For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா : டிசம்பர் 03ல் திருநெடுந்தாண்டகத்துடன் ஆரம்பம்

வைகுண்ட ஏகாதசி நாளில் எதுவும் சாப்பிடாமல் கண் விழித்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து மோட்சத்துக்கு வழிகாட்டுகிறார் மகாவிஷ்ணு. இந்த கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை டிசம்பர் 03ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் விழா தொடங்க உள்ளது. டிசம்பர் 14ஆம் தேதியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இதனை 'மோட்ச ஏகாதசி' என்றும் அழைப்பார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் போகிப்பண்டிகை நாளில் ஏகாதசி வருவதால் இந்த ஆண்டு கார்த்திகையிலேயே பரமபதவாசல் திறக்கப்பட உள்ளது.

ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு எதுவும் சாப்பிடாமல் இரவில் கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்காக சொர்க்க வாசலை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் இறைவன். வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டும் சொர்க்க வாசல் திறப்பது ஏன் பிற நாளில் சொர்க்க வாசலை மூடியிருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை. இந்த கதைக்கு செல்லும் முன்பு ஏகாதசியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..

ஏகாதசி விரத கதை

ஏகாதசி விரத கதை

ஏகாதசி என்பதற்கு 11 ஆம் நாள் என்பது பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து அதாவது வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசியின் தத்துவமாகும். இப்படி உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றி உபவாசம் இருப்பதையே ஏகாதசி புண்ணிய தினம் வலியுறுத்துகிறது. மாதத்திற்கு 2 ஏகாதசி என ஆண்டிற்கு 24 ஏகாதசி விரதம் இருந்தாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமைக்குரியது. இந்த நாளில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

அசுரனின் தொல்லை

அசுரனின் தொல்லை

அசுரன் முரனை அழிக்க விஷ்ணுவிடம் இருந்து சக்தியாக அவதரித்தவள் ஏகாதசி. அசுரனை அழித்த உன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பேன் என்று வரம் அளித்தார் பெருமாள். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகுந்த தொல்லைகள் கொடுத்து வந்தான் முரன் எனும் அசுரன். இதனால் துன்பம் அடைந்த தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களை திருமாலிடம் அனுப்பிவைத்தார் சிவன். உடனே பெருமாளும் தேவர்களை காக்க அசுரனுடன் போரிட்டார். ஆயிரம் ஆண்டுகள் நீடித்த போர் முடிவுக்கு வரவில்லை. பெருமாளோ அசுரனுக்கு பயந்தது போல நடித்து சிம்ஹாவதி என்னும் குகையில் போய் உறங்கி விட்டார். அப்போது திருமாலின் உடம்பில் இருந்து ஒரு சக்தி பெண் வடிவில் வெளிப்பட்டது.

அசுரனை அழித்த ஏகாதசி

அசுரனை அழித்த ஏகாதசி

அப்போது அங்கேயும் தேடி வந்து பெருமாளை போருக்கு கூப்பிட்டான் முரன். பெண் சக்தியை அழிக்க அசுரன் நெருங்கும் போது, அந்த பெண்ணிடம் இருந்து ஹும் என்ற சத்தம் மட்டுமே எழுந்தது அதுவே அந்த அசுரனை எரித்து சாம்பலாக்கியது. உறக்கத்தில் இருந்து பெருமாள், ஏகாதசி என்று அந்தப் பெண் சக்திக்கு பெயரிட்டார், அதோடு உன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டம் அளிப்பேன் என்றும் வரம் தந்தார்.

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி

இந்த நாள் முதல் ஏகாதசி விரதம் ஆரம்பமானது மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி' என்று போற்றுகிறோம். மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இது மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனிச்சிறப்பு பெறுகிறது.

சொர்க்கவாசல் திறக்கப்படும் கதை

சொர்க்கவாசல் திறக்கப்படும் கதை

ஸ்ரீமகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டதால் பரமபத பாக்கியம் பெற்றவர்கள் மது-கைடபர் என்ற அரக்கர்கள். தங்களுக்குக் கிடைத்த வைகுண்டப் பேறு உலக மாந்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று இந்த அசுரர்கள் விரும்பினர். எனவே வைகுண்ட ஏகாதசி அன்று, ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் வழியாக உற்சவ மூர்த்தியாக தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசித்து பின்தொடரும் பக்தர்களது பாவங்களை நீக்கி முக்தி அளிக்க வேண்டும்'' என்று பெருமாளிடம் பிரார்த்தித்தனர். அப்படியே அருள் செய்தார் பெருமாள். இதன்பொருட்டே, சொர்க்க வாசலைத் திறந்து மோட்சத்துக்கு வழிகாட்டுகிறார் திருமால்! ஸ்ரீரங்கம் உள்பட நாடுமுழுவதும் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்க வாசல் இன்றும் திறக்கப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?

விரதம் இருப்பது எப்படி?

ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று திருமாலை வணங்கி விரதம் தொடங்கி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம். ஏகாதசியன்று அதிகாலையில் கண் விழித்து, குளித்து, மகாவிஷ்ணுவை வணங்கி மந்திரம் சொல்ல வேண்டும். பெருமாள் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு வைபவங்களை தரிசிப்பது சிறப்பு. அன்று இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களைப் படிப்பதும், பகவான் நாமங்களைச் சொல்வதுமாக இருக்க வேண்டும்.

பரம பத விளையாட்டு

பரம பத விளையாட்டு

மார்கழி மாதம் மட்டுமின்றி மாதம்தோறும் வரும் ஏகாதசிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனிப் பெயரும், சிறப்பும் உண்டு. இந்த 24 ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்கலாம். அதிசயமாக 25வது ஏகாதசி வரும் அதற்கு கமலா ஏகாதசி என்று பெயர். மோட்ச ஏகாதசி அல்லது வைகுண்ட ஏகாதசி நாளில் கண் விழித்து விரதம் இருப்பவர்கள் பரமபத விளையாட்டு விளையாடுவார்கள். அந்த விளையாட்டில் பாம்பும், ஏணியும் முக்கியத்துவம் பெருகிறது. ஏணியில் ஏறி செல்லும் போது பாம்பு கொத்தி கீழே இறக்கி விட்டு விடும் ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துகிறது. பாம்பின் வாயில் கடிபடாமல் தப்பித்தால் பரமபதவாசலை அதாவது சொர்க்கத்தை அடையலாம் என்கிறது இந்த விளையாட்டின் தத்துவம் ஆகும்.

கார்த்திகையில் வைகுண்ட ஏகாதசி

கார்த்திகையில் வைகுண்ட ஏகாதசி

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது. 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலே ஸ்ரீரங்கத்திற்கு மட்டும் வைகுண்ட ஏகாதசி வரும்விஜயநகர பேரரசு காலத்தில் தைத்திருநாள் ( தை பிரம்மோற்ஸவம்) ஏற்படுத்தப்பட்ட போது மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும் தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தால் எதை கொண்டாடுவது எப்படி கொண்டாடுவது என கேள்வி வந்தது. அப்போது ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி 19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த வைகுண்டஏகாதசி திருவிழாவை கார்த்திகையில் பெரியபெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.

டிசம்பர் 14ல் சொர்க்கவாசல் திறப்பு

டிசம்பர் 14ல் சொர்க்கவாசல் திறப்பு

இந்த ஆண்டு கார்த்திகை 17ஆம் தேதி டிசம்பர் 03ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது. அதனை தொடர்ந்து 04.12.2021 - பகல்பத்து திருமொழித் திருநாள் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார். டிசம்பர் 14ஆம் தேதியன்று அன்று வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு என அழைக்கப்படும் பரமபதவாசல் அதிகாலை 4.45 மணி திறக்கப்பட்டு பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சி அளிக்க உள்ளார். டிசம்பர் 19ஆம் தேதியன்று திருக்கைத்தல சேவையும், டிசம்பர் 21ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி விழாவும் நடைபெறும். டிசம்பர் 23ஆம் தேதி தீர்த்தவாரியும், டிசம்பர் 24ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.

English summary
Vaikunda Ekadasi festival at the Srirangam Ranganathar Temple will begin on Friday, December 03, with the Tirunelveli festival. It has been announced that the Paramatman Gate, also known as the Gate of Heaven, will open on December 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X