For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவிட்சர்லாந்து பக்கமா திரும்பி நின்னா தங்கம் விலை குறையுமா?

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

தங்கத்தின் விலை தடாலென விழுந்துள்ளது. இதற்கான காரணங்களை ஒரு மெகா சீரியல் அளவுக்கு எழுதலாம். இந்தக் காரணங்களை சுருக்கிச் சொல்ல வேண்டுமானால்.

1. டாலரின் மதிப்பு ஸ்திரமடைந்தது. அதனால் என்ன?. இதனால், டாலர் பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அதாவது அமெரிக்க அரசின் பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. தங்கத்தில் போட்ட காசை எடுத்து டாலர் பங்குகளில் போட ஆரம்பித்துள்ளனர் பெரும் முதலீட்டாளர்கள்

Gold

2. கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து வருவது. So what?. இதனால் கச்சா எண்ணெய் நிறுவன பங்குகளின் மதிப்பு சரிந்து வருகிறது. இதன் காரணமாக இந்தப் பங்குகளில் இருந்த முதலீட்டையும் எடுத்து டாலர்களில் போட ஆரம்பித்துள்ளனர். இதனால் டாலர் மேலும் ஸ்திரமான நிலையை அடைய, தங்கத்துக்கு அடி.

3. இதுவும் கச்சா எண்ணெய் தான். பெட்ரோலியத்தின் விலை சரிந்து வருவதை தடுத்து நிறுத்த அதன் உற்பத்தியைக் குறைக்கலாம் என்ற சில வளைகுடா நாடுகளின் யோசனையை எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பான (Organisation of the Petroleum Exporting Countries) OPEC நிராகரித்துவிட்டது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் உள்குத்தும் உண்டு. இதனால் கச்சா எண்ணெய்யை தோண்டித் தோண்டு எடுத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் (இந்த இடத்தில் 2வது காரணத்தை மீண்டும் படிக்கவும்) டாலருக்கு கொண்டாட்டம், தங்கத்துக்குத் திண்டாட்டம்.

4. சீனா தனது நாட்டில் தங்க முதலீடுகள், தங்க இறக்குமதியில் நடந்து வரும் ஊழல்களைத் தடுக்க திடீரென கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் தங்கத்தில் முதலீடு செய்யும் மெகா நிறுவனங்கள் ஜகா வாங்க ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக சீனாவில் தங்கம் விற்பனை 20 சதவீதம் அடி வாங்கியுள்ளது. உலகில் தங்கத்தை மிக அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றான சீனாவின் இந்த நடவடிக்கையால் தங்கத்துக்கு டிமாண்ட் குறைந்து போய், விலை சரிந்துள்ளது.

5. இதற்கிடையே இந்தியாவின் தங்க இறக்குமதியால் கையில் இருக்கும் டாலர்கள் எல்லாம் கரைந்து வந்ததால், இதைத் தடுக்க 80:20 என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி இறக்குமதி செய்யும் தங்கத்தில் 20 சதவீத தங்கத்தை நகைகளாக ஏற்றுமதி செய்து நாட்டுக்கு டாலர்களை சம்பாதித்துத் தர வேண்டும். ஆனால், போதுமான அளவுக்கு வெளிநாடுகளுக்கு தங்க நகைகளை நம்மவர்களால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதனால், முறையாக இறக்குமதி செய்தால் தான் இந்த 80:20 கதையெல்லாம், பேசாமல் கடத்தி வந்துவிட்டால் என யோசித்த இறக்குமதியாளர்கள் அந்த வேலையில் இறங்க இந்த 80:20 திட்டமே வேஸ்டாகிவிட்டது. இதை லேட்டாக உணர்ந்த மத்திய அரசு கடந்த வாரம் இந்தத் திட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டது. தங்கம் இறக்குமதிக்கு இருந்த சிக்கல் விலக்கியதால் இறக்குமதி திடீரென அதிகரித்து விலையும் சரிந்துவிட்டது.

இப்படி தொடர்ந்து விலை சரிந்து வந்ததால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தங்க நகை இறக்குமதியாளர்கள், நகைக்கடைக்காரர்களும் சுவிட்சர்லாந்து பக்கமாய் திரும்பி நின்று சாமி கும்பிட்டனர். எதுக்கு?

6. சுவிட்சர்லாந்தின் ரிசர்வ் வங்கி தான் Swiss National Bank. இந்த வங்கி தனது மொத்த பண கையிருப்பில் 8 சதவீதத்தை தங்கமாக வைத்திருப்பது வழக்கம். இதை 20 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது. ஆனால், நம் ஊர் மாதிரி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து அங்கு முடிவை எடுத்து திணிப்பதில்லை. மக்களிடம் கருத்து கேட்பார்கள். அப்படி இந்த விஷயத்திலும் ஞாயிற்றுக்கிழமை தேசிய அளவில் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது.

மக்கள், ''எதுக்கு இந்த கொலைவெறி'' என்று திருப்பிக் கேட்டதோடு, 8 சதவீதம் மட்டும் தங்கமாக இருந்தால் போதும் என்று கூறிவிட்டனர். இதனால் பல லட்சம் கோடிகளுக்கு தங்கத்தை வாங்கும் அந்த வங்கியின் திட்டம் பணால் ஆகிவிட்டது. இதனால் உடனடியாக உலகளவில் தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டது.

தங்கத்தையே 20 சதவீதம் அளவுக்கு ரிசர்வ் ஆக வாங்கி வைக்கலாம் என்று சுவிஸ் மக்கள் வாக்களித்திருந்தால் அந் நாட்டு கரன்சியான Swiss franc-ன் மதிப்பு சரிந்திருக்கும். இதை அந்த மக்கள் விரும்பவில்லை. இதனால் தான் அதை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

இந் நிலையில் தடாலடியாக தங்கம் இறக்குமதி அதிகரித்து கையில் உள்ள டாலர்கள் கரைந்து வருவதால் கவலையடைந்துள்ள ரிசர்வ் வங்கி, விரைவிலேயே தங்கம் இறக்குமதிக்கு ஏதோ புதிதாக கோட்டா சிஸ்டம் கொண்டு வரப் போவதாக சொல்கிறார்கள்..

இது போதாதா.. தங்கத்தின் விலையை செயற்கையாக மீண்டும் ஏற்றிவிட?

Bearish oil prices and rise of US dollar rates heavily affected gold prices, following stability in the range of USD 1,200 per ounce, in the past weeks. OPEC's fresh decision to abstain from slashing oil output to try push the crude prices up resulted in heavier pressure by the greenback on the gold prices, contrary to forecasts that the yellow metal price would reached up to 1,240 per ounce. The yellow metal, now, appears less lucrative for investors, as compared to the USD and major European currencies.

English summary
Bearish oil prices and rise of US dollar rates heavily affected gold prices, following stability in the range of USD 1,200 per ounce, in the past weeks. OPEC's fresh decision to abstain from slashing oil output to try push the crude prices up resulted in heavier pressure by the greenback on the gold prices, contrary to forecasts that the yellow metal price would reached up to 1,240 per ounce. The yellow metal, now, appears less lucrative for investors, as compared to the USD and major European currencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X