Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 6: சென்னை மாகாண சங்கம்

Subscribe to Oneindia Tamil

TM Nair
-ஆர்.முத்துக்குமார்

15 செப்டெம்பர் 1917 அன்று சென்னை கோகலே மண்டபத்தில் ஏராளமான பிராமணர் அல்லாத பிரமுகர்கள் திரண்டனர். கூட்டி பி. கேசவ பிள்ளை அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி 1885ல் தொடங்கப்பட்டபோது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர் இவர். தவிரவும், சி. கருணாகர மேனன், வி. கலியாணசுந்தர முதலியார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் வந்திருந்தனர்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதன் கொடிகள் எங்கும் பறக்கத் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பிராமணர் அல்லாத மக்களுக்கு அந்தச் சங்கத்தின் கொள்கைகள் மீது கவர்ச்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே பிராமணர் அல்லாதாரைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையும் கிளை அமைப்பு ஒன்றைத் தொடங்கவேண்டும். இதுதான் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருளின் சாரம்.

புதிய அமைப்பைத் தொடங்குவதன்மூலம் நிறைய காரியங்களைச் சாதிக்கலாம். காங்கிரஸ் உணர்வு கொண்ட பிராமணர் அல்லாத மக்களைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தக்கவைக்கமுடியும். தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தமுடியும். முக்கியமாக, பிராமணர் அல்லாத மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தமுடியும். இதுதான் அவர்கள் போட்ட கணக்கு.

பிராமணர் அல்லாத பெருங்குடி மக்களே! நாங்கள்தான் உங்களுடைய உண்மையான பிரதிநிதிகள்! எங்களை நம்புங்கள்! எங்களை நோக்கி வாருங்கள்! பகிரங்க அழைப்பு விடுத்தனர்.

கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே திடீரென ஒரு கூட்டம் கோகலே மண்டபத்துக்குள் நுழைந்தது. அவர்களுக்குத் தலைமை ஏற்றவர் ஓ. கந்தசாமி செட்டியார். ஆம். வந்தவர்கள் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினர். பழைய கடனைத் திரும்பக் கொடுக்க வந்திருந்தனர். கூச்சல். குழப்பம். விளைவு, கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தமுடியவில்லை. காவல்துறை வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்பிறகு 20 செப்டெம்பர் 1917 அன்று கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில்தான் சென்னை மாகாண சங்கம் (Madras Presidency Association) என்ற போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது.

உள்நோக்கங்கள் பல இருந்தாலும் வெளிப்படையாக அறிவித்தது இதைத்தான். காங்கிரஸ் நோக்கத்துக்கு முரண்படாத வகையில் தென்னாட்டு பிராமணர் அல்லாத மக்களின் நலனை நாடுவதுதான் சென்னை மாகாணச் சங்கத்தின் நோக்கம். அந்தச் சங்கத்துக்கு கூட்டி பி. கேசவ பிள்ளை தலைவர். துணைத் தலைவர்களாக லாட் கோவிந்ததாஸ், சல்லா குருசாமி செட்டியார், ஈரோடு ராமசாமி, நாகை வி. பக்கிரிசாமிப் பிள்ளை, சீர்காழி சிதம்பர முதலியார், தஞ்சை சீனிவாச பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அமைச்சர்களாக தி.வி. கோபாலசாமி முதலியார், குருசாமி நாயுடு, டாக்டர் வரதராஜுலு நாயுடு, சர்க்கரைச் செட்டியார், வி. கலியாண சுந்தர முதலியார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் ஈரோடு ராமசாமி மட்டும் வித்தியாசமானவர். அடிப்படையில் காங்கிரஸ்காரர் அல்ல; ஆனால் காங்கிரஸ் தலைவர்களுடன் நல்ல தொடர்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தவர். குறிப்பாக, சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), டாக்டர் அன்னிபெசண்ட், டாக்டர் வரதராஜுலு, கருணாகர மேனன் போன்ற தலைவர்களுடன் பழக்கம் உண்டு. அவர்களுடைய அழைப்பின் பேரில் காங்கிரஸ் கூட்டங்களிலும் அவ்வப்போது கலந்துகொள்வார். இந்த விஷயத்தை ஈரோடு ராமசாமியே தன்னுடைய சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிர்ப்பாகவும் பெசண்ட் அம்மைக்கு எதிர்ப்பாகவும் ஒரு வாரப் பேப்பர் நடத்திக்கொண்டு சந்தா சேர்க்க ஈரோட்டுக்கு வந்தார். அவருக்கு ஈரோடு கடைவீதிகளில் பல சந்தா சேர்த்துக் கொடுத்து, வீட்டில் விருந்து செய்து பெருமைப்படுத்தினேன்; என்றாலும், இண்டியன் பேட்ரியட் பத்திரிகை அடிக்கடி என்னைப் பற்றி புகழ்ந்து எழுதும். அதன் ஆசிரியர் கருணாகர மேனனுக்கு என் மீது அன்பு உண்டு. அதில், அப்போது உதவி ஆசிரியராக இருந்த ரங்கைய்யர் எனக்கு நல்ல பழக்கமுடையவர். இந்தக் கூட்டத்தில் இருந்த என்னை டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் சினேகமானது பெசன்ட் அம்மைக் கூட்டத்தில் இருந்து பிரித்துவிட்டது. இதற்கு முன்பே எனக்கும் சி.ராஜகோபாலாச்சாரியாருக்கும் அவர் வக்கீல் என்கிற முறையில் பழக்கம் இருந்தது. அவர்கள் கூப்பிடும் கூட்டங்களுக்கெல்லாம் செல்ல ஆரம்பித்தேன். இதற்கு மத்தியில் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக சென்னை மாகாணச் சங்கம் என்ற பெயரால் பிராமணர் அல்லாதாருக்கென்று ஒரு சங்கம் தொடங்கி வேலைசெய்து வந்தது. அதில் நான் அதிக பங்கெடுத்துக் கொண்டேன்.

பிராமணர் அல்லாத மக்களின் நலனை முன்னிட்டு தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தொடங்கப்பட்டபோது அதற்குக் கண்டனம் தெரிவித்தது ஹிந்து ஏடு. அதே நோக்கம்தான் எங்களுக்கும் என்று சொல்லி தொடங்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்துக்கு வாழ்த்துரை வழங்கியது. நீதிக்கட்சியுடன் போட்டிபோட வேண்டும் என்றால் இப்படியொரு தாற்காலிக அமைப்பு அவசியம் என்று எழுதியது இந்து ஏடு. எதிர்காலத்தில் சென்னை மாகாணச் சங்கம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திவிடக்கூடாது, அந்தச் சங்கம் நிலைபெற்றுவிடக்கூடாது, அதன்மூலம் காங்கிரஸுக்குள் பிராமணர் அல்லாத மக்களின் செல்வாக்கு உயர்ந்துவிடக்கூடாது என்று எச்சரிப்பதுதான் ‘தாற்காலிக’ என்பதன் அர்த்தம்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எந்த அளவுக்கு காங்கிரஸ் தலைவர்களைப் பதற்றமடையச் செய்தது என்பதற்கும் போட்டி இயக்கம் தொடங்க எத்தகைய முயற்சிகளைச் செய்தனர் என்பதற்கும் சரியான ஆதாரங்களை திரு.வி. கலியாண சுந்தர முதலியார் தனது வாழ்க்கைக் குறிப்புகளில் விட்டுச் சென்றுள்ளார்.

ஜஸ்டிஸ் கட்சி தென்னாட்டுப் பிராமணரல்லாதாரெல்லார்க்கும் உரியதாகாது என்றும் அவருள் பெரும்பான்மையோர் காங்கிரஸ் மனப்பான்மை உடையவர் என்றும் தெளிவுசெய்தேன். காங்கிரஸ் மனப்பாண்மையுடைய பிராமணர் அல்லாதார் ஆங்காங்கே கூட்டங்கூட்டி, ஜஸ்டிஸ் கட்சி தமக்குரியதன்றென்று உலகுக்குப் புலப்படுத்த விரைதல் வேண்டுமென்று வலியுறுத்தினேன். அந்தப்பேச்சு பத்திரிகைகளில் வெளியாயிற்று. என் பேச்சு காங்கிரஸ் பிராமணரல்லாதாரை ஊக்கமுறச் செய்தது. தனக்கென ஒரு தனிச்சங்கம் காணத் தூண்டியது. அவ்வேளையில் நியூ இந்தியாவில் வேலைபார்த்துவந்த சபாபதிப் பிள்ளை, ஏ.எஸ். ராமுலு முதலியோர் தனிச்சங்கத்தின் அவசியத்தை வலியுறுத்தி பத்திரிகைகட்குக் கட்டுரைகள் எழுதினர். அவைகட்கு ஆதரவு சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சை சீனிவாசப் பிள்ளை முதலியோரிடமிருந்து கிடைத்தது. தனிச்சங்கங்காணும் முயற்சி தி.வி. கோபால்சாமி முதலியாரால் தொடங்கப்பட்டது.

சென்னை மாகாணச் சங்கம் என்ற போட்டி இயக்கம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே 19 ஆகஸ்டு 1917 அன்று கோயம்புத்தூர் ஒப்பணக்காரத் தெருவில் இருக்கும் திரையரங்கு ஒன்றில் பிராமணரல்லாதார் மாநாடு நடத்தப்பட்டது. அதுதான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாடு. ஏற்பாடுகள் அனைத்தும் சங்கத்தின் பொறுப்பு என்றாலும் ‘பிராமணர் அல்லாதார் மாநாடு’ என்பதுதான் அனைத்துக்கும் பொதுப்பெயர்.

மாநாட்டுத் தலைமை, பி. ராமராய நிங்கார். வரவேற்புக் குழுவின் தலைவராக ஊத்துக்குளி ஜமீன்தார் எம்.ஆர். காளிங்கராயர் இருந்தார். டி.எம்.நாயர், டாக்டர் சி. நடேச முதலியார் ஆகியோரும் மாநாட்டுக்கு வந்திருந்தனர். வரவேற்புரை நிகழ்த்திய எம்.ஆர். காளிங்கராயர் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்துக்கு காங்கிரஸ் தலைவர்களால் தரப்படும் குடைச்சல்கள் பற்றிப் பேசினார்.

இம்மகாநாடு கூட்டு முயற்சியில் நாம் ஈடுபட்டது முதல் நமது எதிரிகள் நம்மைப் பலவழிகளில் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நம்மைப் பிற்போக்காளர் எனத் தூற்றிவருகிறார்கள். அம்மட்டோ! நாம் தேசத் துரோகிகளாம்! கெட்ட எண்ணத்துடன் இம்மகாநாட்டைக் கூட்டுகிறோமாம்! எனவே, எதிரிகளுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். உங்கள் விஷமப் பிரசாரத்தினால் எவரும் ஏமாந்து போகமாட்டார்கள். எங்கள் சமூகத்துக்கு உழைக்கவே நாங்கள் முன்வந்து இருக்கிறோம்! எங்கள் சமூகப் பற்றினாலேயே மகாநாட்டைக் கூட்டுகிறோம்.

மாநாட்டுத் தலைவர் ராமராய நிங்காரின் பேச்சு விரிவாகவும் விளக்கமாகவும் இருந்தது.

இந்தியர்கள் பேரால் பேசத் தமக்கே உரிமை உண்டெனப் பொக்கம் பேசும் நமது எதிரிகள் நாம் வகுப்புவாதிகள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். பிராமணரே இந்திய ‘நேஷன்’ என்றும் பிராமணர் நலனே இந்தியரின் நலன் என்றும் சாதனை செய்து பழகிப்போன பிராமணர்கள், இந்த மகாநாடு இந்த மாகாண மக்கள் பெரும்பாலானோரின் பிரதிநிதி என்பதை மறந்துவிட்டார்கள். தாமே இந்தியாவின் பிரதிநிதி என அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. அதை மறுக்க முன்வராததினால் நமக்கு ஏற்பட்ட கஷ்டம் அளவிடற்கரியது.

பிராமணர் அல்லாதாராகிய நாம் ஹோம் ரூல் இயக்கத்தை ஏன் எதிர்க்கிறோம்?

இப்போது சுயராஜ்ஜியம் வழங்கப்பட்டால் பிராமணரல்லாதார் நமது பழைய ஆதரவற்ற, அடிமை நிலையை அடையவும் பிரிட்டிஷார் ஸ்தானத்தில் நம்மை அடிமையாக்கிய கூட்டத்தார் அமர்ந்து நம்மை மேலும் நசுக்கவும் நேருமென்று அஞ்சியே நாம் ஹோம் ரூல் கிளர்ச்சியை இப்போது எதிர்க்கிறோம்.

பிரிட்டிஷாரின் உதவியுடன் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் டி.எம். நாயர் பேசினார்.

பிரிட்டிஷாருக்கு உதவி அளிக்க நாம் முன் வந்திருப்பதாலேயே நமது இயக்கம் சர்க்கார் உதவியால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் எனச் சொல்லப்படுகிறது. தென்னிந்திய நலவுரிமைச் சங்க டைரக்டர்களைத் தவிர வேறு யாரும் நம் இயக்கத்தைத் தோற்றுவிக்கவில்லை. நமக்கு எவர் உதவியும் தேவையில்லை. பிறர் உதவியின்றியே நமக்கு இவ்வியக்கத்தைச் செம்மையாக நடத்த ஆற்றலுடைய அறிவாளிகள் நம்மிடையே இருக்கிறார்கள்.

முதல் மாநாடு முடிந்த 20 ஆகஸ்டு 1917 அன்று இங்கிலாந்தின் இந்திய அமைச்சராக இருந்த எட்வின் மாண்டேகு பிரபு லண்டன் நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்தியாவில் பொறுப்பாட்சியைப் படிப்படியாக உருவாக்கும் நோக்கத்துடன் நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இந்தியர்களை அதிகமாகப் பங்கெடுத்துக் கொள்ளச் செய்வதும் சுயாட்சி அமைப்புகளை வளர்ச்சியுறச் செய்வதும்தான் பிரிட்டிஷ் அரசின் கொள்கை.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த முதல் சமிக்ஞை அதுதான். அறிவிப்பின் தொடர்ச்சியாக உத்தேச அரசியல் சீர்திருத்தத்துக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக ஒரு தூதுக் குழுவுடன் இந்தியா வந்தார் எட்வின் மாண்டேகு. இந்தியப் பிரதிநிதிகள் பலரையும் சந்தித்து, கருத்துகளைக் கேட்டறிந்து, நிலைமையை நேரில் கண்டறிய இருப்பதாகவும் அறிவித்தார் மாண்டேகு.

ஸ்பர்டாங்க் பேச்சு

மாண்டேகுவின் அறிவிப்பு தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினரை உத்வேகம் கொள்ளச் செய்தது. பிராமணர் அல்லாத மக்களின் கோரிக்கைகள், உரிமைகள் பற்றித் தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினர். அந்த எண்ணம் 7 அக்டோபர் 1917 அன்று சென்னை ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கப் பொதுக்கூட்டத்தில் எதிரொலித்தது. ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான எம்.சி.ராஜா மற்றும் ஜான் ரத்தினம் இருவரும் ஏற்பாடு செய்த அந்தக் கூட்டத்தில் பேசிய டி.எம். நாயர், என் ஆதி திராவிடத் தோழர்களே! தோழியர்களே என்று தொடங்கினார். அந்த உரையில் இருந்து சில பகுதிகள்:

உங்களை ஆதிதிராவிடர்களென பெருமையோடு விளித்தேன். காரணம்; இந்நாட்டில் இரண்டு இனங்களுண்டு. ஒன்று, இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் இனமான திராவிடர் இனம். மற்றொன்று, நாம் அசட்டையாகத் தூங்கிக் கொண்டு இருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம்.

ஆரிய வஞ்சகன் தன்னுடைய வெண்ணிறத்தைக் காட்டி தன்னை உயர்ந்தவன் என்றும் திராவிடர்களின் கறுப்பு நிறத்தைக் காட்டி அவனிலும் தாழ்ந்தவன் என்றும் கூறினர். கடவுளின் தலையிலிருந்து பிளந்து வந்தவன்தான் பிராமணன் என்றும் கடவுளின் கையில் இருந்து பிளந்து வந்தவன் சத்திரியன் என்றும் கடவுளின் இடுப்பில் இருந்து பிளந்து வந்தவன் வைசியன் என்றும் கடவுளின் காலில் இருந்து பிளந்து வந்தவன் சூத்திரன் என்றும் கூறி, திராவிட அப்பாவிகளை நம்பவைத்தனர்.

