கமல்- ரஜினி நடிக்கும் படத்தின் அப்டேட் வந்தாச்சு! போஸ்டரில் இதை கவனிச்சீங்களா? 45 வருடத்திற்கு பிறகு ரீ- யூனியன்
சென்னை: தமிழ் சினிமாவில் "ஸ்டார்" என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கொடுத்த இரண்டு பேரின் பெயர்கள் - ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். ஆரம்ப காலத்தில் பல படங்களில் இணைந்து நடித்த இந்த இரு ஜாம்பவான்கள், கடந்த 45 ஆண்டுகளாக ஒரே படத்தில் கூட தோன்றாதது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு குறையாக இருந்தது. அந்த நீண்டகால காத்திருப்புக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக உருவாகி வருகிறது.
இந்த பிரம்மாண்டமான திட்டத்தை ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் 17வது தயாரிப்பாக உருவாகும் இப்படம், ஆரம்பத்திலேயே மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. படத்தை இயக்குவது, 'ஜெயிலர்' மூலம் ரஜினிக்கு மாஸ் ஹிட் கொடுத்த நெல்சன் திலீப்குமார் என்பதும் இந்த எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்தியுள்ளது. இசையை அனிருத் அமைக்கிறார்.

12.07 - ஒரு நேரம், ஒரு நினைவு
படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் தங்க வாட்ச் அணிந்த ஒரு கை, மோதிரம் அணிந்த இன்னொரு கை மட்டும் காட்டப்பட்டிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நாளை மதியம் 12.07 மணிக்கு புரோமோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் ரஜினியின் பிறந்த நாள் (12) மற்றும் கமலின் பிறந்த நாள் (7) ஆகியவற்றை குறிக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுவது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக உள்ளது.
விண்டேஜ் லுக்... 80களின் நினைவுகள்
புரோமோவில் இருவரும் 1980களின் பொற்கால லுக்கில் தோன்றுவார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது. அதற்காக அதிநவீன டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. ஆக்ஷன் - நகைச்சுவை கலந்த கமெர்ஷியல் எண்டர்டெய்னராக படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பில் போட்டி... வாழ்க்கையில் நட்பு
ரஜினி - கமல் என்றால் அது வெறும் இரண்டு நடிகர்கள் அல்ல; இரண்டு விதமான நடிப்பு பாணிகள். ஒருவர் ஸ்டைலால் திரையரங்கையே குலுக்குபவர். மற்றொருவர் கேரக்டராகவே மாறி வாழ்பவர்.
இருவரும் ஒரே காலத்தில் வளர்ந்தாலும், ஒருவரை ஒருவர் போட்டியாளராக பார்க்காமல் நண்பராகவே பார்த்தனர். பல மேடைகளில் கமல் "ரஜினி என் சகோதரன்" என்று கூறியிருக்கிறார்; அதேபோல் ரஜினியும் கமலை "சிறந்த நடிகர்" என்று பாராட்டியிருக்கிறார். அந்த பரஸ்பர மரியாதையே இந்த கூட்டணியை ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பாக மாற்றுகிறது.
இருவரும் பிஸி
ரஜினி தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பிறகு அவர் நடிக்கும் மற்றொரு படத்தையும் முடித்துவிட்டு இந்த கூட்டணியில் இணையவுள்ளார். மற்றொரு புறம், மாநிலங்களவை எம்பியாக அரசியலிலும் பிஸியாக இருக்கும் கமல், தன்னுடைய அடுத்த படத்தை முடித்த பின்னரே இந்த படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.
திரையரங்குகள் திருவிழா பார்க்கும் நாள்
இரண்டு தலைமுறைகளையும் தாண்டி ரசிகர்கள் கொண்டாடும் இரண்டு பேரும் ஒரே திரையில் வருவது சாதாரண சம்பவம் அல்ல. இது ஒரு படம் மட்டுமல்ல - தமிழ் சினிமாவின் வரலாற்று தருணம்.
புரோமோ வெளியாகும் நேரத்தை காத்திருக்கும் ரசிகர்கள் மனதில் ஒரே கேள்வி.. "இந்த ரியல் OG கூட்டணி திரையரங்கில் என்ன மாயம் செய்யப் போகிறது?" இந்த படம் வெளிவரும் நாள், நிச்சயம் ஒரு சினிமா திருவிழாவாக மாறும் என்பதில் ரசிகர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications