For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்தபின் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது மேல்

By Siva
Google Oneindia Tamil News

Tsunami
–புன்னியாமீன்

2012ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே பாண்டா அசே பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்தியாவின் பல பகுதிகளிலும், இலங்கையிலும், தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளி்லும் உணரப்பட்டது. இந்திய நேரப்படி பகல் 2 மணியளவில் இந்தியப் பெருங்கடலில் பூமிக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.7 புள்ளிகளாகப் பதிவாகியது. இதையடுத்து அந்தமன் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 2 முறை அதிக சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டுக்கும் மேலும் 27 நாடுகளுக்கும் முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டு, பின்னர் மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டது. இறுதியாக மாலை நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

உலகளாவிய ரீதியில் காலத்துக்கு காலம் ஏதோவொரு வகையில் மனிதகுலத்துக்கு பேரழிவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்பேரழிவுகளை பல கோணங்களில் இனங்காட்டலாம். மனிதனால் மனிதனுக்கு செய்யப்படும் செயற்பாடுகள். குறிப்பாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய அழிவுகள். யுத்த அழிவுகளை இங்கு கோடிட்டுக் காட்டலாம். மனிதனால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு உட்பட நவீன ரககுண்டுகள் நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொள்ளத்தக்கவை. செயற்கை காரணிகளைத் தவிர இயற்கைக் காரணிகளாலும் உலகளாவிய ரீதியில் பேரழிவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

வரலாற்றுக்காலம் முதல் இயற்கைக் காரணிகள் ஏற்படுத்திய அழிவுகள் குறிப்பிடப்பட்டாலும் கூட, நவீன காலத்தில் உலகளாவிய ரீதியிலான சனப்பெருக்கமானது இத்தகைய இயற்கை அழிவுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை உடனடியாக காவு கொள்வதினால் அவற்றின் விளைவுகள் முந்தைய காலங்களைவிட இக்காலத்தில் விசாலமாகத் தென்படுகின்றது.

இயற்கை அழிவுகள் எனும்போது மனிதனின் சக்திக்கப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள், சூறாவளிகள், நில அதிர்வுகள், எரிமலை வெடிப்புக்கள், கடும் மழை, வெள்ளம், கடும் வரட்சி என்று இயற்கை அழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கைக் காரணிகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அல்லது பல பிரதேசங்களை அல்லது பல நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கக் கூடியதாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் இயற்கை அழிவினை எம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்றாலும்கூட, இயற்கை அழிவுகளிலிருந்து ஓரளவேனும் பாதுகாப்பினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தும் அது குறித்த நடவடிக்கைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் காலத்தின் தேவையாகும்.

இயற்கைப் பேரழிவுகளை எடுத்துநோக்கும்போது அண்மைக்காலங்களில் நாம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இயற்கை நிகழ்வாக சுனாமிப் பேரலைத் தாக்கம் அமைந்திருந்ததை அவதானிக்கலாம். சுனாமி பற்றி சிறு விளக்கமொன்றினை இவ்விடத்தில் பெற்றுக் கொள்வது பொறுத்தமானதாக இருக்கலாம். ஜப்பானிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. ‘ட்சு’ சுனாமி. ‘ட்சு” என்றால் துறைமுகம், ‘னாமி” என்றால் பேரலை என்று பொருள். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும் வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும்போது அது வேறொரு வகையில் தாக்கத்திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மைக்கால சுனாமி பேரலைகளை நோக்குமிடத்து கடலில் ஏற்பட்ட பூகம்பங்களே காரணமாக அமைந்திருந்தன. பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் ஏற்பட்டால் நிலப்பரப்பில் உள்ளவை அதிர்ந்து சேதமாகின்றது. கடலில் ஏற்பட்டால் கடலின் ஆழ்பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வு சிலநேரங்களில் சுனாமிப் பேரலைகளைத் தோற்றுவிக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்படையில் தான் புவியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இயற்கையில் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்கள் காரணமாக புவி கண்டங்களாக பிரியப் பிரிய, அதன் தட்ப வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலப்படைகள் உருவாயின. இந்த நிலப்படைகள் மீது தான் ஒவ்வொரு கண்டமும் அமைந்துள்ளன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலப்படைகள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமா சமுத்திரத்தில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளதாக புவியியல் ஆதாரங்கள் மூலமாக அறிய முடிகின்றது. அதேநேரம், சுனாமி பேரலைகள் ஏற்பட பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. கடலாழத்தில் ஏற்படும் எத்தகைய பாதிப்புக்களின்போதும், கடலாழ பூகம்பம் தோன்றும்போதும், கடலை ஒட்டிய நிலப்பகுதியில் பூகம்பம் தோன்றும்போதும், மலையில் எரிமலைகள் தோன்றும்போதும், வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும், (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) கடலில் பௌதீக மாற்றங்கள் ஏற்படும் போதும், விண்ணிலிருந்து கற்கள் போன்ற கனமான பொருட்கள் கடலில் விழும் போதும், கடலில் காணப்படும் பனிப் பாறைகள் உருகுவதால் நீர்மட்டத்தின் அளவு வேறுபடும் போதும், தகுந்த கரையோரப் பாதுகாப்பு அரண்கள் இல்லாமையால் ஏற்படும் பாரிய கடலரிப்புகளின் போதும் சுனாமிப் பேரலைகள் ஏற்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இயற்கைக் காரணங்களைத் தவிர தற்காலத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகளாலும் கடலில் நடத்தப்படும் அணுவாயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம்.

