For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச செவிப்புலனற்றோர் தினம்

By புன்னியாமீன்
Google Oneindia Tamil News

செப்டம்பர் மாதம் 26ம் தேதி சர்வதேச செவிப்புலனற்றோர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. செவிப்புலனற்றோர் மீது கருணை காட்டுவதன் ஊடாக அவர்களுக்கு வேண்டிய சில நிவாரண ஏற்பாடுகளை செய்வதற்காக வேண்டியும் அவர்கள் மீது நம்பிக்கைகளை உருவாக்குவதற்காக வேண்டியும் இத்தினத்தை நலன் புரி அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

செவி அல்லது காது என்பது ஒலியை உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பு ஆகும். மனித இனத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாகவே பேச்சு உள்ளது. இந்தப் பேச்சினை செவிமடுப்பதன் ஊடாகவே கருத்துப் பரிமாற்றம் முழுமையடைகின்றது. எனவே ஒலியை உணரக்கூடிய திறனே கேட்டல் எனப்படுகிறது. செவிப்புலனில் செயல்பாடு குறைதல் அல்லது செவிப்புலனில் செயல்பாடு அற்றுப் போதல் காரணமாகவே கேட்பதில் குறைபாடு ஏற்பட்டு செவிட்டு நிலைமை உருவாகின்றது.

மீன் தொடக்கம் மனிதர் வரை முள்ளந்தண்டுளிகளின் செவிகள் பொதுவான உயிரியல் தன்மையைக் கொண்டுள்ளன. எனினும் வேறு சிற்றினங்களைப் பொறுத்த மட்டில் அமைப்பில் வேறுபாடுகள் உள்ளன. செவி ஒலிகளைப் பெற்று உணர்வது மட்டுமன்றி, உடல் சமநிலை உணர்வு தொடர்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. செவி கேள்வித் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

எம்மால் பிறரது உரையாடலினை கேட்க இயலாது போகும் சந்தர்ப்பத்தில் நாம் அவர்களுக்கான பதிலினை உரிய முறையில் கொடுக்க இயலாது போகின்றது. எமது உணர்வுகளை வெளியிட முடியாத நிலை தோன்றுகின்றது.

எமது அங்கங்களில் ஒன்றான காதின் அமைப்பினை எடுத்து நோக்குவோமாயின் வெளிக்காது, நடுக்காது, உட்காது என்று மூன்று வகையான அமைப்புகள் காணப்படுகின்றன.

இவைகளில் வெளிக்காதில் காதுச் சோணையும், புறச்செவிக் கால்வாயும், காணப்படும். அதில் புறக் காதுச் சோணை வாயிலாக வெளியிலிருந்து ஒலி அலைகளானது எமது புறக்காதின் கால்வாயினை நோக்கிச் செலுத்தப்படும். பெரும்பாலான விலங்குகளில் வெளியில் தெரியும் செவியின் பகுதி கசியிழையங்களினாலான மடல் ஆகும். இது புறச்செவி அல்லது செவிமடல் எனவும் அழைக்கப்படும். புறச்செவி மட்டுமே வெளியில் தெரியும் செவியாக இருப்பினும், இது கேட்டல் என்னும் செயற்பாட்டின் பல படிகளில் முதல் படியோடு மட்டுமே தொடர்புபட்டது. முதுகெலும்புளிகளில் தலையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு செவிகள் இருக்கும். இவ்வமைப்பு ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்கு உதவுகிறது.

நடுக்காதானது செவிப்பறை மென்சவ்வு எனும் மிக மெல்லிய சவ்வு ஒன்றைக் கொண்டுள்ளது. புறச்செவிக் கால்வாயினூடாக வருகின்ற ஒலியினால் இம்மென்சவ்வு அதிர்ந்து உட்காதுக்குள் ஒலியை ஊடுகடத்துகின்றது. உட்காதில் ஊத்தேக்கியோவின் குழாய் எனும் அமைப்பு தொண்டையுடன் தொடர்புள்ளது. இதனால் காதினுள் நிலவும் அமுக்கமும் வெளி வளிமண்டல அமுக்கமும் ஒரேயளவில் பேணப்படுகிறது. எனவே உட்காதானது சமநிலையைப்பேணுவதில் பங்களிப்புச் செய்கின்றது. உட்காதுக்குள் வரும் ஒலியானது மூளையினை நோக்கி கணத்தாக்கங்கள் ஊடாக கடத்தப்படும். இது ஒலிவாங்கிகளால் தூண்டப்பட்டு தகவல்கள் மூளையத்தினது ஒலி உணர் பிரதேசத்தினை அடைகின்றது. கணத்தாக்கத்தின் காரணமாகவே நாம் தகவல்களை உணர்கின்றோம். ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது "அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயணித்தல்" (Olson 1957) எனும் பல கருத்துகளைத் தருகின்றது.

செவிப்புலனற்றவர்களை நாம் இருவகையானவர்களாக நோக்கலாம் இயற்கையில் தமது பிறப்பின் போது தமது செவிப்புலனை பறிகொடுத்தவர்கள். இவர்களின் நிலைக்கு பலவாறான காரணங்கள் கூறப்படுகின்றன. வைத்தியத் துறையினரின் கண்டு பிடிப்பின் படி ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தின் போது, அவளுக்கு ஏற்படும் அதிர்ச்சியான சம்பவங்களினைக் கேட்டல் அல்லது பார்த்தல், இயற்கை அல்லது செயற்கை அழிவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடல், போஷாக்கான உணவுப்பழக்கமின்மை, பரம்பரை அலகு போன்றவற்றில் ஏற்படுகின்ற தாக்கத்தின் விளைவாக அவர்களது உடலில் சுரக்கும் ஒமோன்கள் வளர்ந்து வருகின்ற நுகத்தை பாதிப்படையச் செய்வதன் காரணத்தினால் இவ்வாறு ஏற்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

இயற்கையாக தமது பிறப்பின் போதே செவிப்புலனை அற்றவர்களை விடுத்து மற்றுமொரு பகுதியினர் எம்மில் இன்று காணப்படுகின்றனர். அதாவது தமது சிறுவயதில் ஏற்படுகின்ற அனர்த்தம் ஒன்றின் விளைவாக தமது கேட்கும் சக்தியினை இழந்தவர்கள் அல்லது ஒரு விபத்தின் காரணத்தினால் தமது செவிப்பறைகளில் பாதிக்கப் பட்டவர்களே அவர்கள்.