கடவுளின் மேற்பகுதி உறுப்புகளில் இருந்து மகப்பேறு பெற்று வெளிவந்த ஆரியர்கள், தங்களுக்கே நாடு, வீடு, தோட்டம், துரவு, காடு, கழனி, பணம், காசு எல்லாம் சொந்தம் என்று ஆக்கிக்கொண்டுவிட்டார்கள். சூத்திரர்களும் பஞ்சமர்களும் கல்வி, சொத்துரிமை போன்றவற்றில் எந்தவொரு உரிமையும் கொண்டாட முடியாது; கொண்டாடக் கூடாது என்று ஆக்கிவிட்டனர்.

இவையெல்லாம் ஒவ்வொருவரின் முன் பிறப்பில் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்பட்டவை என்று ஆரிய தெய்வீகச் சட்டங்கள் கூறுகின்றன. இதற்குத் தலைவிதி என்றும் பெயர் வைத்துவிட்டார்கள். இதையெல்லாம் நம்பி நடப்பவனுக்குத்தான் இறப்புக்குப் பின் மோட்சம் கிடைக்கும் என்றும் நம்பாதவன் இறப்புக்குப் பின் நரகத்தில் சித்திரவதை செய்யப்படுவான் என்றும் சொல்லிவைத்தார்கள். இத்தகைய கடவுள் திட்டத்துக்கு வர்ணாசிரமத் தர்மம் என்று பெயர்.

ஆரியர்கள், திராவிடர்களிலேயே சிலருக்கு மட்டும் சாதி உயர்வுப் பட்டம் அளித்து, மற்றவர்களை வேறுபடுத்தித் தாழ்த்தி வைக்க முற்பட்டனர். திராவிடர்களான நெசவாளர்களை தேவாங்கப் பிராமணர் என்றும் விவசாயிகளை வன்னியகுல சத்திரியர் என்றும் நாயுடு மற்றும் ரெட்டியார்களை கௌரவ சத்திரியர் என்றும் திராவிடக் கோமுட்டிகளை ஆரிய வைசியர் என்றும் நாட்டுக் கோட்டைச் செட்டியார்களை தன வைசியர் என்றும் பொற்கொல்லர்களை விஸ்வகர்ம பிராமணர் என்றும் பலவாறாகப் பெயர்களை சூட்டி, திராவிடர்களின் கோட்டைக்குள்ளேயே குத்து வெட்டு, போட்டா போட்டி, பொறாமை பொச்சரிப்பு போன்ற குழப்பங்களை ஏற்படுத்தினர்.

நசூத்ராய மதிமம் தத்யா என்றொரு ஸ்லோகம் இருக்கிறது. அதன் பொருள் என்னவென்றால், சூத்திரன் படிக்கக்கூடாது என்பதாகும். அப்படியானால் ‘நீ எப்படிப் படித்தாய்?’ என்று கேட்பீர்களேயானால், இந்தச் சண்டாளப் பூனைக் கண்ணன், செம்பட்டை மயிரன் ஆன வெள்ளைக்காரனுடைய யூனியன் ஜாக் கொடி அல்லவா இப்போது நாட்டில் பறக்கிறது. அதன் தயவால்தான் நான் படித்து முன்னேறினேன்.

பரதர்மோ பயாவஹ என்ற ஸ்லோகத்தின் பொருள் அவனவன் சாதித் தொழிலையே அவனவன் செய்யவேண்டும். இல்லாவிட்டால் மரண தண்டனை, நரகம் போன்ற தண்டனைகள்தாம் கிடைக்கும் என்கிறது கீதை. இதுதான் இந்தியாவின் அவலநிலை. இங்கேதான் பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற ஆரிய முதலாளித்துவ வித்து அசைக்கமுடியாத அளவுக்கு ஆழமாக வேரூன்றிச் சென்றிருக்கிறது. இதனை வெட்டி வீழ்த்தி, அதில் கொதிக்கக் கொதிக்க வெந்நீர் ஊற்றி, இந்த வர்ணாசிரமம் என்னும் நச்சுமரத்தை அக்குறுவேறு, ஆணிவேறாகப் பிய்த்து எறிந்து, அழித்து ஒழிக்கவேண்டும்.

நமது பாமர மக்களின் கட்சியான தராசுச் சின்னம் தாங்கும் நீதிக்கட்சி என்ன சொல்கிறது? என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். படிப்பற்ற, வசதியற்ற, அரசை நடத்திச் செல்லும் அரசியல் அதிகாரமற்ற மக்களாக, 100க்கு 85 பேர்களாக உள்ள பாமர மக்களை, முதலில் கல்வி மூலமும், ஏற்றமுள்ள உயர்நிலைகளுக்கு ஆயத்தப்படுத்திவிட்டுப் பின்னர் அவர்கள் கைக்குத் தன்னாட்சி உரிமைகள் வரவேண்டும் என்று வாதாடுகிறது.

ஆனால் இப்போது காங்கிரஸ் பிராமணர்களால் கோரப்படும் தன்னாட்சியானது, நண்டைச் சுட்டு, அதற்கு நரியைக் காவல் வைப்பது போலவும், ஆட்டுக் குட்டியையும் ஓநாயையும் ஒரே பட்டியில் அடைத்துவைப்பது போலவும் ஆன சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்பது எமது கருத்து.

பிட்டி தியாகராயரையும் என்னையும் ஏனையத் தலைவர்களையும் காங்கிரஸின் வஞ்சகப் பார்ப்பனர்கள், தேசத்துரோகிகள், வகுப்புவாதிகள், வெள்ளைக்காரன் வால்பிடிக்கிகள், வெள்ளைக்காரன் பூட்ஸ் காலை நக்கிகள் என்று கண்டபடி பிதற்றித் திரிகிறார்கள்.

வெள்ளையன் பூட்ஸில் என்ன வெல்லப் பாகையா தடவி வைத்துக் கொண்டிருக்கிறான்? அதை நக்கிப் பார்க்க! ராமனின் செருப்பை 14 ஆண்டுகள் சிம்மாசனத்தில் வைத்து, அதற்குப் பாலாபிஷேகம், பழ அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகியவற்றைச் செய்து, அவற்றை நக்கிப் பார்த்து மகிழ்ந்தவர்கள்தாம் இந்தப் பார்ப்பனரின் முன்னோர்கள். அவர்களுக்குத்தான் பூட்ஸ் ருசியும் தெரியுமேயல்லாமல், அபிஷேகத்தில் நம்பிக்கையற்ற என்னைப் போன்றவர்க்கு எப்படி பூட்ஸின் ருசி தெரியவரும்?

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வராமல் நாங்கள் ஓயமாட்டோம்! உட்கார மாட்டோம்! என்ற முழக்கத்தை எல்லோரும் எழுப்பவேண்டும். பழைய திராவிடநாடு மறுபடியும் புத்துயிர் பெறவேண்டும். இதற்கு முதற்கண் பிரசாரம் பெருகவேண்டும். மேலும் மேலும் எங்கும் பரவ வேண்டும். நமக்கு மூன்று செய்தித்தாள்கள் போதா. முந்நூறு செய்தித்தாள்கள் வேண்டும். புற்றீசல் போல அவை கிளம்பவேண்டும்.

திராவிடத் தோழர்களே, எல்லோரும் நீதிக்கட்சியில் சேருங்கள்! நீதிக்கட்சியின் இலட்சியம் வெற்றிப் பெறப் பாடுபடுங்கள். முடிந்தால் வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் போராடுங்கள். வெற்றி நமதே. நன்றி. வணக்கம்.

டி.எம். நாயரின் உரைக்கு ஸ்பர்டேங் பேருரை என்று திராவிட இயக்கத் தலைவர்கள் பெயர் கொடுத்தனர். இன்னமும் அந்த உரை காங்கிரஸ் தலைவர்களால் பலமாக விமரிசிக்கப்பட்டு வருகிறது. அதற்குரிய பதிலடிகளையும் திராவிட இயக்கத் தலைவர்கள் கொடுத்துவருகின்றனர்.

-தொடரும்...

திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்), ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 400 ரூ.

R.Muthukumar's Dravida iyakka varalaaru- Chapter 6

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+