கி.மு. 365ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தற்போதைய கண்டுபிடிப்புகளுக்குட்பட்ட வகையில் முதல் சுனாமி என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமீப கால நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், முதன்முதலில் 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்த்துக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 1883ம் ஆண்டளவில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறாக ஜப்பான் பகுதியிலும் அடிக்கடி சுனாமித் தாக்குதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. 1964ம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது.

21ம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் இயற்கை அனர்த்தங்களுள் 2004 டிசம்பர் 26ம் தேதி சுனாமியே இதுவரை பதிவாகியுள்ளது. இச்சுனாமி இலங்கை வரலாற்றிலும் பாரிய அழிவை ஏற்படுத்திய ஒன்றாக திகழ்கின்றது. 2004 டிசம்பர் 26ம் தேதி முழு உலகையும் துன்பத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரலை இலங்கை உட்பட இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்கள் இச்சுனாமியின் கொடூர அழிவுகளைச் சந்தித்தன. உயிர் அழிவுகளுடன் பல வருடங்களாகத் தேடிய தேட்டங்களும் சில நொடிகளில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போயின.

இச்சுனாமி இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். உயிர்ச்சேதங்கள், பொருட் சேதங்கள், உட்கட்டமைப்புச் சேதங்கள், வாழ்வாதாரத் தொழிற்சேதங்கள். இச்சேதங்கள் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமே உரியன.

இலங்கையில் மாத்திரம் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 30, 977 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5, 644 பேர் காணாமற் போயுள்ளனர். 15,197 பேர் உடல் ஊனமுற்றோ அல்லது குறிப்பிடத்தக்க பாதிப்புக்கோ உள்ளாகியுள்ளனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இது குறைவாக இருந்த போதும் சின்னஞ்சிறு நாடான எமக்கு இது பேரழிவாகவே உள்ளது. இச்சுனாமியில் மாத்திரம் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் உயிர்களுக்கு மேல் காவுகொள்ளப்பட்டுள்ளன.

உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 78, 387 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 60, 197 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இவ்வீடுகளுடன் சேர்ந்து மக்களின் பரம்பரைச் சொத்துக்கள் பலவும் அழிந்து போயின. வாழ்நாள் முழுவதும் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் சிலமணி நேரத்தில் இழந்த இம்மக்கள் கரையோர மாவட்டங்கள் பலவற்றிலும் உட்கட்டமைப்புக்களில் பெரும்பாலானவற்றைச் சுனாமி அழித்தொழித்தது. அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, காலி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்கள் அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. 161 பாடசாலைகள் முற்றாகவும் 59 பாடசாலைகள் பகுதியளவிலும் நாடு முழுவதிலும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விட வணக்கஸ்தலங்கள், வைத்தியசாலைகள், மக்கள் மண்டபங்கள், பொதுச் சந்தைகள் போன்ற பல சொத்துக்களும் முற்றாகவும் பகுதிகளாகவும் அழிந்து போயின. மின்சாரம், தொலைபேசி, குடிநீர் போன்றவற்றின் இணைப்புக்கள் முற்றாக சீர்குலைந்தன. வீதிகள், பாலங்கள் பலவும் போக்குவரத்திற்கு உதவாதவாறு சேதமடைந்தன.

மக்களின் வாழ்வாதாரங்கள் பலவும் சுனாமியினால் அழித்தொழிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் வேளாண்மை உட்பட அனைத்துப் பயிர்களையும் கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் சுனாமி அழித்துச் சென்றது. சிறு முதலீடுகள் மட்டுமின்றி பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்த வர்த்தகர்கள் அனைவரும் நிர்க்கதிக்குள்ளாயினர்.

ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்ற இச்சுனாமியினால் ஆண்டாண்டு காலம் தங்கள் இருப்பிடங்களில் வசித்த 154, 963 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதைவிட 235, 145 குடும்பங்கள் முற்றாகப் பாதிப்புக்குள்ளாயின. வரலாற்றில் முன்னொரு போதும் கண்டிராத இப்பேரழிவைக் கண்ட இலங்கை அரசு சந்தித்தது.

சுனாமி என்றால் ஜப்பான் தான் என்ற நிலை மாறி 2004ம் ஆண்டு சுனாமியை உலகளாவிய நாடுகளுக்கே ஒரு எச்சரிக்கையை விடுத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகமும் சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்கியபோதிலும்கூட, இழப்புகளை ஈடுசெய்ய முடியாது. சுனாமி கற்றுத் தந்த பாடம் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து எவ்வாறு எம்மைக் காக்கலாம் என்ற உணர்வினை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.

சுனாமி அறிவித்தல் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நோக்குவோம். அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசுபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் 20வது நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் என்பது தான். அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப்பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலேண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வடார், எல்சால்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேசியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இம்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே அறிய முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள் கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பி வைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால் சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துதான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம் சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆபிரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். அண்மைக் காலங்களாக அடிக்கடி சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதனால் மக்கள் சோர்வடைந்துள்ளதை காண முடிகின்றது. கருவிகள் பொருத்துவது மாத்திரமல்ல. அவற்றின் செயல்பாட்டின் நிலை பற்றிய உணர்வுகளை மக்கள் மனங்களில் பதிக்க வேண்டியதும் ஒரு முக்கியமான தேவையாகும்.

English summary
Tsunami once associated with Japan alone is quite common in other nations now. Be safe than sorry is apt for tsunami. So, world nations should take preventive measures to save the lives and properties of the people from the giant waves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X