For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகா சிவராத்திரியில் சிவாலய ஓட்டம்... குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மகா சிவராத்திரியில் சிவாலய ஓட்டம்-வீடியோ

    சென்னை: ஹரியும் சிவனும் ஒன்றே என்ற சைவ வைணவ இணைப்புத் தத்துவத்தை உணர்த்துவதே இந்தச் சிவாலய ஓட்டம். மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகாசிவராத்திரி நாளில் சிவ ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெறும். அதே நேரத்தில் குமரி மாவட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா... கோபாலா என்று திருநாமத்தை கூறிக்கொண்டே ஓடி வருவார்கள்.

    Sivalaya Ottam 2018 Pilgrimage on Maha Shivaratri

    பிப்ரவரி 13ஆம் தேதி சிவாலய ஓட்டம் தொடங்குவதால், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவித்து உள்ளார்.

    மகா சிவராத்திரியன்று பக்தர்கள் விரதம் இருந்து கன்யாகுமரி மாவட்டம் கல்குளம், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என்கிற 12 சிவாலயங்களை ஓடி ஓடி தரிசிப்பார்கள் பக்தர்கள். இதுவே சிவாலய ஓட்டம்!

    காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர். இப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை ''கோவிந்தா, கோபாலா'' என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.

    Sivalaya Ottam 2018 Pilgrimage on Maha Shivaratri

    இந்த சிவாலய ஓட்டம் எதனால் ஏற்பட்டது என்பதற்கு புராண கதை உள்ளது. இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியோர் உருவம் ஏற்றார் என்றும் சொல்வார்கள். புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது. தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால், அவரைக் கடுமையாகத் தாக்கிவிடும்.

    விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த விரும்பினார் பகவான் கிருஷ்ணன். அவர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார்.
    தர்மர் ராஜசூய யாகம் நடத்த விரும்பினார். குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அந்த புருடா மிருகத்தின் உதவியும் தேவைப்படுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருடா மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார்.

    புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் பூஜை செய்யத் தொடங்கிவிடும். அப்போது நீ தப்பித்து விடலாம்! என்று கூறினார் பகவான் கிருஷ்ணர். இப்படி பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனுடன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன் என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையைச் சொன்னார்.

    Sivalaya Ottam 2018 Pilgrimage on Maha Shivaratri

    அதன்படி, காட்டுக்குச் சென்றான் பீமன். திருமலையில் பாறை ஒன்றின் மீது அமர்ந்து, சிவபெருமானை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது பீமன், 'கோவிந்தா, கோபாலா!' என்று குரல் கொடுத்து கூவினான். இதில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. தவம் கலைத்த கோபம் ஒருபக்கம்... மகாவிஷ்ணுவின் பெயரைச் சொன்னதால் வந்த கோபம் இன்னொருபக்கம். அந்த புருஷா மிருகம், பீமனைத் துரத்தியது. பீமன் அப்போது, ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது.

    இதைக் கண்டதும் புருஷாமிருகம் கோபம் மறைந்தது. சிவபூஜை செய்ய ஆரம்பித்தது. இதையடுத்து, பீமன், 'கோவிந்தா, கோபாலா' என்று மீண்டும் குரல் எழுப்பினான். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். பீமனும் அவ்வாறே செய்தான். அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை.

    இப்படி, 11 இடங்களைக் கடந்து 12வது இடமான திருநட்டாலம் என்ற இடத்தில் ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்கு உள்ளேயும், மற்றொரு கால் வெளியேயுமாக இருந்தன. உடனே பீமன், உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு! என்றான்.

    Sivalaya Ottam 2018 Pilgrimage on Maha Shivaratri

    அப்போது, தர்மர் அங்கே வந்தார். அவரிடம் நியாயம் கேட்டனர். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், அவர் பாரபட்சம் இல்லாமல், கால்களில் ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே! என்று நியாயமாகத் தீர்ப்பு வழங்கினார். அப்போது அங்கே ஒளிப்பிழம்புடன் தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், 'அரியும் சிவனும் ஒன்றே!' எனும் தத்துவத்தை உணர்த்தினார்.
    எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்கினர். அதுமட்டுமின்றி, தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் பெரிதும் உதவியது.

    இதைக் குறிக்கும் வகையில், மகா சிவராத்திரி நாளில், சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று, மாலை அணிந்து, அன்று விரதத்தைத் தொடங்குவார்கள். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல், காவி முதலான ஆடைகள் அணிந்து புறப்படுவார்கள்.
    'கோவிந்தா... கோபாலா' என்று கோஷமிட்டுக் கொண்டே, திருமலையில் இருந்து சிவாலய ஓட்டத்தைத் தொடங்குவார்கள். இப்படியாக ஓடிக் கொண்டே 12 சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்.

    சிவாலய ஓட்ட தரிசனம், முன்பெல்லாம் ஓட்டமாகவே பக்தர்கள் சென்று தரிசித்தார்கள். ஆனால் இப்போது, ஓட்டமாகச் செல்வதுடன் இன்னும் சிலர் இரு சக்கர வாகனங்களிலும் கார் முதலான வாகனங்களிலும் வந்து 12 சிவாலயங்களையும் தரிசிக்கிறார்கள்!

    Sivalaya Ottam 2018 Pilgrimage on Maha Shivaratri

    குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ள திருமலை அருள்மிகு மகாதேவர் கோவிலில் தொடங்கும் இந்த சிவாலய ஓட்டமானது, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலான்கோடு, திருவிடைகோடு, திருவிதாங்கோடு, திருபன்னிக்கோடு, திருநட்டாலம் என பன்னிரண்டு ஆலயங்களுக்கு பக்தர்கள் செல்வார்கள்.

    இந்த சிவாலய ஓட்டம், குமரி மாவட்ட பக்தர்களால் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிவாலய ஓட்டத்தையொட்டி குமரி மாவட்டத்துக்கு பிப்ரவரி 13ஆம் தேதி நாளைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக மார்ச் 10ஆம் தேதி சனிக்கிழமை, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக இருக்கும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    English summary
    Mahashivaratri day and night, devotees perform a marathon run by visiting 12 Lord Shiva temples around in Kanyakumari District.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X