For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 5: ஜஸ்டிஸ்

By Chakra
Google Oneindia Tamil News

Scales
-ஆர்.முத்துக்குமார்

பிராமணர் அல்லாத மக்களைப் பற்றிப் பேசவேண்டும். அவர்களுடைய பிரச்னைகளைப் பற்றி எழுதவேண்டும். கொள்கைகளை விளக்கவேண்டும். கோரிக்கைகளை ஒலிக்கவேண்டும். அதற்கு பத்திரிகை தொடங்கவேண்டும். ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட விஷயம். வேலைகள் ஆரம்பித்தன. தென்னிந்திய மக்கள் சங்கம் (South Indian Peoples Association) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட இருக்கும் பத்திரிகைகளை நிர்வகிப்பது இந்த மக்கள் சங்கத்தின் பொறுப்பு. அதன் செயலாளர் பொறுப்பை பிட்டி. தியாகராயர் ஏற்றுக்கொண்டார்.

மொத்தம் மூன்று பத்திரிகைகள். ஆங்கிலத்துக்கு, Justice. தமிழுக்கு, திராவிடன். தெலுங்குக்கு, ஆந்திர பிரகாசினி. பத்திரிகைகளுக்குப் பெயர்கள் எல்லாம் தயார். நிதி? பங்குகளை உருவாக்கி, அதை விற்பனை செய்வது. அதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு பத்திரிகைகளைத் தொடங்குவது. துல்லியமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டனர் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினர். ஒரு பங்கின் விலை நூறு ரூபாய். மொத்தம் 640 பங்குகள் விற்கப்பட்டன. கிடைத்த பணத்தைக் கொண்டு அச்சகம் ஒன்று வாங்கப்பட்டது.

26 பிப்ரவரி 1917. டாக்டர் டி. எம். நாயரை ஆசிரியராகக் கொண்டு ஜஸ்டிஸ் என்ற ஆங்கில நாளேடு தொடங்கப்பட்டது. பக்தவத்சலம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு திராவிடன் என்ற தமிழ் நாளேடும் தொடங்கப்பட்டது. ஆந்திரப் பிரகாசினி என்ற தெலுங்கு நாளேடு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. உடனடியாக அந்த ஏட்டின் உரிமை வாங்கப்பட்டது. ஏ.சி. பார்த்தசாரதி நாயுடு அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஆக, மூன்று பத்திரிகைகள் தென்னிந்திய மக்கள் சங்கத்தால் தொடங்கப்பட்டன.

26 பிப்ரவரி 1917 அன்று வெளியான ஜஸ்டிஸ் ஆங்கில நாளேட்டின் முதல் இதழின் தலையங்கப் பக்கத்தில் பத்திரிகைகள் தொடங்கப்படுவதன் நோக்கம் விரிவாக பிரசுரம் செய்யப்பட்டிருந்தது.

தேசியத் திராவிடர்களாகிய நம்மனோர் முன்னுக்கு வருவதற்குத் தடையாக உள்ள தப்பான அபிப்ராயங்களையும் விபரீதக் கொள்கைகளையும் பேதித்தெறிந்து உண்மையைச் சாதித்து நிலை நிறுத்துவதே திராவிடனாகிய இப்பத்திரிகையின் திருத்தமுள்ளதொரு நோக்கமாகும். நமக்கு எவ்வளவோ நன்மை தந்து உதவிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தின்மீது இடையறாத அன்பையும் தளர்வுறாத விசுவாசத்தையும் என்றென்றும் காட்டிச் செல்வதே இணையில்லாத நமது நோக்கமாக இருக்கும்.

தராசு. தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்துக்கான கொடியை உருவாக்கும் வேலைகள் தொடங்கியபோது தலைவர்களுக்கு தோன்றிய சின்னம் இதுதான். சிவப்பு நிறக் கொடியின் நடுவில் வெள்ளை நிறத்தில் தராசுச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி உருவாக்கப்பட்டது. சமூக நீதியை சமத்துவ அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என்பதற்கான அடையாளம்தான் தராசு.

1917 அக்டோபர் மாதத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்கள் வெளியிடப்பட்டன.

அரசியல் சட்ட நெறிமுறைகளைக் கொண்டு முழு தன்னாட்சி உரிமையைப் பெறுதல்.

இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளிட்ட அனைத்து பிராமணர் அல்லாத மக்களுக்கு இடையே சகோதரத்துவத்தை உருவாக்கி, மேம்படுத்துதல்.

பொதுவாக, நாட்டின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பது. குறிப்பாக, பிராமணர் அல்லாத மக்களின் நலன்களின் கூடுதல் கவனம் செலுத்துவது.

மத்திய சட்டசபை மற்றும் மாகாண சட்டசபை, நிர்வாக அமைப்புகள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றில் பிராமணர் அல்லாத மக்களுக்குக் கணிசமான பிரதிநிதித்துவத்தை உருவாக்கிக் கொடுத்தல்.

பிராமணர் அல்லாத மக்களிடையே சிறப்பான எண்ணங்களை உருவாக்குவதற்கு ஏற்ற முறையில் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்தல்.

துண்டு விளக்க அறிக்கைகள் வெளியிடுதல், அரிய நூல்களைக் கொண்டுவருதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.

மேலே கூறப்பட்டுள்ள காரியங்களை நிறைவேற்றத் தேவையான அனைத்து செயல்களையும் மேற்கொள்ளுதல்.

21 வயது நிரம்பி, சங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் உறுப்பினராக முடியும். பிராமணர்களுக்கு மட்டும் அனுமதி இல்லை. சங்கத்தின் நிர்வாகக்குழுவில் ஒரு தலைவர், பத்து துணைத் தலைவர்கள், மூன்று செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் இருபது சாதாரண உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதற்குரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

கட்சியின் கொள்கைகளை ஒப்புக்கொள்கிறேன். வன்முறை மூலமான அல்லது திடீரென்று செய்யப்படுகின்ற அரசியல் சட்ட மாற்றங்களுக்கு உடன்படவில்லை. படிப்படியான அரசியல் மாற்றத்தையே ஆதரிக்கிறேன். சுயாட்சியை அடைவதற்கு எல்லா வகுப்பாருக்கும் முழுப்பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யாத ஒரு இடைப்பட்ட வழி மேற்கொள்ளப்படும் என்றால் அதற்கு சம்மதிக்கமுடியாது.

14 மார்ச் 1917. சென்னை முத்தியால்பேட்டை முஸ்லிம் அஞ்சுமான் அமைப்பின் சார்பில் வி.பி. ஹாலில் ‘நமது உடனடி அரசியல் நோக்கு’ என்ற தலைப்பில் டி.எம். நாயர் பேசினார்.

நாங்கள் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் வகுத்து, வற்புறுத்திவரும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும், எல்லா முறைகளிலும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுதான் எங்களுடைய உடனடியாக அரசியல் குறிக்கோள். எங்களுக்குச் சமூகநீதி வேண்டும்; அதனை நிறைவேற்ற அரசியல் உரிமைகள் வேண்டும்; பிரிட்டிஷ் அரசு அதற்கு ஏற்றவகையில் சலுகைகளை அதிகரித்துத் தரவேண்டும்; டாக்டர் அன்னிபெசன்ட் வற்புறுத்தும் தன்னாட்சி, பிராமணர்களுக்குப் பாதுகாப்பும் பயனும் அளிக்கக்கூடியதாக இருக்கும். நாங்கள் எங்களுடைய சமுதாய, தார்மிக, அரசியல் உரிமைகளைத்தான் கேட்கிறோம். அரசு உத்தியோகங்களில் எங்களுக்கு உரிய பங்கைத்தான் கேட்கிறோம். ஏன்? அரசு உத்தியோகங்களைப் பெற்றால் அதன்மூலம் பிராமணர் அல்லாத சமுதாயங்கள் மனித வர்க்கத்தின் மிகவும் மேம்பட்ட சமுதாயங்களாக மாறிவிடும் என்று கருதுகிற காரணத்தாலா? இல்லை. அரசு உத்தியோகங்களில் அரசியல் அதிகாரம் இருக்கிறது. பிராமணர் அல்லாதாரின் எதிர்காலம் பிராமணர் அல்லாதாரின் கைகளில்தான் இருக்கிறது.