உண்மையில் முதலாவது பகுதியினரை விட இந்த இரண்டாவது பகுதியினர் அதிகளவாக பாதிப்படைவதாக குறிப்பிடப்படுகின்றது அதாவது இயற்கையாக தமது பிறப்பின் போது செவிப்புலனற்றவர்களாக காணப்படுபவர்கள் தமது இயலாமையினை தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டவர்களாகவும் மனதளவில் தைரியமிக்கவர்களாகவும் இயற்கையோடு எதிர்த்துப் போராடக் கூடியவர்களாகவும் காணப்படுவர்.

ஆனால் ஏற்பட்ட விபத்தொன்றின் காரணமாக இவ்வாறான நிலைக்குள்ளானவர்கள் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவும் தமது பிழையான நடவடிக்கையின் விளைவாகத்தான் இவ்வாறான சம்பவம் தனக்கு ஏற்பட்டது என்ற மனோநிலையினையும் கொண்டவர்களாக பெரும்பாலும் இருப்பர்.

மேலும் செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்பட காரணங்களாக பின் வருவனவற்றையும் குறிப்பிடலாம்.
இயற்கை நிலையில் முதிர்வயதாகும் போது செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்படுகின்றது. இவை தவிர சில சந்தர்ப்பங்களில் சத்தம் நிறைந்த வேலை இடங்களில் வேலை செய்பவர்களுக்கும், காதுகளில் சுரக்கும் மெழுகுபோன்ற பொருள் அடைப்பதினாலும், காதுகளில் ஏற்படும் நீண்ட நாள் நோய்தொற்றுக்களினாலும், காது உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களினாலும், டிம்பானிக் மெம்பரேன் எனப்படும் காது சவ்வில் ஏற்படும் துவாரம், காது மற்றும் காது எலும்புகளில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் காரணமாகவும் செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்படுகின்றது.

இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும்போது தோன்றும் சில அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். சிறு பிள்ளைகளாயின் சத்தத்திற்கு அசைவோ அல்லது மறு உத்தரவோ அளிக்காதிருத்தல், மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளாமலிருத்தல், மற்றவர்கள் பேசும்போது உரக்க பேசுங்கள் என்று கேட்பது போன்றன சிலவாகும்.

இத்தகையோர் பின்வரும் விடயங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக சத்தமுள்ள இடங்களிலிருந்து விலகியிருத்தல், காது கேளாமையின் காரணங்களை பரிசோதித்தறிய மருத்துவரை அணுகுதல். மருத்துவரின் ஆலோசனையுடன் காதுகேட்கும் திறனை அதிகரிக்கும் கருவிகளைப் பயன்படுத்துதல்.

நவீன இக்காலத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை பொதுவாக உலகளாவிய ரீதியில் வெகுவாக அதிகரித்து வருகின்றது. ''கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, கையடக்கத் தொலை பேசியினால் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.

காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம். ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், கையடக்கத் தொலைபேசி உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே கையடக்கத் தொலை பேசி வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத்தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. கையடக்கத் தொலை பேசியில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

தவிர, கையடக்கத் தொலை பேசியில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் கையடக்கத் தொலைபேசியை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல கையடக்கத் தொலைபேசியில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். எனவே கையடக்கத் தொலை பேசிப்பாவனையாளர்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

செவிப்புலனற்றவர்களினால் சில போது பேச இயலாதும் போய் விடுகிறது. எனவே நமது நடவடிக்கையின் காரணமாக அவர்களை நோகடித்து விடாது அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு, நம்மில் ஓர் அங்கமாக நாம் அவர்களை கருத வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நமது குடும்ப உறுப்பினர்களில் இவ்வாறானவர்கள் காணப்படுவார்களேயானால் அவர்களை தனிமைப்படுத்தி விடாது, ஒதுக்கி விடாது நடத்துவது மிக மிக அவசியம்.

இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது பிறவியிலேயே காது கேளாத பலருக்கு சத்திர சிகிச்சையின் ஊடாக கேட்கும் சக்தியினை வழங்கியிருப்பதனை அறிகின்றோம். இவ்வாறான சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதில் முன்னணி வகிக்கும் நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. அதேபோல இந்தியாவிலும் இன்று இதன் வளர்ச்சி காணப்படுகின்றது. ஆனால் இச்சத்திர சிகிச்சை நிபுணர்கள் பலவாறான கஷ்டங்களுக்கு மத்தியில் எதிர் நீச்சல் போட்டுத்தான் இதனை செய்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதாவது இவர்கள் போதியளவான செவிமாற்று உறுப்புகளினை பெறுவதில் சிரமங்கள் காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

ஆனால் எதிர்காலத்தில் இன்று காணப்படுவது போன்ற சிரமங்கள் காணப்படாதிருப்பதற்காக மனிதனது கலத்தினை (Human cells) வைத்து மனித உறுப்புக்களை உருவாக்குவதற்கான முயற்சியில் இன்றைய விஞ்ஞானமானது இறங்கியிருப்பதாகவும் நாளைய உலகில் அதன் வெற்றியின் விளைவாக இதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X