For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் வரலட்சுமி விரதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம் ஆகும். இன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், தங்களின் குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தினை மேற்கொள்வது வழக்கம். திருமணம் ஆகாதவர்கள் இதனைக் கடைபிடிக்க விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை.

Varalakshmi Pooja for the goddess of wealth

மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத நாளாகும்.

திருமாலின் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமி, அஷ்ட ஐஸ்வரியங்களுக்கும் அதிபதியாக உள்ளார். தன லட்சுமி, தானிய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெய லட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, மகா லட்சுமி என 8 வகையான லட்சுமியாக காட்சி தந்து அருளாசி புரிகிறார்.

Varalakshmi Pooja for the goddess of wealth

அஷ்ட லட்சுமிகளில் ஒவ்வொரு லட்சுமியும் நமக்கு தேவையானதை வாரி வழங்குகின்றனர். குழந்தை பேறு தருபவள் சந்தான லட்சுமி. பதவியை தருபவள் கஜ லட்சுமி, செல்வத்தை தருபவள் வித்யாலட்சுமி. வீரத்தை தருபவள் வீர லட்சுமி. வெற்றியை தருபவள் கருணை லட்சுமி.

எல்லா செல்வமும் ஒரு சேர இருக்கும் இடத்தில் இருப்பவள் அஷ்ட லட்சுமி.

வரலட்சுமி விரதத்தினைக் கடைப்பிடிப்பதால் அன்னை வரலட்சுமியின் அருள் பெற்று மகிழ்ச்சியும், நலமும் ஏற்படும் என்பது ஐதீகம்.

வரலட்சுமி விரதம் புராண வரலாறு

சிவபெருமானின் உபதேசப்படி, மகாலட்சுமியை வழிபட்டு விரதம் பூண்டாள் உமாதேவி. இதனாலேயே முருகன் அவதாரம் நிகழ்ந்தது என புராணங்கள் கூறுகின்றன. மலைமகளாம் பார்வதி தேவி, அலைமகளாம் திருமகளைப் போற்றி, விரதம் பூண்ட நன்னாளே வரலட்சுமி விரத நன்னாள் ஆகும்.

கயிலாயத்தில் ஒருநாள் சிவபெருமானும், உமாதேவியும் "சொக்கட்டான்' என்ற பகடை விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். "விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்' என்றார் சிவன்.

Varalakshmi Pooja for the goddess of wealth

ஆனால் உமாதேவியோ, "இல்லையில்லை. சொக்கட்டான் விளையாட்டில் வென்றவள் நானே'' என்றாள். அந்த விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரநேமி என்ற கந்தர்வனிடம், "நீதான் யார் வெற்றி பெற்றது என்று கூற வேண்டும்' என்று சிவபெருமான் சொல்ல, அவனோ, "சிவபெருமான்தான் வெற்றி பெற்றது' என்றான்.

சித்ரநேமி பொய்யான தீர்ப்பு கூறியதாக எண்ணிக் கோபமடைந்த உமாதேவி, "நீ பெருநோய்க்கு ஆளாவாய்' என்று சாபமிட்டாள். தன்னை மன்னிக்குமாறு சித்ரநேமி வேண்ட, "கற்புக்கரசிகள் வரலட்சுமி விரத பூஜை செய்வதை நீ பார்க்கும்போது, உன் பெருநோய் நீங்கும்' என்றாள். அதன்படி சித்ரநேமியும் அந்த விரதத்தைக் கண்டு நோய் நீங்கப் பெற்றான். எனவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ள நோய்நொடி நீங்கும் என்பது நம்பிக்கை.

வரம் தரும் வரலட்சுமி விரதம்

லட்சுமி தேவியை குறித்து அனுஷ்டிக்கும் மிக சிறப்பான விரதம் வரலட்சுமி விரதம். செல்வம், தானியம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்களை லட்சுமி தேவி அள்ளிக் கொடுப்பதால், இதை வரம் தரும் விரதம் எனவும் அழைக்கின்றனர்.

பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வார்கள். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவவும், செல்வங்கள் பெருகும், கணவர் நீண்ட ஆயுளும், குழந்தைகள் நலம் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.

English summary
Varalakshmi Pooja is an important pooja performed by many women in the states of Andra and Tamilnadu. This year Varalakshmi Viratham is on 12th Aug 2016.Varalakshmi Pooja is celebrated on the friday, before the full moon day, in the Tamil Month Sravana (July-August).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X