திருப்பதி ஏழுமலையானை ஒரு மணி நேரத்தில் தரிசிக்கலாம் - எப்படி தெரியுமா
பக்தர்களின் சிரமத்தினை உணர்ந்துகொண்ட திருப்பதி தேவஸ்தானம் தற்போது ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைந்து பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகின்றது.
சித்தூர்: திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து திருமலைக்கு சென்று வெங்கடாசலபதியை 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்யும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் சுமார் 990 ரூபாய் சிறப்பு கட்டணச் சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதே போல் திருச்சானூர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று அபாயம் மற்றும் கட்டுப்பாடுகளால் திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வருகைக்கு கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து, பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதால் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், தொடக்கத்தில் ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக 10,000 டிக்கெட்டுகளை மட்டுமே வழங்கி வந்த நிலையில், கடந்த மாதத்தில் அந்த எண்ணிக்கையை 25,000ஆக உயர்த்தியது. அப்படி இருந்தும் ஆன்லைனில் 20 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து விடுகின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோவில்
இதை தவிர்த்து, திருமலை திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் நாளொன்றுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கி வருகிறது. ஆனால், இந்த இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்க ஒரு நாள் முன்பாகவே சென்று காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதோடு டிக்கெட் வாங்கினாலும் குறைந்த பட்சம் 2 முதல் 3 நாட்கள் வரை காத்திருந்து தான் ஏழுமலையான தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

ஒரு மணி நேரத்தில் தரிசனம்
பக்தர்களின் சிரமத்தினை உணர்ந்துகொண்ட திருப்பதி தேவஸ்தானம் தற்போது ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைந்து பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகின்றது. அதன்படி ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தனது இணையதளத்தில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை 990 ரூபாய் ஆகும். டிக்கெட் தேவைப்படும் பக்தர்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் 990 ரூபாய் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்
அதன் பின்பு, டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட தேதியன்று ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம், திருப்பதி இரயில் நிலையத்தில் இருந்து பக்தர்களை வேன் அல்லது கார் மூலம் திருமலைக்கு அழைத்துச் செல்லும். அங்கு முற்பகல் 11 மணியளவில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் செல்லலாம். அவர்கள் 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்தில் சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வரலாம். இதற்கு 1 மணி நேரம் மட்டுமே ஆகும்.

லட்டு பிரசாதம்
திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்துவிட்டு திரும்பிய பக்தர்களுக்கு, டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதம் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி நிறுவன உதவியாளர் வாங்கிக் கொடுப்பார். அதே போல், திருச்சானூர் கோயிலிலும் அவர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அதன் பின்னர் பக்தர்கள் திரும்பவும் திருப்பதி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இத்திட்டத்தை தேவஸ்தானம் போர்டு ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications