For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு - ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை அணிந்து எழுந்தருளிய நம்பெருமாள்

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. காலை 7:00 மணி முதல் பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் இன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. காலை 7:00 மணி முதல் பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மகாவிஷ்ணுவின் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பகல்பத்து, இராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மறுநாள் டிசம்பர் 4ஆம் தேதி முதல், உற்சவ நாட்களில் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

 நம்பெருமாள் தரிசனம்

நம்பெருமாள் தரிசனம்

பகல்பத்து உற்சவ 10வது நாளான நேற்று நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

 நம்பெருமாள் தரிசனம்

நம்பெருமாள் தரிசனம்

முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் இன்று அதிகாலை 4:45 மணிக்கு திறக்கப்பட்டது. பரமபதவாசல் திறக்கப்பட்டு, முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து, நம்பெருமாள் அதிகாலை 3.30 மணிக்கு விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பாண்டியன் கொண்டை, கிளிமாலை மற்றும் விலை உயர்ந்த ஆபரணமான ரத்தினஅங்கி அணிந்து பக்தர்களின் கண்களை நிறைக்கும் அழகுடன் மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்பட்டு வந்தார். சந்தனு மண்டபத்தில் ஸ்தலத்தார், தீர்த்தகாரர்களுக்கு மரியாதை நடந்தது.

 சொர்க்கவாசல்

சொர்க்கவாசல்

அதன்பின் மேலப்படி வழியாக நம்பெருமாள் இரண்டாம் பிரகாரம் எனப்படும் ராஜமகேந்திரன் சுற்றை அடைந்தார். பின்னர் நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரம் எனப்படும் தங்கக் கொடி மரம் உள்ள குலசேகரன் திருச்சுற்றுக்கு வந்தார். அங்கிருந்து துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு செல்லும் வழியில் நம்பெருமாள் விரஜா நதி மண்டபத்தில் பட்டர்களின் வேத விண்ணப்பம் கேட்டருளினார். பின்னர் பரமபதவால் பகுதியை அடைந்தபின் ஸ்தானீகர் கட்டியம் கூற காலை 4.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.

 திரு ஆபரணங்கள்

திரு ஆபரணங்கள்

நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் கடந்து சென்றார்.

 இராப்பத்து விழா

இராப்பத்து விழா

அந்த வாசல் வழியே வந்த நம்பெருமாள், தவிட்டறை வாசலை கடந்து மணல் வெளியில் பருத்தி உலா கண்டருளி, ஆயிரங்கால் மண்டபம் வழியாக திருமாமணி மண்டபம் அடைந்து, இரவு வரை பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வரும் 24ம் தேதி வரை இராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும்.

 அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

ஸ்ரீரங்கத்தில் இவ்வருடம் தை பிரம்மோற்சவம் நடைபெறும் என்பதால் சொர்க்க வாசல் திறப்பு முன்கூட்டியே கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நடைபெறுவது வழக்கமாகும். இந்த பரமபதவாசல் நிகழ்சசியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.

 பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் தரிசனம்

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பரமபத வாசல் திறப்பு நிகழ்வில், ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை காண்பதற்காக பக்தர்கள் உலகெங்கும் இருந்து ஸ்ரீரங்கம் வந்துள்ளனர். கோவிலை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு 2000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

English summary
The Paramatman or Sorgavasal was opening at 4.45 am today in honor of Vaikunta Ekadasi at the glorious Srirangam known as Puloga Vaikundam. Devotees were not allowed to participate in the event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X