ஒரே பாட்டுல ஓஹோன்னு மாறும் கும்பம்.. தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம்.. கன்னி வெடியும் இருக்கு கவனம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவதற்கு கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழிலில், வேலையில், திருமணம் சார்ந்த விஷயங்களில், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.
அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று ராசிக்கு 7 ஆம் இடத்துக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகி உள்ளார். ஜூலை 28 ஆம் தேதி வரைக்கும் உங்கள் ராசியில் நிவர்த்தி ஸ்தானத்தில் இருந்து பலன்களைத் தரப் போகிறார். அதிகளவிலான கடன் பிரச்சனைகளில் சிக்கி பாதிப்புக்குள்ளாகி இருப்பீர்கள். ஜென்ம சனியில் அதிகமாக பாதிக்கப்பட்ட ராசியினராக இருப்பீர்கள்.
கடன் பிரச்சனை தீரும்
வேலை இழப்பு, பொருளாதார நஷ்டம், பணம் கொடுத்து ஏமாந்தது, முதலீடு செய்து ஏமாந்தது, அதில் இருந்து விடுபட வெளியில் இருந்து கடன் வாங்கியது, கடனைக் கட்ட முடியாத நிலை, தொழிலில் நஷ்டம், எடுத்த முயற்சிகளில் தோல்வி என பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி உங்களுக்கு கடன் பிரச்சனைகளில் நிவர்த்தி ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
வெற்றி, யோகம்
கும்ப ராசிக்கு மூன்றாம் அதிபதியான செவ்வாய் முயற்சி ஸ்தானதிபதி 7 ஆம் இடத்தில் பலம் பெறும்போது மிகப்பெரிய நன்மைகளைக் கொடுப்பார். முயற்சிகள் வெற்றி அடையவில்லை என்று சொல்லக் கூடியவர்களுக்கு இனி அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவதற்கான யோகம் உண்டாகும். தொழிலில் நிறைய மாற்றம், முன்னேற்றம் உண்டாகும்.
புதிய வேலைவாய்ப்பு
வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை, படித்து முடித்து காத்திருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் துறையில் வேலை கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும். திருமண உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். பூர்வீக சொத்துகள் கிடைக்கக்கூடிய யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். செவ்வாய் பெயர்ச்சியில் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும் அற்புதமான வாய்ப்பு உண்டாகும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது, வண்டி மாற்றுவது, கார் வாங்கும் அமைப்பு உண்டாகும்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிகிச்சை பெற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. எல்லா பாக்கியமும் கிடைக்கும் வாய்ப்புள்ளதால் உங்களுடைய முயற்சிகளை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது நல்லது. வெளிநாட்டில் இருந்து பல்வேறு கஷ்டங்களைச் சந்தித்து வருபவர்கள், லோன் கட்ட முடியாமல் தவிப்பவர்கள், வேலை இல்லாமல் இருப்பவர்களின் நிலை எல்லாம் மாறும்.
தடைகள் நீங்கும்
கடந்த 6 மாதங்களாக இருந்து வந்த குழப்ப நிலைகள் நீங்கும். தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி நிம்மதி உண்டாகும். ராசியில் ராகு பயணிப்பதால் சில பிரச்சனைகள் உருவாகும். இருப்பினும் இந்த காலகட்டத்தில் எதை செய்யலாம், செய்யக் கூடாது என்று தெரிந்து கொள்ளும் வகையில் சுய ஜாதகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது.
மாற்றம், முன்னேற்றம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான யோகம் உள்ளது. உறவுகள் மீண்டும் இணையும் காலகட்டமாக இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல மாற்றத்தை, முன்னேற்றத்தைக் கொடுக்கக் கூடிய அமைப்பு நிச்சயமாக உண்டாகும். குழப்பங்கள் அதிகளவில் இருக்கும் என்பதால் தவறான முடிவெடுப்பதற்கான சூழல் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications