மகளின் படிப்பு செலவுக்காக வெறும் காலுடன் ஓடி மாரத்தானில் முதல் இடம் பிடித்த தாய்
மும்பை: தாயை விட உயர்ந்த சக்தி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்பது தான் கேஜிஎப் படங்களின் ஒற்றை லைன். தாயின் ஆசைக்காக மகன் இந்தியாவின் பெரும்பாலான தங்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவான். இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒரு தாய், தனது மகளை படிக்க வைக்க வெறும் காலுடன் மாரத்தானில் ஓடி முதல் இடம் பிடித்து பரிசை பெற்றுள்ளார். அந்த பரிசில் மகளுக்கு கல்வி கட்டணம் கட்டியுள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு தாய், தன் பிள்ளையை காப்பாற்றவும், அந்த குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் தன் வாழ்க்கையை மட்டுமல்ல உயிரை கூட பொருட்டாக நினைக்க மாட்டாள் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர் நேரில் பார்த்திருப்பீர்கள். ஆனால் சில சம்பவங்களை கேள்விப்படும் போது, உங்களை அறியாமல் கண்ணீரே வரும். அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்ப்போம்.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை பகுதியை சேர்ந்த 47 வயதாகும் ரமா பாய் வசித்து வருகிறார். இவர் இளம் வயதிலேயே கணவரை இழந்தார். குடும்பம் வறுமையில் சிக்கிய நிலையில், வீட களில் சமையல் வேலை செய்து தனி ஆளாக 2 பெண் பிள்ளைகளை வளர்த்து , படிக்க வைத்து வருகிறார். இதில் ஒருவர் போலீஸ் வேலைக்கு சேர பேகிறார்.. மற்றொரு மகள் பி.எஸ்.சி. படித்து வருகிறார். இந்தநிலையில் மகளின் படிப்பு செலவுக்கு பணம் தேவைப்பட்டிருக்கிறது. பல வழிகளில் முயன்றும் ரமாபாயால் பணம் திரட்ட முடியவில்லை.
அப்போது தான் வீட்டருகில் உள்ள கல்வி நிறுவனத்தில் மாரத்தான் போட்டி நடப்பதை கேள்விப்பட்டார். அதில் வெற்றி பெற்றால் பணப்பரிசு கிடைக்கும் என்பதும் ரமாபாயிக்கு தெரியவந்தது. எனவே அவர் மகளின் கல்விக்காக போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
போட்டி நடக்கும் நாளில் நடந்த சம்பவங்கள் எல்லாம் போட்டியை நடத்துபவர்களுக்கே ஆச்சரியமானதாக இருந்தது. மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காக தடகள வீரர்களும், இளைஞர்களும் விளையாட்டு சீருடைகள் மற்றும் 'ஷூக்களை அணிந்து கொண்டு தயாராக வந்து நின்றார்கள். ஆனால் அங்கு போட்டி நடக்கும் இடத்திற்கு தனது வழக்கமான வெளுத்துப்போன பழைய சேலையை அணிந்து கொண்டு ரமாபாய் நடந்து வந்தார். அவர் தனது பிள்ளகளை விட வந்து இருப்பார் என அனைவரும் நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் போட்டியாளர்களுடன் களத்தில் நின்றார்.
அப்போது தான், அவர் பிள்ளையை விட வரவில்லை, பிள்ளையின் கல்வி செலவுக்காக போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளார் என்பது அங்கிருப்பவர்களுக்கு தெரியவந்தது. போட்டி தொடங்கியவுடன் அனைவரும் வேகமாக ஓடினர். ஆனால் ரமாபாய் நிதானமாக இலக்கை நோக்கி முன்னேறி ஓடினார். பாதி வழியில் அவர் காலில் அணிந்து இருந்த ரப்பர் செருப்பு அறுந்து விழுந்துவிட்டது. எனினும் போட்டியில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற அவரது வேட்கை தணிய வில்லை.
செருப்புகளை, வெற்றி கோப்பை போல கையில் பிடித்தபடி வேகமாக ஓடினார். சேலை அணிந்து, செருப்பு கூட அணியாமல் கரடுமுரடான சாலையில் தனது பிள்ளைக்காக ஓடினார். அங்கு இருந்தவர்கள் எல்லாருமே நெகிழ்ந்து போனார்கள். பந்தய இலக்கை கடந்து ரமாபாய் முதலிடம் பிடித்து அசத்தினார். அவருக்கு சான்றிதழ், ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
அவர் பரிசு பெற்றபோது சுற்றி யிருந்த அனைவரும் அவருக்காக உற்சாக குரல் எழுப்பினார்கள. ஆனால் அவர் எந்தவித உற்சாகமும் இன்றி அமைதியாக வாங்கி கொண்டு சென்றார். தனது குடும்பத்தை காக்க ராமாபாயின் தினசரி ஓட்டம் உண்மையில் மாரத்தானைவிட பெரியது.. அவ்வளவு வறுமையில் வைராக்கியத்தை மனதில் வைத்து வென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதனிடையே மகளின் கல்விக்காக வெறும் காலுடன் ராமாபாய் மாரத்தானில் ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அவருக்கு உதவி செய்யவும் பலர் முன்வந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