டி.எம். நாயரின் பேச்சுகள் காங்கிரஸ்காரர்களைக் கலவரப்படுத்தின. தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் சார்பாக நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கு நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபடுடத் தொடங்கினர். ஆங்காங்கே சில கலகச் சம்பவங்களும் நடந்தன. குறிப்பாக, வி. கலியாண சுந்தர முதலியார் சங்கத் தலைவர்களுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட்டார்.

சென்னை டவுன் ஹாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.எம். நாயர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு குரல்:

நீங்கள் ஏன் காங்கிரஸை விடுத்து வகுப்புவாதக் கட்சியில் சேர்ந்தீர்கள்? வகுப்புவாதத்தால் நாடு சுயராஜ்ஜியம் பெறுமா? அப்படி யாண்டாயினும் நிகழ்ந்திருக்கிறதா? சரித்திரச் சான்று உண்டா?

கேள்வியைக் கேட்டவர் திரு.வி. கலியாண சுந்தர முதலியார். உடனடியாகப் பதிலளிக்கத் தொடங்கினார் டி.எம். நாயர்.

யான் காங்கிரஸில் தொண்டு செய்தவனே. அது பார்ப்பனர் உடைமையாகியதை நான் உணர்ந்தேன். காங்கிரஸால் தென்னாட்டுப் பெருமக்களுக்குத் தீமை விளைதல் கண்டு, அதை விடுத்து, நண்பர் தியாகராயருடன் கலந்து, ஜஸ்டிஸ் கட்சியை அமைக்கலானேன். வகுப்புவாதத்தால் சுயராஜ்ஜியம் வரும் என்று எவருங்கூறார். வகுப்பு வேற்றுமை உணர்வு தடித்து நிற்கும் வரை சுயராஜ்ஜியம் என்பது வெறுங்கனவேயாகும். வகுப்பு வேற்றுமை உணர்வின் தடிப்பை வகுப்புவாதத்தால் போக்கிய பின்னரே சுயராஜ்ஜியத் தொண்டில் இறங்கவேண்டும் என்பது எனது கருத்து.

பொதுக்கூட்டங்களில் பேசினர். பத்திரிகைகளில் எழுதினர். கேட்க வாய்ப்பு கிடைத்தவர்கள் கேட்டனர். படிக்க வாய்ப்பு கிடைத்தவர்கள் படித்தனர். சங்கத்தின் அதிகாரபூர்வ ஏடான ஜஸ்டிஸ் மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தையே ஜஸ்டிஸ் கட்சி என்று அழைக்கும் அளவுக்கு பிரபலத்தின் உச்சத்தை நோக்கிச் சென்றது. அவ்வளவுதான். காங்கிரஸ் தலைவர்களின் முகங்களில் கவலை ரேகைகள் ஓடத் தொடங்கின. கூடாது. அனுமதிக்கவே கூடாது. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஒற்றுமையை உருக்குலைக்க ஒரு அற்புதமான ஆயுதம் வேண்டும். தேடலில் கிடைத்ததுதான் அந்த யோசனை.

போட்டி இயக்கம்!

-தொடரும்...

திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்), ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 400 ரூ.

English summary
Dravida iyakka varalaaru wrote by R.Muthukumar and published by New Horizon media dwells in the history of Dravidian movement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X