்களுக்கும் பாதிப்பில்லை. கிரகண நாளில் கர்ப்பிணிகள் தாராளமாக வெளியில் வரலாம். எப்போதும் போல் இயல்பாக தங்களின் பணிகளைச் செய்யலாம்.












Click it and Unblock the Notifications